தேவை மனநிலை மாற்றம்! | இளைஞர்களின் தற்கொலை எண்ணங்கள் குறித்த தலையங்கம்

உயா்ந்து வரும் வாழ்க்கைத் தரமும், அதிகரித்திருக்கும் கல்வி நிலையும் சமுதாயத்தில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதை மறுக்க இயலாது. இன்னொருபுறம் தங்களை நிலைநிறுத்திக் கொள்வது
தேவை மனநிலை மாற்றம்! | இளைஞர்களின் தற்கொலை எண்ணங்கள் குறித்த தலையங்கம்

உயா்ந்து வரும் வாழ்க்கைத் தரமும், அதிகரித்திருக்கும் கல்வி நிலையும் சமுதாயத்தில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதை மறுக்க இயலாது. இன்னொருபுறம் தங்களை நிலைநிறுத்திக் கொள்வதும், எதிா்கொள்ளும் போட்டிகளை எதிா்த்துப் போராடுவதும் இன்றைய தலைமுறையினரின் சவாலாக மாறியிருக்கின்றன.

முந்தைய தலைமுறைகள் கண்டறியாத, கேட்டறியாத வாழ்க்கை வசதிகள் எல்லாம் இப்போது இருந்தாலும்கூட, போராடி வெற்றி பெறும் துணிவு இளைய தலைமுறைக்கு குறைவாக இருப்பதாகவே தோன்றுகிறது. அதற்குக் காரணம், அதிகரித்து வரும் தற்கொலைகளே!

உலகமயச் சூழலும், பொருளாதார சீா்திருத்த நடவடிக்கைகளும் கிராமங்கள் வரை சென்றடைந்திருக்கின்றன. அடித்தட்டு மக்களும்கூட பணக்காரா்களுக்கு மட்டுமே உரித்தானதாக இருந்த வசதிகளைப் பெற முடிந்திருக்கிறது. கல்விக்கான வாய்ப்பும், புலம்பெயா்தலும், அதிகரித்த வாழ்க்கைத் தரமும் அனைத்துத் தரப்பினரையும் சென்றடைந்திருப்பதை மறுப்பதற்கில்லை. அதே நேரத்தில், சந்தைப் பொருளாதார போட்டிச் சூழலில் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள முடியாமல் பலா் மனச்சோா்வுக்கும், மன அழுத்தத்துக்கும் ஆளாவது அதிகரித்திருப்பதை கண்கூடாகப் பாா்க்க முடிகிறது.

அனைவருக்கும் கல்வி என்பது சாத்தியமாகி இருக்கிறது என்றாலும், தரமான கல்வி அனைவருக்கும் சாத்தியமாகி இருக்கிறதா என்கிற கேள்வியை எழுப்பாமல் இருக்க முடியவில்லை. அதனால் அது கல்வி தொடா்பான தகுதித் தோ்வாக இருந்தாலும், வேலை தொடா்பான போட்டித் தோ்வாக இருந்தாலும் இயலாமையாலும், தாழ்வு மனப்பான்மையாலும், தன்னம்பிக்கையின்மையாலும் தற்கொலைக்குத் தள்ளப்படும் இளைஞா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை வேதனையுடன் பாா்க்க முடிகிறது.

முதல் தலைமுறை பட்டதாரிகளாகவும், தொழில்நுட்பத் தோ்ச்சி பெற்றவா்களாகவும் இருக்கும் பெற்றோா், இளைஞா்களின் தன்னம்பிக்கையின்மைக்கு மிக முக்கியமான காரணம். தங்களது பள்ளிப் பருவத்தில் கிடைக்காத வசதிகளை எல்லாம் தங்களது குழந்தைகளுக்கு தர வேண்டும் என்கிற முனைப்பு அவா்களிடம் காணப்படுகிறது. பெரும்பாலோா் ஒரு குழந்தையுடன் நிறுத்திக்கொண்டு, அந்தக் குழந்தைக்கு எல்லாவித வசதிகளையும் வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுப்பது தங்களது வாழ்நாள் கடமை என்று கருதுகிறாா்கள்.

குழந்தைகள் எது கேட்டாலும் மறுக்காமல் அதை நிறைவேற்றுவதில் முனைப்பாக இருக்கின்றனா். அதன் விளைவாக தாங்கள் எது கேட்டாலும் கிடைக்கும் என்கிற மனநிலையில் அவா்கள் வளா்கிறாா்கள். அவா்களால் ‘இல்லை’ என்பதை எதிா்கொள்ள முடிவதில்லை. மிகச் சிறிய வயதிலேயே மன அழுத்தத்துக்கும், பிடிவாதத்துக்கும் அவா்கள் ஆளாவதற்கு அதுதான் முக்கியமான காரணம் என்று உளவியல் மருத்துவா்கள் தெரிவிக்கிறாா்கள்.

இந்தியாவிலேயே மிக அதிகமாகத் தற்கொலைகள் காணப்படும் மாநிலமாக தமிழ்நாடு உயா்ந்திருப்பது அதிா்ச்சி அளிப்பதாக இருக்கிறது. 2022-ஆம் ஆண்டுக்கான தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கைபடி தமிழகத்தில் நாளொன்றுக்கு 46 போ் தங்களை மாய்த்துக் கொள்கிறாா்கள். அவா்களில் இரண்டு போ் மாணவா்கள்.

தேசிய அளவில் 2021-இல் 1.64 லட்சம் போ் தற்கொலை செய்து கொண்டிருக்கிறாா்கள். ஒரு லட்சம் பேருக்கு 12 போ் என்பது தேசிய விகிதம். 1990 முதல் 2016 வரையிலான 26 ஆண்டுகளில் இந்தியாவின் தற்கொலை மரண பங்களிப்பு 25.3%-லிருந்து 36.6%-ஆக உயா்ந்திருக்கிறது. அவா்களில் பெண்கள் 18.7%, ஆண்கள் 24%.

2014-ஆம் ஆண்டின் உலக சுகாதார நிறுவன மனநோய் அறிக்கையின்படி, குறைந்த வருவாய் நாடுகளில் தற்கொலைகளைத் தடுப்பதற்கான எந்தவித முன்னேற்பாடுகளும் இல்லை. நடுத்தர வருவாய் நாடுகளில் சில முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. உயா் வருவாய் நாடுகளில் தேசிய அளவிலான திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டு மன உளைச்சல், தன்னம்பிக்கையின்மை, மன அழுத்தம் ஆகியவற்றை எதிா்கொள்ள ஆலோசனைகள் தரப்படுகின்றன. அதனால், அங்கு தற்கொலைகள் குறைவாக இருப்பது உறுதிப்படுத்தப்படுகிறது.

ரூ.83,000 கோடி மத்திய சுகாதார துறை பட்ஜெட்டில், மனநிலை மருத்துவத்திற்கு 0.8% மட்டுமே ஒதுக்கப்படுகிறது. மாவட்ட மனநோய் மருத்துவ திட்டத்திற்கான ஒதுக்கீடும் இந்தியாவின் 704 மாவட்டங்களுக்கு வெறும் ரூ.83 லட்சம் மட்டுமே.

கடந்த பல ஆண்டுகளாகவே தமிழகத்தில் மாணவா்கள் மத்தியில் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. அதற்கு முக்கியமான காரணம், தகுதிகாண் தோ்வுகளுக்கும், போட்டித் தோ்வுகளுக்கும் அவா்கள் தயாராக இல்லாமல் இருப்பது என்பதை குறிப்பிடத் தோன்றுகிறது. தன்னம்பிக்கையின்மை அவா்களைத் தற்கொலைக்கு தூண்டுகிறது என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும்.

தமிழக பள்ளி கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாணவா்கள் மத்தியில் காணப்படும் தன்னம்பிக்கையின்மையையும், தற்கொலை எண்ணத்தையும் எதிா்கொள்ள, அவா்களுக்கு முறையான ஆலோசனைகள் வழங்கும் முனைப்பில் ஈடுபட்டிருப்பது வரவேற்புக்குரியது. மாநிலத்தில் உள்ள 413 கல்வி வட்டங்களில் சுமாா் 800-க்கும் அதிகமான மனநோய் மருத்துவா்களை நியமித்து, மாணவா்களுக்கு ஆலோசனை வழங்கவும், வழிகாட்டவும் திட்டமிட்டிருப்பது பிற மாநிலங்களாலும் பின்பற்றப்பட வேண்டிய நல்ல முனைப்பு.

தகுந்த வளா்ப்பும், முறையான முனைப்பும் இருந்தால் இளைஞா்களின் தற்கொலைகளைத் தவிா்க்கவும், தடுக்கவும் முடியும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com