நெருக்கடியில் நெசவு! | நூல் விலை உயா்வு குறித்த தலையங்கம்

நெருக்கடியில் நெசவு! | நூல் விலை உயா்வு குறித்த தலையங்கம்

 மத்திய அரசு, பருத்தி இறக்குமதிக்கான வரியை வருகிற செப்டம்பர் 30 வரை முழுமையாக ரத்து செய்வதாக ஏற்கெனவே அறிவித்துள்ள போதிலும், கடந்த 18 மாதங்களாக பருத்தி, பஞ்சு, நூல் ஆகியவற்றின் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. பஞ்சு, நூல் விலை உயர்வைக் குறைக்க மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி, தமிழகத்தில் திருப்பூர், கரூர் உள்ளிட்ட நகரங்களில் பின்னலாடை நிறுவனங்களும், ஜவுளி உற்பத்தியாளர்களும் மேற்கொண்ட இரண்டு நாள் வேலைநிறுத்தத்தால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர்.
 உலகிலேயே இந்தியாவில்தான் பஞ்சு உற்பத்தி மிக அதிக அளவில் மேற்கொள்ளப்படுகிறது. இந்தியாவில் 2021 அக்டோபர் முதல் 2022 செப்டம்பர் வரையிலான பருவத்தில் பஞ்சு உற்பத்தி 340 லட்சம் பேல்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
 இப்போதைய நிலையில் 310 லட்சம் பேல்கள் கிடைத்தாலே அதிகம். ஆனால், உள்நாட்டு தேவை 320 லட்சம் பேல்கள்.
 இந்தியாவைப் பொறுத்தவரை நூல் தட்டுப்பாடு கிடையாது. அதே நேரத்தில், பருத்தி விலை அதிகரிப்பால் ஏற்படுகிற பாதிப்புதான் ஜவுளித் தொழிலை கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கியிருக்கிறது. கடந்த ஓர் ஆண்டில் 60% அளவில் பருத்தி விலை அதிகரித்திருக்கிறது என்பதுதான் பிரச்னையே.
 கடந்த 2021-22 நிதியாண்டில், ஜனவரி மாதம் வரை 476.20 கோடி கிலோ நூல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அதே காலகட்டத்தில் 2.40 மெட்ரிக் டன் துணி வகைகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. 2020-21 நிதியாண்டில் 113 லட்சம் டன் பருத்தி நூல் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
 உலக அளவில் பருத்தியிலான ஜவுளி உற்பத்தியில் கடந்த பல நூற்றாண்டுகளாக இந்தியாதான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஐரோப்பிய சந்தையில் பருத்தியிலான இந்திய ஜவுளிகளுக்கு இன்றளவும் பெரும் வரவேற்பு உள்ளது. நமது நாட்டில் மகாராஷ்டிரம், தமிழ்நாடு, குஜராத், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் ஜவுளி உற்பத்தியில் முன்னணியில் உள்ளன.
 இந்தியாவைப் பொறுத்தவரை, வேளாண்மைக்கு அடுத்ததாக ஜவுளி சார்ந்த தொழில்களில்தான் அதிக அளவில் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். நமது நாட்டில் தற்போது ஜவுளி உற்பத்தியில் 35.22 லட்சம் கைத்தறி நெசவாளர்கள் உட்பட சுமார் 4.5 கோடி தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
 அதிகரித்து வரும் பஞ்சு, நூல் விலை உயர்வாலும், வங்கதேசம், சீனா, வியத்நாம் உள்ளிட்ட நாடுகள் அளித்து வரும் தொழில் போட்டியாலும் இந்திய ஜவுளி ஏற்றுமதியாளர்கள் கடும் சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். பஞ்சு, நூல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதற்கு பதுக்கல்தான் முக்கியக் காரணம் என ஜவுளி உற்பத்தியாளர்கள் கூறும் குற்றச்சாட்டில் உண்மை இல்லாமல் இல்லை. அதே நேரத்தில், இந்தியாவில் பருத்தி சாகுபடி, நமது தேவையை நிறைவு செய்யும் அளவுக்கு இல்லை என்பதும் மறுக்க முடியாத உண்மை.
 ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் எதிர்கொண்டுள்ள பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்கு சில யோசனைகளை முன்வைத்து பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், "பஞ்சு, நூல் இருப்பு விவரங்களை அனைத்து நூற்பாலைகளும் பஞ்சாலைகளும் வணிகர்களும் வெளிப்படையாக அறிவிப்பதைக் கட்டாயமாக்க வேண்டும். பஞ்சு இறக்குமதிக்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, வெளிநாடுகளிலிருந்து அவை வந்து சேருவதற்கு மூன்று மாதங்களாகும் என்பதால், வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி வரை மேற்கொள்ளப்படும் அனைத்து பஞ்சு ஒப்பந்தங்களுக்கும் இறக்குமதி வரி விலக்கு கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். நூற்பாலைகளுக்கு பருத்தி கொள்முதலுக்கான ரொக்கக் கடன் வரம்பை ஓராண்டில் மூன்று மாதங்களுக்கு மட்டுமே வங்கிகள் வழங்குகின்றன. இதை எட்டு மாதங்களாக நீட்டிக்க வேண்டும்' என்று முதல்வர் வலியுறுத்தியவற்றை மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.
 முதல்வர் சுட்டிக் காட்டியுள்ள இந்த நடவடிக்கைகள் மட்டுமல்லாமல் பஞ்சு, நூலை அத்தியாவசியப் பட்டியலுக்குக் கொண்டு வந்து பதுக்கலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய பருத்திக் கழகம் மூலம் விவசாயிகளிடமிருந்து பருத்தியை நேரடியாகக் கொள்முதல் செய்து, நாடு முழுவதும் உள்ள நூற்பாலைகளுக்கு பஞ்சு கிடைப்பதையும் அரசு உறுதிப்படுத்த வேண்டும். உலக அளவில் கடும் போட்டியை எதிர்கொண்டுள்ள இந்திய ஜவுளி நிறுவனங்கள் ஏற்றுமதியை அதிகரிப்பதற்குப் பெரும் தடையாக உள்ள 12% ஜிஎஸ்டி-யைக் குறைப்பதும்கூட ஆக்கபூர்வ நடவடிக்கையாக இருக்கும்.
 சுதந்திரம் அடைவதற்கு முன்பு இந்தியாவில்தான் அதிக அளவில் பருத்தி சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. இந்தியாவிலிருந்து பிரிந்து பாகிஸ்தான் உருவானபோது, பருத்தி சாகுபடி அதிகம் நடைபெறும் பகுதிகள் அந்த நாட்டுடன் இணைந்து விட்டன. இதனால், இந்தியாவில் பருத்தி சாகுபடி குறைந்து, நூல் உற்பத்தி பாதிக்கப்பட்டது. நமது தேவையை நிறைவு செய்ய வெளிநாடுகளிலிருந்து பருத்தியும் பஞ்சும் இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
 எனவே, இந்த இறக்குமதியைத் தவிர்க்க இந்தியாவில் பருத்தி சாகுபடிப் பரப்பை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய - மாநில அரசுகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். அதன் மூலம்தான் பருத்தி, பஞ்சு பதுக்கலுக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
 உழவும் நெசவும் இந்தியாவின் அடிப்படை வாழ்வாதாரங்கள்; அவை பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம்!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com