கடைசி மகாராணி!| இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவு குறித்த தலையங்கம்

கடைசி மகாராணி!| இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவு குறித்த தலையங்கம்

 இமயமலையில் உள்ள எவரெஸ்ட், கஞ்சன்ஜெங்கா, நந்தாதேவி, நங்கா பர்வதம் உள்ளிட்ட சிகரங்களில் ஒன்று, திடீரென்று ஓர் இரவில் உருகிக் காணாமல் போனால் எப்படி இருக்குமோ அது போன்றதுதான் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவு. முதிர்ந்த 96 வயதிலும் அவர் மறைவார் என்கிற எண்ணமே ஏற்படாத வண்ணம் அந்த மகாராணி தனது இருப்பை இதுவரை உறுதி செய்து கொண்டிருந்தார் என்பதுதான் அதற்குக் காரணம்.
 எலிசபெத் அலெக்ஸாண்ட்ரா மேரி என்கிற இரண்டாம் எலிசபெத் மகாராணி விடைபெற்று விட்டார். உலக நாடுகள் பலவற்றையும் தனது படைபலத்தாலும், தந்திரத்தாலும் பிடித்துக் காலனிகளாக்கி மிகப் பெரிய சாம்ராஜ்யமாக இருந்த நிலையிலிருந்து, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, சுருங்கத் தொடங்கியது பிரிட்டன். சூரியன் அஸ்தமிக்காத பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் வெறும் "யுனைடெட் கிங்டம்' என்கிற சில தீவுகளை உள்ளடக்கிய நாடாக மாறிய வரலாற்று வீழ்ச்சிக்குப் பிறகு அரியணை ஏறியவர் இரண்டாம் எலிசபெத் மகாராணி.
 மகாராணியாவதற்காகப் பிறந்தவர் அல்ல அவர். காலத்தின் நிர்ப்பந்தத்தால் மகாராணியாக்கப்பட்டவர். அவரது பெரியப்பா அரசர் எட்டாம் எட்வர்ட், இரண்டு முறை விவாகரத்து பெற்ற வாலிஸ் சிம்ப்சன் என்பவரை மணக்க விரும்பியபோது, பிரிட்டிஷ் மக்கள் கொதித்தெழுந்தனர். தங்களது ராணிக்கு இரண்டு முன்னாள் கணவர்கள் உயிரோடு இருப்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால், வாலிஸ் சிம்ப்சனை மணந்து கொள்வதற்காகத் தனது மணிமுடியைத் துறக்க முடிவு செய்தார் எட்டாம் எட்வர்ட் மன்னர்.
 பட்டத்துக்கு அடுத்த வாரிசான எலிசபெத்தின் தந்தை ஆறாம் ஜார்ஜ் பிரிட்டிஷ் அரசராகிறார். பத்து வயது அலெக்ஸாண்ட்ரா மேரி, விண்ட்சர் பட்டத்து இளவரசியாகிறார். 1952-இல் தனது 56 வயதில் ஆறாம் ஜார்ஜ் மன்னர் தூக்கத்தில் உயிரிழக்கும்போது, இளவரசி எலிசபெத், காதலித்துக் கரம் பிடித்த தனது கணவரான கிரீஸ் ராஜகுடும்பத்தைச் சேர்ந்த பிலிப் மெளண்ட்பேட்டனுடன் ஆப்பிரிக்காவின் கென்யா நாட்டில் சுற்றுப்பயணத்தில் இருந்தார்.
 எலிசபெத் மகாராணிக்கு கிரீடம் மட்டுமல்ல, எல்லாமே தேடி வந்தன. காதலித்துக் கைப்பிடித்த கணவருடன் 73 ஆண்டு தொடர்ந்து மணவாழ்க்கை நடத்திய இரண்டாம் எலிசபெத் மகாராணி, தனது வாழ்க்கையில் சந்தித்த வரலாற்று நிகழ்வுகள்தான் எத்தனை எத்தனை?
 வின்ஸ்டன் சர்ச்சிலின் இரண்டாவது அமைச்சரவைக் காலத்தில் பிரிட்டனின் மகாராணியாகப் பட்டம் சூட்டிக் கொண்ட இரண்டாம் எலிசபெத், 15 பிரதமர்களைப் பார்த்திருக்கிறார். தனது மறைவிற்கு மூன்று நாட்கள் முன்புதான் புதிய பிரதமராக லிஸ் டிரûஸ நியமித்தார். மன்னர் முறையை ஒழிக்க வேண்டும் என்று விரும்பிய பிரதமர்களையும், தங்களது மக்கள் செல்வாக்கிற்குப் பிறகுதான் மகாராணி அந்தஸ்து என்று கருதிய பிரதமர்களையும் தனது மெளனத்தாலும், புன்னகையாலும் எதிர்கொண்ட அவரது ராஜதந்திரத்தை நினைத்தால் வியப்பு மேலிடுகிறது.
 அரசமைப்பு அங்கீகாரம் பெற்ற மன்னராட்சி முறை என்பது சற்று வித்தியாசமானது. தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றத்துக்கும், பிரதமரின் தலைமையிலான அமைச்சரவைக்கும்தான் அனைத்து அதிகாரங்களும். ஆனால், அரியணைக்கு என்று சில அதிகாரங்கள் இல்லாமல் இல்லை. நாடாளுமன்றம் நிறைவேற்றும் எந்தவொரு மசோதாவும் பக்கிங்ஹாம் அரண்மனையின் அனுமதி பெற்ற பிறகுதான் சட்டமாகும்.
 பிரிட்டனில் இன்னொரு மரபு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு புதன்கிழமையும், பிரதமரின் 10, டெளனிங் தெரு வீட்டிலிருந்து, பிரிட்டிஷ் பிரதமராக இருப்பவர் புறப்பட்டு, அரண்மனைக்குச் சென்று மகாராஜா அல்லது மகாராணியை சந்திக்க வேண்டும். அவர்களுக்குள் நடக்கும் கலந்துரையாடல் அவர்கள் இருவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியங்கள். என்னதான் மக்கள் செல்வாக்குப் பெற்ற பிரதமராக இருந்தாலும் அவர் கிரீடத்தின் கேள்விகளுக்கு பதில் சொல்லக் கடமைப்பட்டவர்.
 பிரதமர்களுடனான சந்திப்புகளில் எலிசபெத் ராணியார் எதுவும் பேசுவதில்லை. அவர்கள் சொல்வதை அமைதியாகக் கேட்பதுடன் சரி. அப்படி அவர் பேசிய நிகழ்வுகள் வெளியில் தெரியாது. ஆனால், எலிசபெத் ராணியை மதிக்காத பிரதமர்களான ஹெரால்ட் வில்சன், மார்கரெட் தாட்சர், டோனி பிளேர் உள்ளிட்டவர்களும், ஒரு கட்டத்தில் அவரது மெளனத்துக்கு முன்னர் தலைகுனிந்து நிற்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது என்பதுதான் வரலாற்று உண்மை.
 பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் அஸ்தமித்துவிட்டது என்பதை அவர் உணர்ந்திருந்தார். தனது அதிகாரம் பெயருக்கு மட்டும்தான் என்பதையும் அவர் அறிந்திருந்தார். பிரிட்டன் எதிர்கொண்ட பிரச்னைகளையும் சரி, தனது குடும்ப வாழ்க்கையில் எதிர்கொண்ட பிரச்னைகளையும் சரி இரண்டாம் எலிசபெத் புன்னகையுடனும் மெளனமாகவும் கடந்து போனதால்தான், அவரால் 70 ஆண்டுகாலம் மகாராணியாகத் தொடர முடிந்தது.
 மன்னராட்சி முறை ஒழிக்கப்பட வேண்டுமா என்று நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 19% பேர் மட்டும்தான் குடியரசுக்கு ஆதரவு தெரிவித்தனர். பிரிட்டிஷ் அரசி இரண்டாம் எலிசபெத்துக்கு மக்கள் மத்தியிலான ஆதரவு குறித்த வாக்கெடுப்பில் 86% பேர் அவர் தொடர வேண்டும் என்று விரும்பினர்.
 வரலாற்று நாயகியாக விடைபெறும் இரண்டாம் எலிசபெத், பிரிட்டனின் கடைசி மகாராணியாக இருக்கக் கூடும். ஆனால், 70 ஆண்டு காலம் நீண்டு நின்ற அந்த மகாராணியின் இடத்தைப் புதிய மன்னர் மூன்றாம் சார்லஸால் மட்டுமல்ல, வேறு யாராலுமே வரலாற்றில் நிரப்பிவிட முடியாது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com