இதில் கூடவா முறைகேடு? | அரசு நிவாரண உதவியில் ஏற்படும் முறைகேடு குறித்த தலையங்கம்

கோப்புப்படம்
கோப்புப்படம்

கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாக கரோனா தீநுண்மித் தொற்றால் உலகம் பல விதங்களில் பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 138 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகையைக் கொண்ட நமது நாடும் பொருளாதார ரீதியாகவும், மனிதவள ரீதியாகவும் பெரும் இழப்புகளை எதிர்கொண்டு இப்போதுதான் மெல்ல மெல்ல மீண்டு வருகிறது.

இந்தியாவில் 5.16 லட்சத்துக்கும் அதிகமானோர் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர் என்கிறது அதிகாரபூர்வ புள்ளிவிவரம். ஆனால், அதைவிட அதிக உயிரிழப்புகள் நேர்ந்திருக்க வாய்ப்புள்ளது. இத்தனை லட்சம் உயிரிழப்புகளால் பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் தங்கள் பெற்றோரில் ஒருவரையோ இருவரையுமோ இழந்து ஆதரவற்றவர்களாக ஆகி உள்ளனர். இதுபோன்ற குழந்தைகளுக்கு நிவாரண நிதியாக தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு அக்டோபர் 4-ஆம் தேதி உத்தரவிட்டது.

இந்த இழப்பீட்டைப் பெறுவதற்காக சிலர் போலியான சான்றிதழ்களை சமர்ப்பிப்பதாக நீதிமன்றத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த நீதிபதிகள் எம்.ஆர். ஷா, பி.வி. நாகரத்னா கொண்ட அமர்வு, 'ஆதரவற்றவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது. இதில் கூட போலியாக இழப்பீடு கோரும் அளவுக்கு ஒழுக்க நெறிகள் தரம் தாழ்ந்துவிட்டனவா? இந்த அளவுக்கு யாரும் செல்வார்கள் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை' என்று குறிப்பிட்டுள்ளது.

கிராமப்புறங்களில் உள்ள மக்கள் பொருளாதார ரீதியாக சந்திக்கும் சிரமங்களைக் குறைக்கும் நோக்கில் ஆண்டுக்கு 100 நாள்கள் வேலை அளிக்கும் விதத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்புத் திட்டம், 2006-இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தை ஆய்வு செய்த நாடாளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கை, மக்களவையில் மார்ச் 16-இல் தாக்கல் செய்யப்பட்டது. 

அந்த அறிக்கை, 'தகுதிவாய்ந்த தொழிலாளர்கள் முறையாக ஊதியம் பெறுவதில்லை. களத்தில் இந்தத் திட்டத்தை அமல்படுத்தும்போது இரக்கமற்ற சிலரால் பணம் கைமாறிக் கொண்டே  இருக்கிறது என்பது கசப்பான உண்மை' என்கிறது. தொழிலாளர்களின் வருகைப் பதிவு இணையவழியில் முறையாகப் பதிவு செய்யப்படுவதில்லை. தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய நிலுவை ரூ.4,060 கோடி, தளவாடப் பொருள்களுக்கான நிலுவைத் தொகை ரூ.9 ஆயிரம் கோடி எனும்போது, ஒடுக்கப்பட்டவர்களுக்காகத் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் தோல்வியடைகிறது என்று அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுபோன்ற சூழ்நிலையில், இந்தத் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு 2022-23 நிதிநிலை அறிக்கையில் ரூ.73,000 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. 'பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா'விலும் (பிரதமரின் வீட்டு வசதித் திட்டம்) முறைகேடுகள் நடைபெறுவதாக நாடாளுமன்ற நிலைக்குழு சுட்டிக்காட்டி உள்ளது. ஏற்கெனவே வசதியாக வாழ்பவர்களும், ஆடம்பர வீடுகளை வைத்திருப்பவர்களும் இந்தத் திட்டத்தில் பயனடைந்துள்ளனர் என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டுவதை என்னவென்று சொல்ல? 

விவசாயிகளுக்கு உதவுவதற்காக பிரதான் மந்திரி கிஸான் சம்மான் நிதி திட்டம் (பிரதம மந்திரி விவசாயிகள் நிதி உதவித் திட்டம்) மத்திய அரசால் செயல்படுத்தப்படுகிறது. 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. கடந்த 2020-ஆம் ஆண்டு மத்தியில் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலி பயனாளிகள் சேர்க்கப்பட்டு பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றது வெளிச்சத்துக்கு வந்தது.

பிரதமர் நரேந்திர மோடி, கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக என்று காரணம் கூறி கடந்த 2016 நவம்பர் 8-ஆம் தேதி அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன்படி, ரூ.1,000, ரூ.500 ஆகிய உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றும், அவற்றை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அறிவித்தார். அந்த அறிவிப்பால் கறுப்புப் பணம் ஒழிந்ததா என்பது தெரியவில்லை, ஆனால், அந்த நேரத்தில் ஒரே இரவில் வங்கி மேலாளர்களின் உதவியுடன் பல்லாயிரம் கோடி ரூபாய் வெள்ளையாக மாற்றப்பட்டது என செய்திகள் வெளிவந்தன.

தமிழ்நாடு ஒவ்வொரு முறை வெள்ளத்தால் பாதிக்கப்படும் போதும் அரசு நிவாரண உதவித் தொகை வழங்கி வருகிறது. அது அவ்வப்போது அதிகரித்தும் வருகிறது. ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டபோது அடுக்குமாடிகளில் வசிப்பவர்கள் காரில் வந்து அதைப் பெற்றுச் சென்றதை நாம் கண்டோம்.

அதே போன்று, கரோனா பரவல் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் வேலைவாய்ப்புகளை இழந்ததனால் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.2,500 ரொக்கம் அதிமுக ஆட்சிக் காலத்தில் ஒருமுறை கொடுக்கப்பட்டது. இப்போது நிலைமை சீராகி இயல்பு நிலை திரும்பியபோதும்கூட ரொக்கப் பணம் தரப்பட வேண்டும் என்றும், அதிக தொகை வழங்கப்பட வேண்டும் என்றும் அரசியல் கட்சியினர்கூட கோரிக்கை விடுத்ததுதான் வேடிக்கை. நல்லவேளையாக, மோசமான நிதிநிலை காரணமாக அந்த மோசமான வழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

கடந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் சமயத்தில், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தது. அந்த சமயத்தில் பலரும் உடனடியாக நகைகளை வைத்துக் கடன் பெற்றனர். ஆனால், இதை உணர்ந்த திமுக அரசு, நகைக் கடன் தொடர்பாக உரிய ஆய்வுகளை நடத்தி,  தகுதியானவர்களுக்கு மட்டும் தள்ளுபடி செய்ய உத்தரவிட்டது.

இலவசங்கள் அளிப்பதை மத்திய - மாநில அரசுகள் அறவே விடுத்து, எந்தத் திட்டத்தை அறிவித்தாலும் அதில் எந்த வகையிலும் முறைகேடு நடக்க வாய்ப்பு இல்லாத நடைமுறையை வகுக்க வேண்டும். அப்போதுதான் அரசுப் பணம் வீணாவது தடுக்கப்படுவதுடன் அது தகுதிவாய்ந்த பயனாளிகளைப் போய்ச் சேரும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com