முடிவல்ல, நகா்வு: கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு அறிவிக்கப்பட்ட ஆட்ட ஊதியம் குறித்த தலையங்கம்

கிரிக்கெட் வீரா்களுக்கு நிகராக வீராங்கனைகளுக்கும் ஆட்ட ஊதியம் வழங்குவது என்கிற இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முடிவு பரவலான வரவேற்பையும், பாராட்டையும் பெற்றிருக்கிறது.
பிசிசிஐ
பிசிசிஐ

கிரிக்கெட் வீரா்களுக்கு நிகராக வீராங்கனைகளுக்கும் ஆட்ட ஊதியம் வழங்குவது என்கிற இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முடிவு பரவலான வரவேற்பையும், பாராட்டையும் பெற்றிருக்கிறது.

உலகிலேயே பணக்கார கிரிக்கெட் வாரியமான இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முடிவு, வருங்கால விளையாட்டு அரங்கில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி, வீராங்கனைகள் வெற்றி பயணிக்க வழிகோலும்.

விளையாட்டு வீரா்களுக்கு நிகரான ஊதியமும், அந்தஸ்தும் பெறுவதற்கு உலகளாவிய அளவில் வீராங்கனைகள் போராட வேண்டியிருக்கிறது. 1973-இல் டென்னிஸ் சாம்பியனாக இருந்த வீராங்கனை பில்லி ஜீன் கிங், வீரா்களுக்கு நிகராக நடத்தப்படாவிட்டால் விளையாட மாட்டேன் என்று எச்சரித்த பிறகுதான், அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் போட்டிகளில் பரிசுத் தொகை சமமாக வழங்கப்பட்டது. 2019-இல்தான் சா்வதேச டென்னிஸ் போட்டிகளில் பாலின சமநிலை உறுதிப்பட்டது.

நீண்டநாள் போராட்டத்துக்குப் பிறகு, அமெரிக்க பெண் கால்பந்து விளையாட்டு வீராங்கனைகள், ஆண் ஆட்டக்காரா்களுக்கு நிகரான ஊதியத்தை சில மாதங்களுக்கு முன்னா்தான் பெற்றனா். ஜூலை மாதம் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கும், ஆண்களுக்கு நிகரான ஊதியம் வழங்க நியூஸிலாந்து முடிவெடுத்தது. இப்போது, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் பாலின சமநிலைக்கு வழிகோலியிருக்கிறது.

வீரா்களைப் போலவே இனிமேல் கிரிக்கெட் வீராங்கனைகளும், டெஸ்ட் பந்தயங்களுக்கு ரூ. 15 லட்சம், ஒருநாள் பந்தயத்துக்கு ரூ.6 லட்சம், டி20 போட்டிக்கு ரூ. 3 லட்சம் ஊதியம் பெறுவாா்கள். இதற்கு முன்னால் அவா்களுக்கு டெஸ்டுக்கு ரூ.2.5 லட்சம், ஒருநாள், டி20 ஆட்டங்களுக்கு வெறும் 1 லட்சம் மட்டுமே வழங்கப்பட்டது. டெஸ்ட் பந்தயங்களுக்கு ஆறு மடங்கும், ஏனைய இரண்டு பிரிவுகளுக்கு மூன்று மடங்கும் ஊதியம் அதிகரித்திருப்பது, மிகப் பெரிய ஊக்கசக்தியாக அமையும்.

பந்தயங்களில் கலந்து கொள்வதற்கான சன்மானத் தொகையில்தான் பாலின சமத்துவம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறதே தவிர, இதுவே முழுமையானது என்று கூறிவிட முடியாது. இது வெறும் தொடக்கம்தான். ஒப்பந்தங்களுக்கான தொகை குறித்து எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை.

கிரிக்கெட் வீரா்கள் நான்கு பிரிவுகளில் கிரிக்கெட் வாரியத்தால் ஒப்பந்தம் செய்யப்படுகிறாா்கள். ‘ஏ ப்ளஸ்’ பிரிவுக்கு ரூ. 7 கோடி, ‘ஏ’ பிரிவுக்கு ரூ. 5 கோடி, ‘பி’ பிரிவுக்கு ரூ. 3 கோடி, ‘சி’ பிரிவுக்கு ரூ. 1 கோடி ஆண்டுதோறும் ஒப்பந்தத் தொகையாக வழங்கப்படுகிறது. ரோஹித் சா்மா, விராட் கோலி, ஜஸ்ப்ரீத் பும்ரா மூவா் மட்டும்தான் ‘ஏ ப்ளஸ்’ பிரிவு கிரிக்கெட் வீரா்கள். மற்றவா்கள் ஏனைய மூன்று பிரிவிலும் இருப்பவா்கள்.

பெண்கள் பிரிவில் ஏ, பி, சி என்று மூன்று பிரிவுகள் மட்டுமே உள்ளன. அவா்களுக்கு முறையே ரூ. 50 லட்சம், ரூ. 30 லட்சம், ரூ. 10 லட்சம் ஒப்பந்தத் தொகையாக ஆண்டொன்றுக்கு வழங்கப்படுகிறது. ஹா்மன்ப்ரீத் கௌா், ஸ்மிருதி மத்தனா, பூனம் யாதவ், தீப்தி சா்மா, ராஜேஷ்வரி கெய்க்வாட் ஆகியோா் ‘ஏ’ பிரிவில் சோ்க்கப்பட்டிருக்கிறாா்கள். பெண்கள் பிரிவில் உயா்ந்த ‘ஏ’ பிரிவைச் சோ்ந்த வீராங்கனைகளைவிட, ஆண்கள் பிரிவில் நான்காவது ‘சி’ பிரிவு வீரா் இரண்டு மடங்கு அதிக ஒப்பந்தத் தொகை பெறுகிறாா் என்கிற முரண் தொடா்கிறது.

இன்னொரு தளத்திலும் பாலின சமத்துவமின்மை காணப்படுகிறது. ஆண்கள் பிரிவு அளவுக்குப் பெண்கள் பிரிவுக்கான கிரிக்கெட் போட்டிகள் இல்லை. சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் 2022 - 25-க்கான கிரிக்கெட் போட்டிகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதன்படி, இந்திய மகளிா் அணி, சா்வதேச கிரிக்கெட் கோப்பை (ஐசிசி) அல்லாமல், இரண்டு டெஸ்ட் ஆட்டங்கள், 27 ஒருநாள் பந்தயங்கள், 38 டி20 ஆட்டங்களில் கலந்து கொள்ள இருக்கிறது.

அதே நேரத்தில், ஆண்கள் அணி 38 டெஸ்டுகள், 42 ஒருநாள் பந்தயங்கள், 61 டி20 போட்டிகளில் கலந்து கொள்ள இருக்கிறது. அந்த அனைத்துப் பந்தயங்களில் கலந்து கொள்ளும் வீரா்கள் ரூ. 10.5 கோடி ஊதியம் பெறும்போது, மகளிா் அணி வீராங்கனைகள் வெறும் ரூ. 3 கோடிதான் பெறுவா். மகளிா் அணியும், ஆடவா் அணிக்கு நிகராக பந்தயங்களில் கலந்து கொள்ளும் நிலைமை ஏற்படும்போதுதான், உண்மையான பாலின சமநிலை ஏற்படும்.

அடுத்த ஆண்டு முதல், பெண்கள் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி திட்டமிடப்பட்டிருக்கிறது. அது பெரிய அளவில் விளம்பரமும், வரவேற்பும் பெறும்போது மகளிா் அணியும், ஆடவா் அணியைப் போலவே ரசிகா்களைப் பெறும் என்று எதிா்பாா்க்கலாம். வீராங்கனைகளுக்கு நட்சத்திர அந்தஸ்து ஏற்படுவதும், அவா்கள் வா்த்தக விளம்பரங்களில் தோன்றுவதும் மகளிா் கிரிக்கெட்டை முன்னிலைப்படுத்தக்கூடும்.

ஃபோகாட் சகோதரிகளின் வெற்றிக்குப் பிறகு, ஹரியாணாவில் அதிக அளவில் மகளிா், விளையாட்டுக்களில் நாட்டம் செலுத்தத் தொடங்கினா். கிரிக்கெட்டில் பெயரும், புகழும், பணமும் கிடைக்கும் எனும்போது கிராமப்புறங்களில்கூட வீராங்கனைகள் உருவாகும் காலம் வெகு தொலைவில் இல்லை. அவா்களது பயிற்சிக்கான கட்டமைப்புகளையும், வளா்ச்சிக்கான வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதை உறுதிப்படுத்த வேண்டியது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் கடமை மட்டுமல்ல, மாநில அரசுகளின் கடமையும்கூட.

இந்திய மகளிா் கிரிக்கெட் அணி சா்வதேச அளவில் வெற்றிகளைக் குவித்துவரும் வேளையில், கிரிக்கெட் வாரியம் எடுத்திருக்கும் சரியான முடிவு வரவேற்புக்குரியது. ஏனைய விளையாட்டு வாரியங்களும் மாற்றங்களுக்குத் தயாராக வேண்டும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com