ஆதரவு விலை... | குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரித்து அறிவித்திருப்பது குறித்த தலையங்கம்

ஆதரவு விலை... | குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரித்து அறிவித்திருப்பது குறித்த தலையங்கம்

 பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு, 2022 - 23 பயிராண்டில் 14 கரீஃப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரித்து அறிவித்திருக்கிறது. நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.100 அதிகரிக்கப்பட்டிருக்கிறது. 14 கரீஃப் பயிர்களில் எட்டு பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலை அவற்றின் உற்பத்திச் செலவைவிட 1.5 மடங்கு அதிகமாகவும், ஏனைய ஆறு பயிர்களுக்கான ஆதரவு விலை உற்பத்திச் செலவைவிட 51% முதல் 85% வரையும் அதிகரிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
 மழையை மட்டுமே நம்பியிருக்கும் பகுதிகளில் உள்ள விவசாயிகளை, நெல் பயிரிடுவதிலிருந்து அகற்றி பருப்பு வகைகள், தானியங்கள் போன்றவற்றைப் பயிரிட ஊக்குவிப்பது என்பது நீண்டகாலமாக பேசப்பட்டு வருகிறது. இப்போது நெல் அல்லாத 13 பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையை கரீஃப் பருவத்தில் அதிகரித்திருப்பதன் மூலம், சிறு, குறு விவசாயிகள் நெற்பயிரை மட்டும் நம்பியிராமல் ஏனைய பயிர்களுக்கு தங்களை மாற்றிக்கொள்ள வழிகோலப்பட்டிருக்கிறது.
 2015-இல் எடுக்கப்பட்ட கொள்கை முடிவால் பருப்பு வகைகளின் சாகுபடிப் பரப்பு அதிகரித்திருப்பது மட்டுமல்லாமல், அவற்றின் உற்பத்தியும் கணிசமாக உயர்ந்திருக்கிறது. 2021 - 22-இல் பருப்பு வகைகளின் உற்பத்தி 27 மில்லியன் டன்னைக் கடந்திருக்கிறது. ஏழு ஆண்டுகளுக்கு முன்பு இது வெறும் 16 முதல் 17 மில்லியன் டன்னாகத்தான் இருந்தது.
 பருப்பு வகைகள் மட்டுமல்ல, எண்ணெய் வித்துகளின் சாகுபடிப் பரப்பும், உற்பத்தியும் அதிகரித்திருப்பதும் மிகப்பெரிய மாற்றம். 2015 - 16-இல் வெறும் 25 மில்லியன் டன்னாக இருந்த இந்தியாவின் எண்ணெய் வித்துகளின் உற்பத்தி, கடந்த பயிர் காலத்தில் 37 மில்லியன் டன்னாக அதிகரித்திருப்பதைக் காணலாம்.
 இந்த ஆண்டின் கரீஃப் பருவ நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை 5% அதிகரித்திருக்கிறது என்றால், சோயா பீன், ஜோவார் போன்ற பயிர்களுக்கு 8% முதல் 9% வரை ஆதரவு விலை அதிகரித்திருக்கிறது. இந்தப் போக்கு பின்னடைந்துவிடாமல் இதே போல தொடருமேயானால், குறைந்த தண்ணீர் தேவையுள்ள பயிர்களின் சாகுபடிப் பரப்பு மெல்ல மெல்ல அதிகரிக்கும். அதன் மூலம், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகளுக்கான நமது இறக்குமதி தேவையைக் கணிசமாகக் குறைக்க முடியும்.
 குறைந்தபட்ச ஆதரவு விலை மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் விவசாய உற்பத்திகளுக்கான சமிக்ஞைகள் எதிர்பார்த்த பலனை வழங்க வேண்டுமானால், அறிவிக்கப்பட்ட ஆதார விலைகள் பருப்புகளுக்கும், எண்ணெய் வித்துகளுக்கும் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும். இப்போது அது நடப்பதாகத் தெரியவில்லை.
 தற்போது துவரை அதிகமாக விளையும் மகாராஷ்டிர, கர்நாடக மாநில சந்தைகளில் அதன் விலை குவிண்டாலுக்கு (100 கிலோ) ரூ. 5,700 முதல் ரூ. 6,100 வரை காணப்படுகிறது. 2021 - 22-இல் துவரைக்கான, அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ. 6,100.
 நடப்புப் பருவத்தில் ரூ. 6,600. ஆதரவு விலையைவிட குறைந்த விலையில்தான் கொள்முதல் சந்தையில் துவரை விலை போகிறது.
 அதே போல சிறுபருப்பு, பாசிப்பருப்பு ஆகியவற்றுக்கு அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ. 7,755 என்றால், மொத்த கொள்முதல் சந்தையில் ரூ. 6,000-க்குத்தான் வியாபாரிகள் வாங்குகின்றனர். இதற்குக் காரணம், நெல், கோதுமை, கரும்பு போல அரசின் கொள்முதல் அமைப்புகள் சிறு தானியங்களுக்கும், பருப்பு வகைகளுக்கும், எண்ணெய் வித்துகளுக்கும் இல்லாமல் இருப்பதுதான்.
 அரசு அடிப்படை விலை மூலம் கொள்முதல் செய்வது, நெல், கோதுமை, பருத்தி ஆகியவற்றைப்போல ஏனைய 13 பயிர்களுக்கும் இல்லாமல் இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. முதலாவது காரணம், நாஸேட் கொள்முதலுக்கு ஏற்றாற்போல செயல்படாமல் இருப்பது. போதுமான மனிதவளம், உணவு தானிய சேமிப்புக் கிடங்குகள், மண்டிகள் ஆகியவற்றுடன் ஒருங்கிணையும் கட்டமைப்புகள், போதுமான நிதியாதாரம் போன்றவை நாúஸட் அமைப்பிடம் இல்லை. சிறு தானியங்கள், பருப்பு போன்றவற்றை குறைந்தபட்ச ஆதரவுவிலையில் கொள்முதல் செய்து, பொது விநியோக முறையில் வழங்குவதற்கான ஏற்பாடு செய்யப்பட வேண்டும். அது விவசாயிகளுக்கு உதவுவது மட்டுமல்லாமல், மக்களின் ஊட்டச்சத்தையும் அதிகரிக்கும் என்பதை நாம் உணர வேண்டும்.
 இதிலிருக்கும் இன்னொரு மிகப் பெரிய குறைபாடு, குறித்த நேரத்தில் மத்திய - மாநில கொள்முதல் அமைப்புகள் உற்பத்தியான விளைபொருள்களை வாங்கி அவற்றுக்கான பணத்தை வழங்காமல் இருப்பது. மகசூல் குறித்து முன்கூட்டியே திட்டமிட்டு, எதிர்பார்த்து மத்திய - மாநில அரசுகள் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்வதை உறுதிப்படுத்தினால்தான் பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள் ஆகியவற்றை உற்பத்தி செய்பவர்கள் பயனடைவார்கள். இவற்றை உற்பத்தி செய்பவர்கள் பெரும்பாலும் பருவ மழையை மட்டுமே நம்பிப் பயிரிடும் சிறு, நடுத்தர விவசாயிகள் என்பதை அரசு உணர வேண்டும். குறித்த நேரத்தில் கொள்முதல் செய்யப்படாததால் அவர்கள் ஆதரவு விலைக்காக காத்திருக்க இயலாமல் குறைந்த விலைக்கு வியாபாரிகளிடம் விற்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
 குறைந்தபட்ச ஆதரவு விலை மட்டுமே விவசாயிகளின் பிரச்னைக்கு தீர்வு அல்ல. மூன்று வேளாண் சீர்திருத்த சட்டங்களில் காணப்பட்ட சில அம்சங்கள் நிறைவேறாமல் போனது, இந்திய விவசாயத்திற்கு ஏற்பட்ட மிகப்பெரிய பின்னடைவு!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com