வரவேற்கத்தக்க முடிவு! | தேசிய பாதுகாப்பு சட்ட வழக்குகளை மறு ஆய்வு செய்ய மத்திய அரசு முன்வந்திருப்பது குறித்த தலையங்கம்

வரவேற்கத்தக்க முடிவு! | தேசிய பாதுகாப்பு சட்ட வழக்குகளை மறு ஆய்வு செய்ய மத்திய அரசு முன்வந்திருப்பது குறித்த தலையங்கம்

 தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் தொடர்பான வழக்குகளை மறு ஆய்வு செய்வதற்காக உயர்நீதிமன்ற நீதிபதிகளைக் கொண்ட ஆலோசனை வாரியத்தை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, கடும் மன உளைச்சலுடன் சிறைவாசம் அனுபவித்து வருபவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் மத்திய அரசின் இந்த அறிவிப்பு ஓரளவு நிம்மதியைத் தரும் என்பதில் சந்தேகமில்லை.
 மத்திய உள்துறை அமைச்சகம், கடந்த சனிக்கிழமை வெளியிட்ட அறிவிக்கையில், இந்த ஆலோசனை வாரியத்தின் தலைவராக தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி யோகேஷ் கன்னாவும், உறுப்பினர்களாக நீதிபதிகள் சந்திரதாரி சிங், ரஜ்னீஷ் பட்நாகர் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில், 1980-ஆம் ஆண்டு, செப்டம்பரில் தேசிய பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டு நடைமுறைக்கு வந்தது. இந்தச் சட்டத்தின் கீழ், இந்தியர்களையோ இந்தியாவில் தங்கியிருக்கும் வெளிநாட்டினரையோ கைது செய்து ஓராண்டு வரை சிறையில் அடைப்பதற்கு மத்திய - மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேச நிர்வாகிக்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
 நமது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளவர்கள், வெளிநாடுகளுடனான இந்தியாவின் உறவுகளை சீர்குலைக்கத் திட்டமிடுபவர்கள், பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை வழங்குவதற்குத் தடையாக இருப்பவர்கள் ஆகியோரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யலாம். மாவட்ட ஆட்சியர் அல்லது காவல்துறை ஆணையர் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் இதற்கான உத்தரவைப் பிறப்பிக்கலாம்.
 இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வேண்டிய நபர் தலைமறைவாகிவிட்டால், அது குறித்து பெருநகர் மாஜிஸ்திரேட் அல்லது நீதித்துறை நடுவருக்கு எழுத்து மூலம் தகவல் அளிக்க வேண்டும். மேலும், கைது செய்யப்படுபவருக்கு அவர் எதற்காக கைது செய்யப்பட்டுள்ளார் என்ற விவரங்களை ஐந்து நாள்களுக்குள் தெரிவிக்க வேண்டும். சில தவிர்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், அதிகபட்சமாக 15 நாள்களுக்குள் சம்பந்தப்பட்ட நபரிடம் தகவல் தெரிவிக்கப்பட வேண்டும்.
 இந்தச் சட்டம் முறையாகப் பயன்படுத்தப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் தலைமையில் ஆலோசனைக் குழுக்களை மத்திய - மாநில அரசுகள் ஏற்படுத்த வேண்டும். அதோடு, இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுபவர்களை முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து மத்திய - மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம். ஆலோசனைக் குழுக்கள் பிறப்பிக்கும் உத்தரவு எத்தகையதாக இருந்தாலும், இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களை எந்தக் காரணமும் கூறாமல் 3 முதல் 6 மாதங்கள் வரை சிறையில் அடைத்து வைப்பதற்கு அரசுக்கு அதிகாரம் உள்ளது.
 மிகக் கடுமையான இந்தச் சட்டம், தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளவர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுவதைவிட, ஆட்சியாளர்களுக்கு எதிராக வெளிப்படையாகக் கருத்து தெரிவிப்பவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், காவல்துறையை விமர்சிப்பவர்கள் ஆகியோருக்கு எதிராகத்தான் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது என்று பரவலாக குற்றச்சாட்டு எழுந்திருப்பதையும் புறந்தள்ளிவிட முடியாது.
 தேசிய பாதுகாப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த1980-ஆம் ஆண்டு முதல் 2018-ஆம் ஆண்டு வரை நாடு முழுவதும் மொத்தம் 1,200 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சட்டத்தின் கீழ் அதிகபட்சமாக மத்திய பிரதேசத்தில் 795 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 2019 முதல் இதுவரை இந்தச் சட்டத்தின் கீழ் எத்தனை பேர் கைது செய்யப்பட்டனர் என்ற விவரத்தை மத்திய அரசு வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. இதன் மூலம், இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளவர்களின் உண்மை நிலை என்ன என்பதை அறிந்து கொள்ள முடியாத சூழல் நிலவி வருகிறது.
 இந்த நிலையில், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் தொடர்பான வழக்குகளை மறு ஆய்வு செய்வதற்கான ஆலோசனை வாரியத்தை மத்திய உள்துறை அமைச்சகம் அமைத்துள்ளது நிச்சயம் வரவேற்கத்தக்கது.
 "தேசிய பாதுகாப்பு சட்டம்', "சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்', "பயங்கரவாதத் தடுப்புச் சட்டம்' உள்ளிட்ட கடுமையான சட்டங்கள் ஆட்சியாளர்களுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களை அடக்குவதற்காகவே பயன்படுத்தப்படுகின்றன என்கிற குற்றச்சாட்டை மத்திய - மாநில அரசுகள் தொடர்ந்து மறுத்து வருகின்றன.
 தேசத்தின் பாதுகாப்புக்கு ஊறு விளைவிப்பவர்களையும், பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுபவர்களையும் முன்கூட்டியே கண்டறிந்து அவர்களை தேசிய பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட கடுமையான சட்டங்களின் கீழ் கைது செய்து சிறையில் அடைப்பதை குறை காண முடியாது.
 இந்தச் சட்டங்களின் கீழ் ஒன்றுமறியாத அப்பாவிகள் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்படுவதைத் தடுக்க வேண்டியது அரசின் கடமையாகும். நாட்டைப் பாதுகாப்பதற்காக இயற்றப்படும் எந்தவொரு சட்டமும் முறையாகக் கண்காணிக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டால் மட்டுமே அது எதிர்பார்த்த பலனைத் தரும். மத்திய அரசு தற்போது இதை உணர்ந்து, தேசிய பாதுகாப்பு சட்ட வழக்குகளை மறு ஆய்வு செய்ய முன்வந்திருப்பது பாராட்டுக்குரியதும் வரவேற்கத்தக்கதுமாகும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com