நில், கவனி, செல்..! | போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதக் கட்டணம் குறித்த தலையங்கம்

புதிய மோட்டார் வாகன திருத்தச் சட்டத்தின்படி, 46 வகையான விதிமீறல்களுக்கு அபராதம் உயர்த்தப்பட்டுள்ளது.
நில், கவனி, செல்..! | போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதக் கட்டணம் குறித்த தலையங்கம்


சாலை விபத்துகளைக் குறைக்கும் வகையில், போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதக் கட்டணத்தை பலமடங்கு உயர்த்த வகை செய்யும் மோட்டார் வாகன திருத்தச் சட்டம் தமிழகத்தில் அமலுக்கு வந்துள்ளது. 2019-ஆம் ஆண்டில் மத்திய அரசு கொண்டுவந்த இந்த திருத்தச் சட்டம் பல மாநிலங்களில் ஏற்கெனவே அமலுக்கு வந்துவிட்ட நிலையில், சுமார் மூன்று ஆண்டுகள் கழித்து இப்போதுதான் அரசாணை வெளியிட்டு நடைமுறைப்படுத்தியிருக்கிறது தமிழக அரசு.

இந்தியாவில் ஆண்டுக்கு ஆண்டு சாலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தகவல்படி, 2021-ஆம் ஆண்டில் சாலை விபத்துகளில் 1.55 லட்சம் பேர் உயிரிழந்தனர். நாட்டில் இதுவரை இல்லாத அதிகபட்ச உயிரிழப்பு இதுவாகும். சராசரியாகப் பார்த்தால் தினமும் 426 பேர், ஒரு மணி நேரத்துக்கு 18 பேர் வீதம் உயிரிழந்துள்ளனர். மொத்தம் 4.03 லட்சம் சாலை விபத்துகள் நடந்துள்ளன. இவற்றில் 3.71 லட்சம் பேர் காயமடைந்துள்ளனர். முந்தைய 2020-ஆம் ஆண்டில் சாலை விபத்துகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.33 லட்சம்.

அதிக வேகம், போக்குவரத்து விதிமுறைகளைப் பின்பற்றாதது, மோசமான சாலைகள் இவைதான் சாலை விபத்துகளுக்குப் பொதுவான காரணம். இதில், போக்குவரத்து விதிமுறைகளை முறையாகப் பின்பற்றினால் ஏராளமான உயிர்கள் காப்பாற்றப்படும் வாய்ப்பு உள்ளது. ஆனால், சாலை விதிகளை அலட்சியம் செய்வதில் இந்தியாபோல ஒரு நாடு இருக்குமா என்கிற அளவுக்குதான் வாகன ஓட்டிகளின் செயல்பாடுகள் உள்ளன.

சிக்னலில் பச்சை விளக்கு எப்போது ஒளிரும் என உன்னிப்பாக கவனித்து ஒரு நொடிகூட வீணாக்காமல் சீறிப்பாயும் வாகன ஓட்டிகள், அதே மஞ்சள் விளக்கு ஒளிரும்போது கவனிப்பதோ, சிவப்பு விளக்கு ஒளிரும்போது நிற்பதோ இல்லை. ஒரு சிக்னலில் நின்று ஐந்து நிமிஷம் கவனித்தாலே வாகன ஓட்டிகளின் விதிமீறல்களைத் தெரிந்து கொள்ள முடியும்.

புதிய மோட்டார் வாகன திருத்தச் சட்டத்தின்படி, 46 வகையான விதிமீறல்களுக்கு அபராதம் உயர்த்தப்பட்டுள்ளது.

உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனம் ஓட்டினால் முன்பு ரூ.500-ஆக இருந்த அபராதத் தொகை இப்போது ரூ.5,000-ஆக பத்து மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. கைப்பேசியில் பேசிக் கொண்டே மோட்டார் சைக்கிள், கார் உள்ளிட்ட வாகனங்களை ஓட்டினால் இப்போது ரூ.1000 அபராதம் விதிக்கப்படுகிறது. இதே விதிமீறலை செய்து இரண்டாவது முறை பிடிபட்டால் இனி ரூ.10,000 அபராதம் செலுத்த வேண்டும்.

கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களை 18 வயதுக்கு உள்பட்ட சிறுவர்கள் ஓட்டினால், அவர்களுடைய பெற்றோருக்குத் தண்டனை விதிக்கப்படும். மேலும், வாகனங்களுக்கான பதிவு ரத்து செய்யப்படுவதோடு, இந்தக் குற்றத்துக்காக 3 ஆண்டுகள் வரை சிறை மற்றும் ரூ. 25,000 வரை அபராதமும் விதிக்கப்படும் போன்றவை முக்கிய அம்சங்கள்.

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் இப்போது விதிக்கப்படும் ரூ.10,000 அபராதம் அதிகரிக்கப்படாமல் அப்படியே தொடர்கிறது. மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்குவது சாலை விபத்துகளுக்கான முக்கியமான காரணம். தமிழகத்தில் 2019, ஜனவரி முதல் 2022, பிப்ரவரி வரை மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்கியதாக 4.22 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.18.70 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. 2018-ஆம் ஆண்டு முதல் 2022, பிப்ரவரி வரை மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்கியதால் 1,108 சாலை விபத்துகள் ஏற்பட்டு 262 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் தமிழக காவல் துறை தாக்கல் செய்த பதில் மனுவில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை போன்ற பெருநகரங்களில் மட்டுமன்றி சிறிய நகரங்களிலும் இளைஞர்கள் சாலைகளில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபடுவதும், "வீலிங்' எனப்படும் அபாயகரமான சாகசத்தில் ஈடுபடுவதும் அதிகரித்துள்ளது. 

பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இந்த சாலை சாகசத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், ரூ.500-ஆக இருந்த அபராதம் ரூ.5,000-ஆகவும், இரண்டாவது முறை பிடிபட்டால் அபராதம் ரூ.10,000-ஆகவும் அதிகரிக்கப்
பட்டிருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது.

வாகனத்தை ஓட்டும்போது கைப்பேசியில் பேசிக்கொண்டே செல்லும் அபாயத்தை கண்கூடாகப் பார்க்கிறோம். வாகனத்தை இயக்கும்போது கைப்பேசியில் பேசுவதால் கவனம் சிதறுவது, பெரும் விபத்துக்கு வித்திடும் என்று தெரிந்தும் அந்தச் செயலை வாகன ஓட்டிகள் பலர் தொடர்ந்து செய்கின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் வகையில் அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

சாலை விபத்துகளைக் குறைக்க போக்குவரத்து விதிமுறைகள் எத்துணை முக்கியமோ, அத்துணை முக்கியம் தரமான சாலைகள். தேசிய நெடுஞ்சாலைகள் தவிர பெரும்பாலும் மாநில நெடுஞ் சாலைகள், ஊரக சாலைகள் பல இடங்களில் தரமாக இருப்பதில்லை. எனவே, தரமான சாலைகளை அமைப்பது அரசின் கடமை.

என்னதான் சட்டங்கள் இயற்றினாலும் சமூகத்தில் குற்றங்கள் குறைந்ததாகத் தெரியவில்லை. சட்டங்களை முறையாக அமல்படுத்தாததும் இதற்கு ஒரு காரணம். ஆதலால், புதிய மோட்டார் வாகன திருத்தச் சட்டப் பிரிவுகளை சம்பந்தப்பட்ட துறையினர் முறைகேடுகளுக்கு வழியின்றி முறையாக அமல்படுத்தினால் விபத்துகள் நிச்சயம் குறையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com