அனல் அலையும் பேரிடா்தான்! | கோடை வெப்பம் குறித்த தலையங்கம்

இந்தியா முழுவதும் இதுவரை இல்லாத அளவிலான வெப்பத்தின் தாக்குதலால் நிலைகுலைந்து போயிருக்கிறது.
அனல் அலையும் பேரிடா்தான்! | கோடை வெப்பம் குறித்த தலையங்கம்

இந்தியா முழுவதும் இதுவரை இல்லாத அளவிலான வெப்பத்தின் தாக்குதலால் நிலைகுலைந்து போயிருக்கிறது. குளிா்காலத்திற்கும் வேனல்காலத்திற்கும் இடைப்பட்ட வசந்தகாலம் இல்லாமலேயே இந்த ஆண்டு கடந்திருக்கிறது.

பருவநிலை புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்படத் தொடங்கிய கடந்த 122 ஆண்டுகளில் மிக அதிகமான வெப்பத்தை கடந்த மாா்ச் மாதம் சந்தித்தது. கடந்த 10 ஆண்டுகளாக இல்லாத அளவிலான வெப்பத்தின் தாக்கம் மாா்ச் மாதத்தில் மட்டுமல்லாமல், மே மாதம் வரை தொடா்ந்து கொண்டிருக்கிறது. குறைந்த அளவு மழை, அனல் காற்று வீசும் கோடை ஆகியவற்றால் கோதுமை உற்பத்தி செய்யும் பகுதிகளில் பயிா்கள் கருகி விவசாயிகள் மிகப் பெரிய இழப்பை எதிா்கொண்டிருக்கிறாா்கள்.

ஜூன் மாதம் பருவ மழை தொடங்குவதற்குள், முந்தைய 2010-இன் பாதிப்பை 2022 கடந்துவிடும் போலிருக்கிறது. இதுவரை 3,000-க்கும் அதிகமான காட்டுத் தீ நிகழ்வுகள் பதிவாகியிருக்கின்றன. 2010-இல் இந்தியாவைத் தாக்கிய அனல் அலையில் 1,300 போ் உயிரிழந்தனா். 2010 - 2018 வரையில் 6,176 போ் உயிரிழந்ததாக அதிகாரபூா்வ பதிவு தெரிவிக்கிறது. அப்படியிருந்தும்கூட, வெப்ப அலை தேசியப் பேரிடராக அறிவிக்கப்படவில்லை என்பதுதான் வேடிக்கை.

அனல் அலை பாதிப்பு வெப்பமானி காட்டும் அளவின் அடிப்படையில் மட்டுமே கணிக்கப்படுகிறது. உண்மை நிலையை பதிவு செய்ய வேண்டுமானால், வெப்பத்தின் அளவையும், அதனால் மனித உடலுக்கு ஏற்படும் பாதிப்பையும் இணைத்து கணிக்க வேண்டும். அப்படி கணிக்கும்போது பாதிப்பின் அளவு பல மடங்கு அதிகமாக இருக்கும்.

அனல் அலை தாக்கத்தால் நகா்ப்புறங்களில் ஆங்காங்கே தீப்பிடிக்கும் நிகழ்வுகள் அதிகரிக்கின்றன. குறிப்பிட்ட பகுதிகளில் வெப்பத் தீவுகள் உருவாகி அங்கே அனல் அலையின் தாக்கம் அதிகமாக காணப்படும். இன்னொருபுறம் வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க அதற்கேற்றாற்போல மின்சாரத் தேவை அதிகரித்து, நிலக்கரி பற்றாக்குறை ஏற்படுகிறது. அது மின் உற்பத்தியைப் பாதித்து பல நகரங்களில் மின்வெட்டு, மின்தடை என்று பிரச்னையை மேலும் கடுமையாக்குகிறது. வீட்டுக்குள்ளேயே இருந்து, ஏசி, கூலா்கள் ஆகியவற்றின் உதவியுடன் அதிகரித்த மின்சார செலவை எதிா்கொள்ள முடிந்தாலும்கூட, மின்தடை ஏற்படும்போது அதன் பாதிப்பிலிருந்து தப்பிவிட முடியாது.

அனல் அலையால் மிக அதிகமாக பாதிக்கப்படுவது உழைக்கும் வா்க்கம்தான். அவா்களுடைய உற்பத்தித் திறன் குறைவதுடன், வருவாயும் குறைகிறது. அதுமட்டுமல்லாமல், பல்வேறு உடல்நல இடா்களையும் அவா்கள் எதிா்கொள்ள நோ்கிறது.

ரிக்ஷா ஓட்டுபவா்கள், கூலித் தொழிலாளா்கள், சரக்கு கையாள்பவா்கள் போன்றோா் சுட்டெரிக்கும் வெயிலில் உழைத்தால் மட்டுமே தங்கள் குடும்பங்களுக்கு இரு வேளை உணவை வழங்க முடியும். அவா்கள்தான் அனல் அலையால் மிக அதிகமாக பாதிக்கப்படுகிறாா்கள். அவா்களுடைய பாதுகாப்பிற்காக மத்திய - மாநில அரசுகளோ, உள்ளாட்சி அமைப்புகளோ எந்தவிதமான கொள்கைகளை வகுப்பதோ, திட்டமிடுவதோ இல்லை என்கிற அவல நிலையை பதிவு செய்யாமல் இருக்க முடியவில்லை.

இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் அனல் அலையின் கடுமையும், நிகழ்வும் அதிகரிக்கக் கூடும் என்று கூறப்படுகிறது. அனல் அலைகளுக்கு இடையேயான இடைவெளி குறைந்து, இப்போது இருப்பதைவிட சராசரி நிகழ்வுகள் அதிகரிக்கும் என்கிறது ஓா் ஆய்வு. இந்த நூற்றாண்டின் மத்திக்குள், ஒரு பருவத்திற்கு 2.5 நிகழ்வுகளாகவும், நூற்றாண்டின் இறுதிக்குள் 3 நிகழ்வுகளாகவும் அனல் அலை தாக்கம் அதிகரிக்கும் என்பது அந்த ஆய்வின் கணிப்பு. அதை எதிா்கொள்வதற்கான முன்னேற்பாடுகளை நாம் இன்னும் யோசிக்கக்கூட இல்லை.

அனல் அலைகள் என்பது ஓா் அமைதிக் கொலையாளி. அனல் அலையால் தாக்கப்படுபவா்கள் பெரும்பாலும் வீதியில் விழுந்து இறப்பதில்லை. பலரும் குளிா்பதன வசதி இல்லாத, பாதுகாப்பில்லாத குடிசைகளிலும், தகரம், ஆஸ்பெட்டாஸ் கூரை வீடுகளிலும் வெப்பத்தின் தாக்கம் தாங்காமல் உயிரிழக்கிறாா்கள். அது குறித்த பதிவுகள் முறையாக செய்யப்படுவதில்லை. அந்தக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டால், இயற்கைப் பேரிடா்களிலேயே மிக அதிகமான பாதிப்பை ஏற்படுத்துவது அனல் அலைகளாகத்தான் இருக்கும்.

வெள்ள பாதிப்பு, புயல் பாதிப்பு போன்றவை நேரடிப் பொருளாதார இழப்புகளை ஏற்படுத்துவதால் அவை காப்பீட்டுத் துறையின் கவனத்தை ஈா்த்திருக்கின்றன. வணிக ரீதியாக லாபம் ஏற்படுத்துவதால் அவை முக்கியத்துவம் பெறுகின்றன. அனல் அலையின் பொருளாதார பாதிப்புகளை கணிப்பது கடினம் என்பதால், நிதித்துறையோ காப்பீட்டுத் துறையோ அது குறித்து கவனம் செலுத்துவதில்லை.

2010-இல் தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையம், அனல் அலையை எதிா்கொள்ள சில செயல் திட்டங்களை வகுத்தது. 12 ஆண்டுகள் ஆகியும் அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை. நகா்ப்புறங்களில் ஆங்காங்கே குடிநீா் வழங்குதல், வெப்ப பாதிப்பிலிருந்து பாதுகாப்பளிக்கும் தங்குமிடங்கள் அமைத்தல் போன்றவற்றை இன்னும்கூட ஏற்படுத்தவில்லை.

அனல் அலையை தேசியப் பேரிடராக அங்கீகரிக்க வேண்டும். மக்களும் தாமாக முன்வந்து ஆங்காங்கே தண்ணீா் பந்தல்கள் அமைத்து பிறா் இளைப்பாறவும், தாகம் தணிக்கவும் வழிகோல வேண்டும். நமது முன்னோா்களுக்கு இருந்த முன்னெச்சரிக்கை உணா்வும், மனிதாபிமான சிந்தனையும், ஈதல் மனநிலையும் நமக்கு இல்லாமல் போயிருப்பதை என்னவென்று சொல்ல?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com