முடிவுகள் சொல்லும் முடிவுகள்! | 7 பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் குறித்த தலையங்கம்

முடிவுகள் சொல்லும் முடிவுகள்! | 7 பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் குறித்த தலையங்கம்

 இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளில் முடிவுகள் பெரும்பாலும் மாநில ஆளுங்கட்சிக்கு சாதகமாக இருப்பதுதான் வழக்கம். சமீபத்தில், வெளியாகியுள்ள 6 மாநிலங்களில் நடந்த 7 பேரவைத் தொகுதி முடிவுகள் ஏறத்தாழ அந்தக் கருத்தை உறுதிப்படுத்துகின்றன.
 உத்தர பிரதேசம், மகாராஷ்டிரம், பிகார், ஹரியாணா, தெலங்கானா, ஒடிஸா ஆகிய மாநிலங்களில் நடந்த 7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 4 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. அவற்றில் 3 இடங்களை அந்தக் கட்சி தக்க வைத்துக்கொண்டிருக்கிறது. கூடுதலாக ஓர் இடத்தையும் வென்றிருக்கிறது. உத்தர பிரதேசம், பிகார், ஒடிஸா மாநிலங்களில் தனது தொகுதிகளைத் தக்கவைத்துக் கொண்டிருப்பதுடன், ஹரியாணாவில் காங்கிரஸிடமிருந்து ஒரு தொகுதியையும் பாஜக கைப்பற்றியிருக்கிறது.
 மேலெழுந்தவாரியாகப் பார்த்தால், 6 மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தல் முடிவுகள் பொதுவான சில அரசியல் போக்குகளை வெளிப்படுத்துகின்றன. தெலங்கானா அரசியலில் காங்கிரஸை பின்னுக்குத் தள்ளி எதிர்க்கட்சி அந்தஸ்து பாஜகவை நோக்கி நகர்வது தெரிகிறது. பிகாரில் எதிர்பார்த்தது போல, ராஷ்டிரிய ஜனதா தளம் - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி பாஜகவை பலவீனப்படுத்தவில்லை என்பது இன்னொரு சமிக்ஞை. ஒடிஸாவில் ஆளும் பிஜு ஜனதா தளத்தை பாஜக வேட்பாளர் தோற்கடித்திருப்பதன் மூலம் அந்த மாநில அரசியலில் மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உருவாகியிருக்கிறது.
 ஹரியாணாவில் பேரவை உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியின் குல்தீப் பிஷ்ணோய், பாஜகவில் இணைந்ததையடுத்து பதவி விலகினார். முன்னாள் காங்கிரஸ் தலைவர் பஜன்லாலின் மகனான பிஷ்ணோய், தனக்குப் பதிலாக தனது மகன் பவ்ய பிஷ்ணோயை பாஜக வேட்பாளராகக் களமிறக்கி, 1968 முதல் தங்களது குடும்பச் சொத்தாகக் கருதிவரும் ஆதம்பூர் தொகுதியில் வெற்றிபெறச் செய்திருக்கிறார்.
 முந்தைய பரோடா, எலனாபாத் இடைத்தேர்தல்களில் எதிர்கொண்ட தோல்விகளின் பின்னடைவுக்குப் பிறகு ஆதம்பூர் வெற்றி ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டருக்கு ஆறுதலாக அமைகிறது. அதுமட்டுமல்ல, காங்கிரஸின் பலவீனத்தையும், ஆம் ஆத்மி கட்சியின் ஹரியாணா பகல் கனவையும் உணர்த்துகிறது பாஜகவின் இடைத்தேர்தல் வெற்றி.
 மகாராஷ்டிரத்தின் அந்தேரி கிழக்குத் தொகுதியில், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை வேட்பாளர் ருதுஜா ரமேஷ் லட்கே வெற்றி பெற்றிருப்பதில் வியப்பில்லை. தொகுதி உறுப்பினரின் மறைவைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் அத்தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட்டால், ஏனைய கட்சிகள் அவரை எதிர்த்துக் களமிறங்குவதில்லை என்கிற மரபு அங்கே பின்பற்றப்படுகிறது. அதனால் தயக்கத்துடன் பாஜக போட்டியிலிருந்து விலகியதும், சிறிய கட்சிகளும், சுயேச்சைகளும் மட்டுமே களம்கண்ட தேர்தலில் ருதுஜா லட்கே வெற்றி பெற்றிருப்பதும் எதிர்பாராததல்ல.
 பிகாரில் இரண்டு தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்தன. கோபால்கஞ்ச் தொகுதியை பாஜகவும், மொகாமா தொகுதியை ஆளும் ஆர்ஜேடி-ஜேடியூ கூட்டணியும் தக்கவைத்துக்கொண்டன என்றாலும், இரண்டு கட்சிகளும் செல்வாக்குச் சரிவை எதிர்கொள்கின்றன என்பதை, குறைந்த வாக்கு வித்தியாசம் உணர்த்துகிறது. ஓவைஸியின் மஜ்லீஸ் கட்சி 12,000 வாக்குகள் கோபால்கஞ்ச் தொகுதியில் பெற்றிருப்பது அந்தக் கட்சியின் செல்வாக்கு குறையவில்லை என்பதையும், ஆளும் கூட்டணியின் முஸ்லிம் வாக்குவங்கிக்கு அந்தக் கட்சி பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதையும் உணர்த்துகிறது.
 ஒடிஸா தாம்நகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் சூர்யவம்சி சுராஜ் 9,881 வாக்குகள் வித்தியாசத்தில் ஆளும் பிஜு ஜனதா தள வேட்பாளரைத் தோற்கடித்திருப்பதை வாரிசின் வெற்றி என்றோ, அனுதாப வெற்றி என்றோ புறந்தள்ளிவிட முடியாது. முதல்வர் நவீன் பட்நாயக் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, கடந்த 22 ஆண்டுகளில், டலசாரா, லெட்சுமிபூர் என இதுவரை இரண்டு இடைத்தேர்தல்களில்தான் பிஜு ஜனதா தளம் பின்னடைவைச் சந்தித்திருக்கிறது.
 2009-இல் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்ட பிறகு ஆளும் பிஜு ஜனதா தளம் எந்தவொரு இடைத்தேர்தலிலும் தோல்வியைச் சந்தித்ததில்லை. இந்தமுறை முதன்முறையாக பிஜு ஜனதா தளத்தின் அதிருப்தி வேட்பாளர் களமிறங்கியதால், பாஜக தனது தொகுதியைத் தக்கவைத்துக்கொள்ள முடிந்தது. பிஜு ஜனதா தளம் ஆட்டம் கண்டிருப்பதன் அடையாளமாக பாஜகவின் இடைத்தேர்தல் வெற்றி பார்க்கப்படுவதில் நியாயமிருக்கிறது.
 தெலங்கானா முனுகோடு தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி வெற்றியடைந்திருப்பதும், பாஜக தோல்வியடைந்திருப்பதும் செய்திகளல்ல. காங்கிரஸிலிருந்து பாஜகவுக்குத் தாவிய ராஜ்கோபால் ரெட்டி அந்தக் கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். காங்கிரஸ் வசமிருந்த அந்தத் தொகுதியை பாஜக கைப்பற்ற முடியவில்லை என்றாலும், காங்கிரஸை பின்னுக்குத் தள்ளி இரண்டாமிடத்தைப் பிடித்திருக்கிறது. ராகுல் காந்தி தெலங்கானா மாநிலத்தில் தனது "இந்திய ஒற்றுமை நடைப்பயணம்' மேற்கொள்ளும் வேளையில், காங்கிரஸுக்கு ஏற்பட்டிருக்கும் இடைத்தேர்தல் பின்னடைவு அந்தக் கட்சியின் பலவீனத்தை வெளிச்சம் போடுகிறது.
 இடைத்தேர்தல் முடிவுகள் மூன்று செய்திகளைத் தெரிவிக்கின்றன. பாஜகவின் செல்வாக்கு நாடு தழுவிய அளவில் தொடர்கிறது; மாநிலக் கட்சிகள் அந்தந்த மாநிலத்தில் கோலோச்சுவதுடன் பாஜகவுக்குக் கடுமையான போட்டியையும் தருகின்றன; காங்கிரஸ் தொடர்ந்து பலவீனமாகி மாநில கட்சிகளுக்கு அந்த இடத்தை விட்டுக் கொடுக்கிறது!
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com