வெற்றியும் வாய்ப்பும்... | பிரிட்டன் பிரதமர் தேர்தலில் லிஸ் டிரஸ் வெற்றி பெற்றிருப்பது குறித்த தலையங்கம்

வெற்றியும் வாய்ப்பும்... | பிரிட்டன் பிரதமர் தேர்தலில் லிஸ் டிரஸ் வெற்றி பெற்றிருப்பது குறித்த தலையங்கம்

எதிர்பார்த்தது போலவே லிஸ் டிரஸ் பிரிட்டன் பிரதமர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கும் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்குக்கும் இடையே உள்ள வாக்கு வித்தியாசம் எதிர்பாராதது.
மார்கரெட் தாட்சர், தெரசா மே ஆகியோருக்கு அடுத்ததாக பிரிட்டனின் மூன்றாவது பெண் பிரதமர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் லிஸ் டிரஸ். மொத்தம் உள்ள 1,72,437 வாக்குகளில் டிரஸ்ஸுக்கு 81,326 வாக்குகளும் (57.4%), சுனக்குக்கு 60,399 வாக்குகளும் (42.6 %) கிடைத்தன. தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளுக்கு முற்றிலும் மாறாக இருவருக்கும் இடையேயான வாக்கு இடைவெளி அதிகரித்திருக்கிறது.
பிரிட்டன் அரசியலமைப்புச் சட்டப்படி ஆளும் கட்சியின் தலைவரே பிரதமராகப் பதவி வகிப்பார். அந்த வகையில், "பார்ட்டிகேட் ஊழல்' எனப்படும் கரோனா கால கட்டுப்பாடுகளை மீறியதால் எழுந்த சர்ச்சையையடுத்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பதவியிலிருந்தும் பிரதமர் பதவியிலிருந்தும், விலகினார். முன்னதாக, நிதியமைச்சராக இருந்த ரிஷி சுனக் ராஜிநாமா செய்ததன் மூலம் ஏற்பட்ட நெருக்கடி போரிஸ் ஜான்சன் பதவி விலகியதற்கான முக்கியமான காரணமாக கூறப்படுகிறது.
போரிஸ் ஜான்சன் விலகலையடுத்து ஆளும் கட்சித் தலைவர் பதவிக்கு லிஸ் டிரஸ், ரிஷி சுனக் உள்ளிட்ட 8 பேர் போட்டியிட்டனர். கட்சி எம்.பி.க்கள் மட்டும் வாக்களிக்கும் ஆரம்ப சுற்று போட்டிகளில் ரிஷி சுனக்கே முன்னிலை வகித்தார். எம்.பி.க்கள் மத்தியில் அவருக்கு இருந்த அபாரமான செல்வாக்கை அது நிரூபிப்பதாக இருந்தது. இதனால், ரிஷி சுனக் பிரதமராவார் என்கிற எதிர்பார்ப்பும் உருவானது. ஆனால், கட்சி உறுப்பினர்கள் வாக்களிக்கும் சுற்றில் ரிஷி சுனக் சரிவைச் சந்தித்தார். கட்சியில் லிஸ் டிரஸ்ஸுக்கு இருக்கும் அபார செல்வாக்கை அது நிரூபித்தது.
பணவீக்கம், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பொருளாதார பிரச்னைகள் பிரிட்டனை வதைத்து வருகின்றன. மக்களின் அன்றாட வாழ்க்கைச் செலவு கடுமையாக அதிகரித்துள்ளது. வரிக் குறைப்பு குறித்து வாக்குறுதி அளிக்காத ரிஷி சுனக், நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நடவடிக்கையில் முதலில் ஈடுபடுவேன்; நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளிக்கத் தயாரில்லை என பிரசாரத்தின்போது தெரிவித்தார். தேர்தலில் வெற்றி பெற்றால் உடனடி வரிக் குறைப்பை அமல்படுத்தப் போவதாக லிஸ் டிரஸ் அளித்த வாக்குறுதி அவரது வெற்றிக்குப் பெரிதும் கைகொடுத்திருக்கிறது.
கட்சி உறுப்பினர்களையும் தாண்டி ரிஷி சுனக்கின் இந்த பிரசாரம் வரவேற்பைப் பெற்றாலும், அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை. குறிப்பாக, கன்சர்வேட்டிவ் கட்சியின் இளம் வாக்காளர்கள் மத்தியில் ரிஷி சுனக்குக்கு இருந்த ஆதரவு, மூத்த உறுப்பினர்கள் மத்தியில் இல்லை.
நிதியமைச்சராக கொள்ளை நோய்த்தொற்று காலத்தின்போது பொருளாதார நெருக்கடியை திறம்பட சமாளித்தவர் என்கிற பெயர் ரிஷி சுனக்குக்கு இருந்தது. அதேபோல நாட்டின் வெளியுறவு அமைச்சராகவும், ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறும் "பிரக்ஸிட்' நடவடிக்கையின்போது சிறப்பாகச் செயல்பட்டதற்காகவும் செல்வாக்கு பெற்றிருந்தார் லிஸ் டிரஸ். அத்துடன் இத்தேர்தலில் நிறமும், இனமும் முக்கியப் பங்கு வகித்ததையும் மறுக்க முடியாது.
தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால் பிரிட்டனின் வெள்ளையர் அல்லாத முதல் பிரதமர் என்கிற பெருமையை சுனக் பெற்றிருப்பார். அது கைகூடாத நிலையில், தேர்தலில் லிஸ் டிரஸ்ஸுக்கு கடும் போட்டியை அளித்தவர் என்கிற பெயர் அவருக்குக் கிடைத்திருக்கிறது.
இந்தியாவைப் பொறுத்தவரையில், லிஸ் டிரஸ் பிரிட்டன் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது சாதகமான அம்சமாகவே பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு இந்தியா - பிரிட்டன் இடையே "விரிவான வர்த்தக ஒப்பந்தம்' கையொப்பமானபோது, அதைப் பெரிதும் வரவேற்றவர் டிரஸ். அந்த ஒப்பந்தமே இரு நாடுகளுக்கும் இடையிலான "கட்டுப்பாடற்ற வர்த்தக ஒப்பந்தத்துக்கு' இப்போது வழிகோலியுள்ளது.
வெளியுறவு அமைச்சராக இந்த வர்த்தக ஒப்பந்தங்களில் லிஸ் டிரஸ்ஸின் பங்களிப்பு முக்கியமானது. கட்டுப்பாடற்ற வர்த்தக ஒப்பந்தத்தை வரும் தீபாவளி திருநாளுக்குள் இறுதி செய்ய இரு நாடுகளும் முனைப்புக் கொண்டுள்ளன. மொத்தம் 26 அம்சங்களைக் கொண்ட இந்த ஒப்பந்தத்தில் 19 அம்சங்கள் தொடர்பாக ஏற்கெனவே ஐந்து கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தை தீபாவளிக்குள் இறுதி செய்து அமல்படுத்த இந்தியா தீவிரமாக உள்ளது. லிஸ் டிரஸ் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதன் மூலம் அதற்கான வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. இந்த ஒப்பந்தம் இரு தரப்பிலும் வர்த்தக முதலீடுகளை ஊக்குவித்து ஏராளமான பலன்களை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லிஸ் டிரஸ்ஸின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடியும், "உங்களின் (லிஸ் டிரஸ்) தலைமையின் கீழ் இந்தியா - பிரிட்டன் இடையே பல்வேறு துறைகளில் நிலவி வரும் விரிவான நல்லுறவு மேலும் வலுவடையும்' என நம்பிக்கை தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ரிஷி சுனக் பிரிட்டன் பிரதமராகியிருந்தால் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்கிற முறையில் இந்தியாவுக்கு பெருமை கிடைத்திருக்கும். இப்போது லிஸ் டிரஸ் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதன் மூலம் இந்தியா - பிரிட்டன் இடையே உறவு வலுப்படும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.


 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com