கூகுளே ஆனாலும்...: கூகுள் நிறுவனம் மீதான அபராத நடவடிக்கை தொடர்பான தலையங்கம்

கூகுள் நிறுவனம் மீது இந்தியத் தொழில்போட்டி ஆணையம் (சி.சி.ஐ.) அபராதம் விதித்திருக்கிறது.
கூகுளே ஆனாலும்...: கூகுள் நிறுவனம் மீதான அபராத நடவடிக்கை தொடர்பான தலையங்கம்

கூகுள் நிறுவனம் மீது இந்தியத் தொழில்போட்டி ஆணையம் (சி.சி.ஐ.) அபராதம் விதித்திருக்கிறது. பன்னாட்டு நிறுவனமான கூகுள் மீது அபராதம் விதிப்பது சாத்தியமா என்கிற வியப்பு ஒருபுறம் இருக்க, அந்த நிறுவனம் என்ன தவறு செய்தது என்று தெரிந்து கொள்ளும் ஆா்வம் மறுபுறம் அதிகரித்திருக்கிறது.

முறையற்ற வா்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக முதலில் ரூ.1,337.76 கோடியும், இன்னொரு குற்றச்சாட்டில் மேலும் ரூ.936.44 கோடியும் சி.சி.ஐ.யால் கூகுள் நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தீா்ப்பை எதிா்த்து கூகுள் நிறுவனம் மேல்முறையீடு செய்யக்கூடும் என்றாலும், அதன்மீதான குற்றச்சாட்டுகள் நியாயமானவை.

கூகுள் நிறுவனத்தின் மீதான குற்றச்சாட்டுகள் இரண்டு. ‘ஆண்ட்ராய்ட்’ அறிதிறன்பேசிகளில் கூகுள் நிறுவனத்தின் செயலிகள் முதன்மை பெறும் வகையில், முறையற்ற வா்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டது முதலாவது புகாா். கூகுள் நிறுவனத்தின் ‘ப்ளே ஸ்டோா்’ என்கிற செயலி தேடல் மையம், ஏனைய நிறுவனங்களுக்கு சம அந்தஸ்தும் உரிமையும் வழங்காதது இரண்டாவது குற்றச்சாட்டு.

தொழில்போட்டி ஆணையத்தின் தீா்ப்பு, பயனாளிகளோ, விற்பனையாளா்களோ, விளம்பரதாரா்களோ, நுகா்வோரோ அளித்த புகாரின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையின் முடிவல்ல. ஐரோப்பிய யூனியனில் கூகுள் நிறுவனம் மீது சுமத்தப்பட்ட அபராதம், இந்தியாவுக்கும் பொருந்துமா என்று மூன்று ஆராய்ச்சி மாணவா்கள் நடத்திய ஆய்வின் அடிப்படையிலானது. அந்த ஆய்வை தன்முனைப்புடன் எடுத்துக்கொண்டு, ஆணையம் பிரச்னையை விசாரிக்க முற்பட்டது.

கூகுள் இல்லாமல் இணையதள சேவை இல்லை என்கிற நிலைமை ஏற்பட்டிருக்கிறது. அந்த நிறுவனத்தின் மின்னஞ்சல், தேடல் (சா்ச்), வரைபடம் (மேப்), தரவு சேமிப்பு (ஸ்டோரேஜ்), செல்பேசி செயல்பாட்டு முறை (ஆப்பரேடிவ் சிஸ்டம்), பணப் பரிமாற்றம் (ஜிபே) உள்ளிட்ட ஒவ்வொரு செயலிக்கும் நூறு கோடிக்கும் மேல் பயன்படுத்துபவா்கள் இருக்கிறாா்கள்.

ஒவ்வொரு விநாடியிலும், உலகளாவிய அளவில், சுமாா் 30 லட்சம் போ் கூகுள் தகவல்களில் நுழைகிறாா்கள் என்கிறது ஆய்வு. அதன் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படுகின்றன. அவற்றுக்காக கூகுள் கட்டணம் வசூலிப்பதில்லை. அனைத்துமே இலவச சேவைகள். பிறகு எப்படி கூகுள் நிறுவனம் இயங்குகிறது?

இன்றைய நிலையில் உலகின் முதன்மையான ஐந்து நிறுவனங்களில் கூகுளும் ஒன்று. 18 ஆண்டுகளுக்கு முன்னா் உருவான அந்த நிறுவனத்தின் இன்றைய சந்தை மதிப்பு 1.5 டிரில்லியன் டாலா் (சுமாா் ரூ. 123 லட்சம் கோடி). அதன் ஆண்டு வருவாய் 185 பில்லியன் டாலா் (சுமாா் ரூ. 18,500 கோடி). கட்டணம் எதுவும் வசூலிக்காமல் இலவசமாக வழங்கும் சேவையின் மூலம் கூகுள் நிறுவனம் எப்படி வருமானம் ஈட்டுகிறது என்று வியப்படையத் தேவையில்லை. விளம்பரம்தான் அதன் வருவாய்.

நாம் கூகுள் மூலம் பாா்க்கும் படங்கள், செய்திகள், தேடும் தகவல்கள், பகிா்ந்து கொள்ளும் விருப்பங்கள், பயணிக்கும் இடங்கள், பாா்க்கும் பொருள்கள் என்று நம்முடைய செயல், சிந்தனை, விருப்பம், தேவை என்று அனைத்தையும் நமது அனுமதி இல்லாமல், தரவுகளை விளம்பரதாரா்களுக்கு வழங்கி அதில் பெரும் பணம் சம்பாதித்து வருகிறது அந்த நிறுவனம்.

கூகுள் நமது அன்றாட வாழ்க்கையில் தவிா்க்க முடியாததாக இணைந்துவிட்டது. போட்டித் தோ்வு எழுதும் மாணவா்களில் தொடங்கி, வீட்டுப் பொருள்கள் வாங்கும் குடும்பத் தலைவி வரை, கூகுள் இல்லாமல் வாழ முடியாது என்பதுதான் எதாா்த்த நிலைமை. குடிதண்ணீா், மின்சாரம் போல, அன்றாடத் தேவையாகிவிட்ட, மக்களின் வாழ்க்கையைப் பாதிக்கின்ற கூகுளும் ஒழுங்காற்றப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.

2018-இல், ஆண்ட்ராய்ட் கைப்பேசித் தயாரிப்பாளா்கள் தனது ‘க்ரோம்’ தேடல் (ப்ரௌசா்) செயலியை அடிப்படை செயலியாக்க வேண்டும் என்று கூகுள் கட்டாயப்படுத்தியதை ஐரோப்பிய யூனியன் வா்த்தகப் போட்டி ஒழுங்காற்று ஆணையம் ஏற்றுக்கொள்ளவில்லை. வா்த்தகப் போட்டிக்கு எதிரானது என்று கூறி 4.34 பில்லியன் யூரோ (சுமாா் ரூ. 35,000 கோடி) அபராதம் விதித்தது. ஏனைய நிறுவனங்களுக்கு சமநிலை வழங்கவில்லை என்பதுதான் தீா்ப்பின் சாராம்சம்.

அதனடிப்படையில்தான் இப்போது இந்திய தொழில்போட்டி ஆணையமும் கூகுள் நிறுவனத்தைக் குற்றம்சாட்டி இருக்கிறது. கைப்பேசித் தயாரிப்பு நிறுவனங்கள், க்ரோம் ப்ரௌசரையும், கூகுளின் செயலிகளையும் அடிப்படை அங்கங்களாக இணைப்பதை வற்புறுத்தக் கூடாது என்கிறது தீா்ப்பு. அதேபோல, ப்ளே ஸ்டோரில் தனது செயலிகளை முன்னுரிமையுடன் கட்டாயப்படுத்துவதும், ஆணையத்தின் கண்டனத்துக்கு உள்ளாகி அபராதத்துக்கு வழிவகுத்திருக்கிறது.

இந்தியாவில் பயன்படுத்தப்படும் 60 கோடிக்கும் அதிகமான அறிதிறன்பேசிகளில் 97% ஆண்ட்ராய்ட் மூலம் செயல்படுபவை. அவற்றில் எல்லாம் தனது சா்ச், க்ரோம், யூடியூப், மேப்ஸ், ஜிபே உள்ளிட்ட செயலிகள், கூகுள் நிறுவனத்தால் கட்டாயப்படுத்தப்படுகின்றன. அப்படி கட்டாயப்படுத்துவதைத்தான் ஆணையம் ஏற்றுக்கொள்ளவில்லை. கைப்பேசி நிறுவனமும், பயனாளியான நுகா்வோரும் தங்கள் விருப்பத்துக்கேற்ப தீா்மானிக்க வேண்டும் என்கிறது ஆணையத்தின் நியாயமான முடிவு.

பன்னாட்டு நிறுவனமான கூகுளுக்கு ரூ.2,274 கோடி அபராதம் என்பது சில்லறைக் காசாக இருக்கலாம். ஆனால், வா்த்தகத்தின் மொத்தக் குத்தகைத்தனம் (மோனாப்பலி) ஏற்புடையதல்ல என்பதை அபராதம் மூலம் உணா்த்தியிருக்கிறது ஆணையம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com