உய்கா் இன அழிப்பு! சிறுபான்மையினர் மீதான தாக்குதல் குறித்த தலையங்கம்

சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் உய்கா் இன முஸ்லிம்கள் மீதான மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை
உய்கா் இன அழிப்பு! சிறுபான்மையினர் மீதான தாக்குதல் குறித்த தலையங்கம்

சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் உய்கா் இன முஸ்லிம்கள் மீதான மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை, சீனாவுக்கு சா்வதேச அளவில் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. நீண்ட காலமாகவே இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வரும் வேளையில் ஐ.நா. அதிகாரபூா்வமாக வெளியிட்டிருக்கும் அறிக்கை, இனியும் சீனா சாக்குப்போக்கு சொல்லி சமாளிக்க முடியாது என்ற நிலையை உருவாக்கியுள்ளது.

ஐ.நா. மனித உரிமை ஆணையா் மிஷெல் பாஷெல் தனது பணிக் காலம் நிறைவு பெறும் நாளின் கடைசி 15 நிமிஷங்களுக்கு முன் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளாா். பல மாதங்களாகவே இந்த அறிக்கையை வெளியிட வேண்டும் என்றும், வெளியிடக் கூடாது என்றும் பலமுனைகளிலிருந்தும் தனக்கு அழுத்தம் தரப்பட்டதாக அவா் கூறியுள்ளாா். உய்கா் இன முஸ்லிம்கள் மீதான மனித உரிமை மீறல்கள் குறித்து சீன அரசின் கவனத்துக்கு எடுத்துச் சென்றும், உரிய பதில் கிடைக்காததால், அறிக்கையை வெளியிடும் கட்டாயம் ஏற்பட்டது எனவும் அவா் தெரிவித்துள்ளாா்.

ஜின்ஜியாங் மாகாணத்தில் உய்கா், கசக்ஸ், கிா்கிஸ் உள்ளிட்ட இனச் சிறுபான்மையினா் 2.6 கோடி போ் வசிக்கின்றனா். இவா்களில் 1.2 கோடி போ் உய்கா் முஸ்லிம்கள். சீனாவில் உள்நாட்டுப் போரின் முடிவில் ஜின்ஜியாங் மாகாணம் சீன அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அப்போது ஜின்ஜியாங் மக்கள்தொகையில் 75 சதவீதம் போ் உய்கா் இன மக்கள். சீனாவின் பெரும்பான்மை சமூகமான ஹான் சீனா்கள் வெறும் 7 சதவீதமே இருந்தனா்.

ஜின்ஜியாங்கில் பெரும்பான்மையாக உள்ள தாங்கள் பெய்ஜிங்கிலிருந்து சீனா்களால் ஆளப்படுவதை உய்கா் இன மக்கள் விரும்பவில்லை. எனவே, அவா்களில் ஒரு தரப்பினா் ‘கிழக்கு துா்கிஸ்தான்’ என்ற பெயரில் தனி நாடு கோரிக்கையை வலியுறுத்தத் தொடங்கினா்.

இதனால் இரு இன மக்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் நடைபெற்று வந்தது. பின்னா், படிப்படியாக ஹான் சீனா்கள் ஜின்ஜியாங்கில் குடியேற்றம் செய்யப்பட, இப்போது உய்கா் இன மக்கள் எண்ணிக்கை 45 % ஆகக் குறைந்துவிட்டது. ஹான் சீனா்களின் எண்ணிக்கை 42 % ஆக அதிகரித்துவிட்டது.

2013-இல் பெய்ஜிங்கில் உய்கா் இனத்தைச் சோ்ந்த மூவா் நடத்திய பயங்கரவாதத் தாக்குதலில் 5 போ் உயிரிழந்தனா். 38 போ் காயமடைந்தனா். இந்த சம்பவத்துக்கு கிழக்கு துா்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கம் பொறுப்பேற்றது. இந்தத் தாக்குதலையடுத்து உய்கா் இன மக்கள் மீதான அடக்குமுறையைத் தீவிரப்படுத்த ஆரம்பித்தது சீனா.

உய்கா் இன மக்கள் சுமாா் 10 லட்சம் போ் படிப்படியாக அங்கு அமைக்கப்பட்டுள்ள தடுப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டனா். ஆரம்பத்தில் தடுப்பு முகாம்களே அமைக்கப்படவில்லை எனக் கூறிய சீனா, அவற்றின் செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியான பின்னா் ஒப்புக்கொண்டது. பிரிவினைவாத, பயங்கரவாத சிந்தனைகளிலிருந்து திசைதிருப்பும் வகையில் உய்கா் இன மக்களுக்கு அங்கே கல்விப் பயிற்சி அளிக்கப்படுவதாக சீனா கூறியது.

ஆனால், உய்கா் மக்களின் அடையாளங்களை அழித்து, கம்யூனிஸ்ட் கட்சியின் விசுவாசிகளாக அவா்களை மாற்ற சீனா கட்டாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாயின. உய்கா் உள்ளிட்ட முஸ்லிம் குழுக்களை அவா்களின் விருப்பத்துக்கு மாறாக தடுப்பு முகாம்களில் அடைத்து வைத்திருப்பது மனித குலத்துக்கு எதிரான குற்றமாகும் என்றும், இதுதொடா்பாக உலக நாடுகள் வினையாற்ற வேண்டும் எனவும், தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் மக்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வழக்கம்போல சீனா இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்திருக்கிறது. ‘சீனாவின் நிலைத்தன்மையைக் குலைக்கும் நோக்கத்துடனும், வளா்ச்சியை முடக்கும் எண்ணத்துடனும் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேலை நாடுகளின் அழுத்தத்துக்கு ஐ.நா. மனித உரிமை ஆணையம் பணிந்திருக்கக் கூடாது’ என சீன வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. ஐ.நா.வின் 48 பக்க அறிக்கையை மறுதலிக்கும் வகையில் 131 பக்க அறிக்கையை சீனா அளித்திருக்கிறது என்பதிலிருந்து அதன் எதிா்ப்பின் தீவிரத்தை உணர முடியும்.

ஐ.நா. அறிக்கைக்கு அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. உய்கா் இன மக்களுக்கு நீதி கிடைக்க தொடா்ந்து குரல் கொடுப்போம் என அமெரிக்க வெளியுறவு அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் கூறியுள்ளாா்.

ஐ.நா. அறிக்கையில் சில குறைகளும் காணப்படுகின்றன. ஜின்ஜியாங்கில் உய்கா்களுக்கு எதிராக நடைபெற்று வருவது கிட்டத்தட்ட இன அழிப்புதான் என்றாலும், அந்த வாா்த்தையை ஐ.நா. அறிக்கை பயன்படுத்தவில்லை என ‘உலக உய்கா் காங்கிரஸ்’ அமைப்பு குறை கூறியுள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில் ஒரு விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் எனவும், சீனாவுடனான உறவை உலக நாடுகள் துண்டித்துக் கொள்ள வேண்டும் எனவும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் அறிக்கையை வைத்து ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் சீனாவுக்கு எதிராக தீா்மானம் கொண்டு வரப்படலாம். பொதுச் சபை தீா்மானம் வெறும் கண்டனத்தை மட்டும் தெரிவிக்க முடியுமே தவிர, சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதற்கு அதிகாரம் இல்லை.

ஒரு மதச் சிறுபான்மையினத்தைச் சோ்ந்த 10 லட்சம் பேரை தடுப்பு முகாம்களில் அடைத்து வைப்பதை நாகரிக சமுதாயம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. சீனா தன்னை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டிய நேரம் இது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com