இடைத்தேர்தல் அலசல்! | 3 மக்களவை, 7 பேரவைத் தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகள் குறித்த தலையங்கம்

இடைத்தேர்தல் அலசல்! | 3 மக்களவை, 7 பேரவைத் தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகள் குறித்த தலையங்கம்

இடைத்தேர்தல் முடிவுகள் பெரும்பாலும் பெரிய அரசியல் தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. மத்திய - மாநில அரசுகளின் ஸ்திரத்தன்மை அந்த முடிவுகளால் பாதிக்கப்படுவதில்லை என்பதுதான் அதற்குக் காரணம். ஆளுங்கட்சிக்கு சூழல் சாதகமாக இருக்கும் என்பதால், வாக்காளர்களும் இடைத்தேர்தல்களுக்கு முக்கியத்துவம் தருவதில்லை. பெரும்பாலும் வாக்குப்பதிவும் குறைவாகவே காணப்படுவது வழக்கம். சில முக்கியமான இடைத்தேர்தல்கள் மட்டுமே, இதற்கு விதிவிலக்காக அமையும்.
இரண்டு மாநிலங்களில் உள்ள மூன்று மக்களவைத் தொகுதிகளுக்கும், நான்கு மாநிலங்களில் உள்ள ஏழு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் சமீபத்தில் நடந்து முடிந்த இடைத்தேர்தல் முடிவுகளையும் அதே கண்ணோட்டத்துடன்தான் பார்க்கத் தோன்றுகிறது. தேர்தல் முடிவுகள் அந்தந்த மாநிலங்களில் உள்ள எதிர்க்கட்சிகளுக்கு எதிராகவும், தேசிய அளவில் பாஜகவுக்கு மேலும் வலுசேர்ப்பதாகவும் அமைந்தன என்பது மேலெழுந்தவாரியான பொதுப்பார்வை. அதே நேரத்தில் சில எதிர்பாராத திருப்பங்களையும் நடந்து முடிந்த இடைத்தேர்தல்களில் பார்க்க முடிகிறது.
ஏழு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்தது போலவே அமைந்திருக்கின்றன. குறிப்பாக, அந்தந்த மாநிலங்களில் உள்ள ஆளுங்கட்சிக்கு சாதகமாக வாக்காளர்கள் தீர்ப்பளித்திருப்பது வியப்பை ஏற்படுத்தவில்லை. ஆந்திரம், ஜார்க்கண்ட், தில்லி ஆகிய மூன்று மாநிலங்களிலும் ஆளுங்கட்சி வெற்றி பெற்றிருக்கிறது. ஆந்திரத்தில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி, ஆத்மகுர் சட்டப்பேரவைத் தொகுதியில் மிகப் பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது.
திரிபுராவிலும் ஜார்க்கண்டிலும் காங்கிரஸ் கட்சி இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளில் வெற்றி பெற்றிருப்பது இன்னும்கூட அந்தக் கட்சியின் செல்வாக்கை குறைத்து மதிப்பிடக் கூடாது என்பதை உணர்த்துகிறது. திரிபுராவில் ஏற்பட்டிருக்கும் பின்னடைவு எந்த அளவுக்கு அரசியல் களத்தில் மார்க்சிஸ்ட் கட்சி வலுவிழந்திருக்கிறது என்பதற்கான அடையாளம்.
தில்லி ராஜேந்தர் நகர் சட்டப்பேரவை தொகுதியை ஆளும் ஆம் ஆத்மி கட்சி தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. பாஜகவால் ஆம் ஆத்மி கட்சியின் செல்வாக்கைத் தடுத்து நிறுத்த முடியவில்லை என்பதையும், காங்கிரஸ் கட்சி, தில்லியில் முற்றிலும் பின்தங்கியிருக்கிறது என்பதையும் இந்தத் தேர்தல் முடிவு படம் பிடித்துக் காட்டுகிறது.
மக்களவைக்கான மூன்று தொகுதி இடைத்தேர்தல்தான், சட்டப்பேரவை இடைத்தேர்தல்களைவிட கூர்ந்து கவனிக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக, உத்தர பிரதேசத்தில் நடந்த ராம்பூர், ஆஸம்கர் ஆகிய மக்களவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜவாதி கட்சிக்கு கெளரவ பிரச்னையாகவே கருதப்பட்டது.
சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, ஆஸம்கர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்தார் அகிலேஷ் யாதவ். தொடர்ந்து முலாயம் சிங் யாதவும், அவருக்குப் பின் அகிலேஷ் யாதவும் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற தொகுதி ஆஸம்கர். அவர்களது குடும்பத்தின் உச்சக்கட்ட செல்வாக்கு நிலவும் தொகுதி என்றுகூட சொல்லலாம்.
அது மட்டுமல்ல, 2014, 2019 மக்களவைத் தேர்தல்களில் மாநிலம் முழுவதும் சமாஜவாதி கட்சி தோல்வியைத் தழுவிய நிலையிலும், யாதவ் குடும்பம் வெற்றி பெற்ற தொகுதியும்கூட. 2019-இல் 2.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸம்கர் தொகுதி, சமாஜவாதி கட்சியின் கையிலிருந்து நழுவியிருப்பது அகிலேஷ் யாதவ் எதிர்பார்த்திருக்க முடியாத அதிர்ச்சியாக இருந்திருக்கும்.
ஆஸம்கர் மட்டுமல்ல, ராம்பூர் தொகுதியிலும் சமாஜவாதி கட்சி பாஜகவிடம் படுதோல்வி அடைந்திருக்கிறது. 2019-இல் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் ராம்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற சமாஜவாதி கட்சி தற்போது தோல்வியடையக் காரணம், மூத்த தலைவர் ஆசம் கானுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடுதான். இப்போது ஆசம் கானுடன் சமாதானம் ஏற்பட்டும்கூட, ராம்பூர் தொகுதியை பாஜகவிடம் இழந்திருப்பது சமாஜவாதி கட்சியின் செல்வாக்கு சரிவைக் காட்டுகிறது.
சற்றும் எதிர்பாராத முடிவை வழங்கியிருக்கிறது பஞ்சாப் மாநிலம். ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்து நான்கு மாதங்களே ஆகியிருக்கும் நிலையில், மக்கள் அதிருப்தி அடைந்து விட்டார்களோ என்கிற தோற்றத்தை ஏற்படுத்துகிறது ஆளுங்கட்சியின் தோல்வி.
முதல்வர் பகவந்த் மான் 2019-இல் வெற்றி பெற்றிருந்த மக்களவைத் தொகுதி உறுப்பினர் பதவியை, சட்டப்பேரவைக்கு வெற்றி பெற்று முதல்வரான நிலையில் ராஜிநாமா செய்தார். சங்ரூர் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் சிரோமணி அகாலி தள (அமிருதசரஸ்) கட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் மான் வெற்றி பெற்றிருப்பதும், ஆம் ஆத்மி கட்சி மட்டுமல்லாமல் காங்கிரஸ், அகாலி தளம், பாஜக ஆகிய கட்சிகள் தோல்வியடைந்திருப்பதும் அதிர்ச்சி அளிக்கின்றன.
சிம்ரன்ஜீத் சிங் மான் காலிஸ்தான் ஆதரவாளர் என்பதுடன், பிந்தரன் வாலேயின் தீவிரமான அபிமானி. 1980-இல் பிந்தரன் வாலே முன்னெடுத்த பயங்கரவாத, பிரிவினைவாத கொள்கைகளை ஆதரிப்பவர்.
ஏற்கெனவே பஞ்சாப் மாநிலத்தின் பொருளாதாரம் தடுமாறிக் கொண்டிருக்கிறது. நிர்வாகமும், காவல்துறையும் கட்டுப்பாடில்லாமல் செயல்படுகின்றன. போதாக்குறைக்கு அரசியல் பின்புலமும், நிர்வாக அனுபவமும் இல்லாதவர்கள் ஆட்சியில் இருக்கிறார்கள். தில்லியில் இருந்து அரவிந்த் கேஜரிவால் "ரிமோட் கண்ட்ரோல்' ஆட்சி நடத்துகிறார் என்கிற குற்றச்சாட்டு நிலவுகிறது.
இப்படிப்பட்ட சூழலில் சிம்ரன்ஜீத் சிங் மானின் வெற்றி ஆபத்தின் அறிகுறி!








 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com