தில்லி - டாக்கா நட்புறவு! | வங்கதேசப் பிரதமரின் இந்திய அரசுமுறைப் பயணம் குறித்த தலையங்கம்

தில்லி - டாக்கா நட்புறவு! | வங்கதேசப் பிரதமரின் இந்திய அரசுமுறைப் பயணம் குறித்த தலையங்கம்

எலிசபெத் மகாராணியின் மறைவில் தொடங்கி பல்வேறு சர்வதேச, தேசிய நிகழ்வுகளால் வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனாவின் இந்திய அரசுமுறைப் பயணம் போதிய கவனம் பெறவில்லை. வல்லரசு நாடுகளுடனான நமது உறவை பலப்படுத்தும் அதேவேளையில், அண்டை நாடுகளுடனான நட்புறவும் வலுப்பெறுவது இந்தியாவின் முக்கியத்துவத்தை மேலும் அதிகரிக்கிறது.
"நல்ல வேலிகள் நல்ல அண்டை வீட்டுக்காரர்களைத் தருகின்றன' என்பது ராபர்ட் பிராஸ்ட்டின் வெளியுறவுக் கொள்கை குறித்த கருத்து. பாகிஸ்தானுடனும் சீனாவுடனுமான இந்திய உறவில் காணப்படும் பிரச்னை, முறையாக ஏற்றுக்கொள்ளப்படாத எல்லைகள்தான். நல்லவேளையாக வங்கதேசத்துடனான நமது நல்லுறவில் பிரச்னை எல்லை அல்ல; ஆனால், நதிநீர்ப் பங்கீடு!
1947 பிரிவினையின்போதே தொடங்கிவிட்ட பிரச்னைதான் என்றாலும்கூட, வங்கதேசப் பிரிவினைக்குப் பிறகு இரு நாட்டு உறவுக்கும் இடையே நதிநீர்ப் பிரச்னை சுமுகமான உறவு ஏற்படாமல் தடுத்து வந்தது. நரேந்திர மோடி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு இரு நாடுகளுக்கும் இடையேயான கருத்துவேறுபாடுகளை பேச்சுவார்த்தைகள் மூலம் அகற்றி தீர்வு காணும் முயற்சிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டன. அதன் நீட்சியாகத்தான் சமீபத்திய வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் இந்திய பயணத்தைப் பார்க்க வேண்டும்.
இந்தியாவிலிருந்து வங்கதேசம் வழியாகப் பாய்ந்து வங்காள விரிகுடாவில் 54 நதிகள் கலக்கின்றன. அவை எல்லாமே கங்கை, பிரம்மபுத்ரா நதிகளின் கிளை நதிகள். அவற்றில் மிக முக்கியமானது தீஸ்தா. மேற்குவங்க மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் தீஸ்தா நதிநீர்ப் பிரச்னைக்குத் தீர்வு காண முடியாது என்பதால், இந்த அரசுமுறைப் பயணத்திலும் பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
முந்தைய வாஜ்பாய், மன்மோகன் சிங் அரசுகளின் போதும், நரேந்திர மோடி அரசு ஆட்சிக்கு வந்த பிறகும் மேற்கு வங்க அரசை இந்தியத் தரப்பில் இணைத்து பேச்சுவார்த்தை நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தீஸ்தா நதிநீர்ப் பிரச்னை எந்த அளவுக்கு வங்கதேச அரசியலில் முக்கியத்துவம் பெற்றிருக்கிறதோ, அதேபோல மேற்குவங்க மாநில அரசியலிலும் முக்கியத்துவம் பெறுகிறது. காவிரி நதிநீர்ப் பிரச்னையில் கர்நாடகம் கடுமையான நிலைப்பாட்டை எடுப்பதுபோல, மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசும் தீஸ்தா நதிநீர்ப் பிரச்னைக்குத் தீர்வு காண ஒத்துழைக்க மறுக்கிறது.
தீஸ்தா நதிநீர் குறித்த பேச்சுவார்த்தை தொடரும் நிலையில், இந்தியா, வங்கதேசத்துக்கு சில சலுகைகளை வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. வங்கதேசத்தின் தேவைகளையும் உணர்வுகளையும் இந்தியா மதிக்கிறது என்பதை உணர்த்தும் விதத்தில் குஷியாரா நதிநீர்ப் பிரச்னைக்கு பிரதமர் ஷேக் ஹசீனாவின் விஜயத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது. 1996 கங்கை நதிநீர் ஒப்பந்தத்துக்குப் பிறகு கையொப்பமாகும் அடுத்த ஒப்பந்தம் குஷியாரா நதிநீர் ஒப்பந்தம்தான். பரக் நதியின் கிளை நதியான குஷியாரா, அஸ்ஸாம் வழியாகப் பாய்ந்து வங்கதேசத்துக்குள் நுழைந்து வங்காள விரிகுடாவை அடைகிறது.
இந்த ஆண்டு வங்கதேசத்தில் மிகப் பெரிய வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக, அஸ்ஸாமின் கீழ்ப் பகுதியும், வங்கதேசத்தின் சில்ஹட் பகுதியும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டன. இரண்டு நாடுகளுக்கும் இடையே வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்துவதிலும், வேளாண்மை தொடர்பாகவும் கூடுதல் நட்புறவும், புரிதலும் தேவை என்பதை அது உணர்த்தியது.
கடந்த ஒரு நூற்றாண்டாக பரக் நதியில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. குறிப்பாக அந்த நதியின் பெரும்பான்மையான தண்ணீர் குஷியாரா மூலம் இப்போது பாய்கிறது. குறைந்த அளவுதான் சுர்மா நதிக்குச் செல்கிறது. அதனால், மழைக்காலங்களில் கடுமையான வெள்ளப்பெருக்கும், அதிக தண்ணீர் தேவைப்படும் ஏனைய பருவங்களில் குஷியாராவில் தண்ணீர் வறட்சியும் காணப்படுகிறது. இந்தப் பிரச்னைக்கு தற்போதைய ஒப்பந்தம் ஓரளவுக்குத் தீர்வு அளிக்கும்.
இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையே கையொப்பமாகி இருக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, குளிர்காலத்திலும் கோடைக்காலத்திலும் 2,500 கனஅடி தண்ணீரை குஷியாராவில் திறந்துவிட இந்தியா ஏற்றுக்கொண்டிருக்கிறது. அதன் மூலம் 10,000 ஹெக்டேர் விளைநிலங்களும், 10 லட்சத்துக்கும் அதிகமான மக்களும் பயனடைவார்கள். சில்ஹட் பகுதியில் உள்ள கால்வாய்கள் மூலம் அந்தப் பகுதி நெல் விவசாயிகள் பயனடைவார்கள்.
நதிநீர் பிரச்னை மட்டுமல்லாமல், வங்கதேசம் கடுமையான எரிசக்திப் பிரச்னையையும் எதிர்கொள்கிறது. சர்வதேச அளவிலான கச்சா எண்ணெய், நிலக்கரி விலை உயர்வால் வங்கதேசம் பாதிக்கப்பட்டிருக்கிறது. ராம்பால் என்கிற இடத்தில் இரண்டு பில்லியன் டாலர் செலவில் அமைக்கப்படும் அனல்மின் நிலையத்துக்கு இந்தியா 1.6 பில்லியன் டாலர் உதவி அளிக்க ஒப்புக்கொண்டிருக்கிறது. ராம்பால் அனல்மின் நிலையத்தின் முதல் யூனிட் செயல்படத் தொடங்கினால் வங்கதேசத்தின் மின்சாரத் தேவை ஓரளவுக்கு ஈடுகட்டப்படும்.
இந்தியாவுக்கு எதிரான உணர்வுகளைத் தூண்டிவிட வங்கதேச எதிர்க்கட்சிகள் நதிநீர்ப் பிரச்னையை பெரிதுபடுத்துகின்றன. வங்கதேசத்திலுள்ள இஸ்லாமிய அடிப்படைவாதிகள் இன்னும்கூட பாகிஸ்தானால் தூண்டிவிடப்படுகிறார்கள். சீனாவும் தனது பங்குக்கு இந்தியாவுக்கு எதிராக வங்கதேசத்தில் பிரசாரம் செய்துகொண்டிருக்கிறது.
இந்தப் பின்னணியில் பிரதமர் ஹசீனாவின் விஜயத்தின்போது கையொப்பமிடப்பட்டிருக்கும் ஏழு ஒப்பந்தங்களும், இந்தியாவின் நட்புறவு நல்லெண்ணத்தையும், வங்கதேசத்தின் வளர்ச்சியில் அக்கறையையும் வெளிப்படுத்துவதாக அமைகின்றன.

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com