ஏன் இந்த பாராமுகம்? | பெண்கள் வேலைவாய்ப்பு குறித்த தலையங்கம்

ஏன் இந்த பாராமுகம்? |  பெண்கள் வேலைவாய்ப்பு குறித்த தலையங்கம்

 சமுதாயத்தில் பெண்களின் பங்கு அதிகரித்திருப்பது போன்ற ஒரு மாயத்தோற்றம் பரவலாகக் காணப்படுகிறது. அதே நேரத்தில், பெண்கள் தாங்கள் பெறும் அதிகாரங்களை தன்னிச்சையாகவும், எந்தவித தலையீடு இல்லாமலும் கையாள முடியாத சூழல் காணப்படுவதையும் பார்க்கிறோம். தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் 50% இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு அவர்கள் மேயர்களாகவும், உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டும்கூட, குடும்பத்தினரின் வழிகாட்டுதலில் செயல்படும் நிலைமை காணப்படுவதைக் காண்கிறோம்.
 இந்தியா விடுதலை பெற்ற பிறகு பரவலாக கல்விக்கான வாய்ப்புகள் அதிகரித்தது என்னவோ உண்மை. ஆனால், அந்த வாய்ப்புகள் பெண்களுக்குக் கிடைத்ததா என்று கேட்டால் இல்லை என்று சொல்லிவிடலாம். 1980-களில் கல்வி தனியார்மயமாக்கப்பட்ட பிறகும், 1991-இல் பொருளாதார சீர்திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகும் பெண்களுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கவே செய்தன. வேலைவாய்ப்புகளும் அதிகரித்தன. அவை பெரும்பாலும் நகர்ப்புற அளவிலும், உயர் மத்திய தர வகுப்பினர் மத்தியிலும் காணப்பட்டனவே தவிர, சாமானிய அடித்தட்டு மக்களைச் சென்றடையவில்லை.
 பள்ளிக்கூடங்களில் தண்ணீர் வசதியும், கழிப்பறைகளும் இல்லாமல் இருப்பது ஊரகப்புறங்களில் பெண்கள் கல்விக்கு முட்டுக்கட்டையாக இருந்தன. பணியிடங்களிலும் அவர்களுக்கென்று தனியான வசதிகள் இல்லாமல் இருந்ததும் (இருப்பதும்), ஆண்களுக்கு நிகரான வேலைவாய்ப்பு, ஊதியம் தரப்படாமல் இருப்பதும் பெரிய அளவில் பெண்கள் வேலைவாய்ப்பை விரும்பாததற்கான காரணங்கள்.
 கடந்த கால் நூற்றாண்டு காலமாக பெண்களின் பங்களிப்பை எல்லாத் தளங்களிலும் அதிகரிப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவது என்னவோ உண்மை. ராணுவம் உள்பட பெண்களின் பங்களிப்பு இல்லாத துறையே இல்லை என்கிற அளவில் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதை மறுப்பதற்கில்லை.
 பெண்களுக்கான வாய்ப்புகள் அதிகரித்திருப்பதும், எல்லா துறைகளிலும் முறையான தேர்ச்சியும், தகுதியும் பெற்ற பெண்கள் பங்களிப்பு நல்கி சாதனை புரிவதும் மகிழ்ச்சி அளிக்கின்றன. இவ்வளவு இருந்தும் இந்தியாவில் பெண்கள் இன்னும்கூட மிகக் குறைந்த அளவிலேயே வேலைவாய்ப்பு பெறுகிறார்கள் என்கிற கசப்பான உண்மையை பதிவு செய்யாமல் இருக்க முடியவில்லை.
 கடந்த ஐந்து ஆண்டுகளாக பெருமளவில் பெண்கள் வேலைக்குச் செல்வதைத் தவிர்த்து வருகிறார்கள் என்கிற அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவு வெளியாகி இருக்கிறது. ஜி-20 நாடுகளில், மிகக் குறைந்த அளவில் பெண்கள் வேலைவாய்ப்பு பெறும் நாடுகளில் இந்தியா கடைசிக்கு முந்தைய இடத்தில் இருக்கிறது. நம்மைவிட குறைந்த அளவு பெண்கள் பங்களிப்புள்ள பொருளாதாரம் சவூதி அரேபியா மட்டுமே.
 இந்தியாவில் 2017 நிலையில் 27% அளவில்தான் வேலைவாய்ப்பில் பெண்களின் பங்களிப்பு. கடந்த ஐந்து ஆண்டுகளில் நிலைமை மேலும் மோசமாகி இருக்கிறது. ஏறத்தாழ இரண்டு கோடி பெண்கள் வேலைக்குச் செல்வதை நிறுத்தியிருக்கிறார்கள்.
 கொள்ளை நோய்த்தொற்றுக்குப் பிறகு உலகளாவிய அளவில் பெண்களின் பங்களிப்பு 9% குறைந்திருக்கிறது. இந்தியப் பொருளாதாரத்தில் அவர்களது பங்களிப்பு 18% குறைந்திருப்பதாக அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதற்கு நோய்த்தொற்று மட்டுமே காரணமல்ல. வேலையிலிருந்து விலகிக்கொண்ட பெண்களில் பெரும்பாலோர் மீண்டும் வேலை தேடுவதில்லை என்கிற அதிர்ச்சியை ஆய்வு முடிவு வெளிப்படுத்துகிறது.
 கடந்த 20 ஆண்டுகளில் வேலைவாய்ப்பில் பெண்களின் பங்கு குறைந்து வருவது ஏன் என்பது புதிராக இருக்கிறது. மொழி, மதம், ஜாதிப் பாகுபாடு, மாநில வேறுபாடுகள், வருவாய்ப் பிரிவுகள் ஆகியவற்றைக் கடந்து, அதிக அளவில் பெண்கள் ஏன் வேலைக்குச் செல்வதிலிருந்து விலகுகிறார்கள் என்கிற கேள்வி எழுகிறது.
 கல்விக்கான வாய்ப்புகள் அதிகரித்திருக்கின்றன. பெண்கள் கருத்தரிப்பு விகிதம் குறைந்து வருகிறது. பொருளாதாரம் வளர்ச்சி அடைகிறது. இப்படிப்பட்ட சூழலில் பெண்கள் அதிக அளவில் வேலைவாய்ப்பை நாடுவதற்கு பதிலாக, தாங்கள் செய்து கொண்டிருக்கும் வேலைகளிலிருந்து விலகுகிறார்கள் என்பது விளங்கிக் கொள்ள முடியாத புதிர்.
 கல்வி கற்பதற்காகவும், திறன் மேம்பாட்டுக்காகவும் பெண்கள் பணியிலிருந்து நின்றால் அதை வரவேற்கலாம். குடும்பச் சூழல் காரணமாகவும், பணியிடங்களில் போதிய பாதுகாப்பும், அடிப்படை வசதிகளும் இல்லாததாலும் வேலைக்குச் செல்வதை தவிர்க்கிறார்கள் என்று சொன்னால், அது உடனடியாக கவனத்தில் கொண்டு சீர்செய்யப்பட வேண்டும்.
 பொது விவாதங்களில் பெண்கள் அதிக அளவில் வேலைக்குச் செல்வதைத் தவிர்ப்பது குறித்து பேசப்படுவதில்லை. நாடாளுமன்றத்திலும் இது குறித்து யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. வேலைவாய்ப்பின்மை குறித்த கவலைகள் ஆண்கள் சார்ந்ததாக இருக்கின்றனவே தவிர, பெண்கள் பங்களிப்பு குறித்ததாக இல்லை.
 பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பு ஆண்களுக்கு நிகராக இருக்க வேண்டியதன் அவசியத்தை நாம் புரிந்துகொள்ளாததுதான் அதற்குக் காரணம். இப்போது பெண்களின் பங்களிப்பு நமது ஜிடிபியில் 18% தான். அவர்களது அதிகரித்த பங்களிப்பு, அதை 60%-ஆக உயர்த்தக் கூடும்.
 கல்வியிலும், உடல் நலத்திலும் பெண்கள் குறித்த கவனம் அதிகரித்து அவர்கள் அதிக அளவில் வேலைவாய்ப்பைப் பெறுவதால் குடும்பத்தின் வருமானம் அதிகரிக்கும். குடும்பங்களில் அவர்களது மரியாதையும், அவர்களுக்கான அதிகாரமும் உறுதிப்படும். பெண்கள் படித்தால் மட்டும் போதாது. அவர்கள் அதிக அளவில் வேலைவாய்ப்பையும் பெற வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com