சலுகைகள் மழை பட்ஜெட்! | பட்ஜெட் குறித்த தலையங்கம்

 சலுகைகள் மழை பட்ஜெட்! | பட்ஜெட் குறித்த தலையங்கம்

  பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இரண்டாவது தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் முழுமையான கடைசி பட்ஜெட், எதிர்பார்த்ததைப் போலவே சலுகைகள் நிறைந்ததாக அமைந்திருக்கிறது. அதே நேரத்தில், மிகவும் சாதுரியமான நிதி நிர்வாகத்தை கையாண்டிருப்பதும், பொருளாதார தொலைநோக்கை கைவிடாததும் 2023 - 24 பட்ஜெட்டின் பாராட்டுக்குரிய அம்சங்கள்.
 2023 - 24 நிதியாண்டுக்கான ரூ. 45 லட்சம் கோடிக்கான பட்ஜெட், கடந்த நிதியாண்டைவிட 11% அதிகரித்திருக்கிறது. அதிகரித்த நிதிப்பற்றாக்குறையை எப்படி எதிர்கொள்ளப் போகிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் என்கிற அச்சம் களையப்பட்டிருக்
 கிறது. கடந்த நிதியாண்டில் ஜிடிபி-யில் 6.4%-ஆக இருந்த நிதிப்பற்றாக்குறை, நடப்பு பட்ஜெட்டில் 5.9%-ஆகக் குறைக்கப்பட்டிருக்கிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் 4.5% இலக்கு எட்டப்படும் என்பதையும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
 வேலைவாய்ப்பின்மை, வறுமை, பொருளாதார ஏற்றத்தாழ்வு உள்ளிட்ட வார்த்தை எதுவுமே நிதியமைச்சரின் பட்ஜெட் உரையில் இடம்பெறவில்லை. வேலைவாய்ப்பை உருவாக்குதல், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், நிதித்துறை சீரமைப்பு, மத்திய சிறு, குறு தொழில்களுக்கான கடன் உத்தரவாதங்கள், "ஸ்டார்ட் அப்' நிறுவனங்களுக்கு ஏழு முதல் பத்து ஆண்டு வரி விலக்கு உள்ளிட்ட பல அறிவிப்புகள் வேலைவாய்ப்பின்மையையும், வறுமை ஒழிப்பையும் குறிவைத்து செய்யப்பட்டவை.
 மூலதன முதலீடு 34.4% அதிகரித்து ரூ. 10 லட்சம் கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இதுவரை எந்தவொரு நிதியமைச்சரும் நிர்மலா சீதாராமன் அளவில் மூலதன முதலீட்டுக்கான ஒதுக்கீட்டை அதிகரித்ததில்லை. இந்தியா மிக மோசமான பொருளாதார பின்னடைவை சந்தித்த 1991 முதல் 2009 வரையிலான காலகட்டத்தில்கூட இந்த அளவில் மூலதனச் செலவீடு அதிகரிக்கப்படவில்லை.
 பெண்களுக்கான புதிய சிறுசேமிப்புத் திட்டம்; மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு வரம்பை இரட்டிப்பாக்கியிருப்பது; வேளாண் கடன் இலக்கை ரூ. 20 லட்சம் கோடியாக அதிகரித்திருப்பது; புதிதாகத் தொடங்கப்படும் கூட்டுறவு உற்பத்தி ஆலைகளுக்கான வரி 15% குறைப்பு உள்ளிட்ட அறிவிப்புகள் நிதியமைச்சருக்கு பாராட்டை மட்டுமல்ல, ஆளும் கட்சிக்கு தேர்தலில் வாக்குகளையும் பெற்றுத்தரக் கூடும்.
 ஐந்தாவது பெரிய பொருளாதாரம் என்கிற தகுதியை உறுதிப்படுத்தவும், நிலைநிறுத்தவும் கட்டமைப்பு வசதிகளிலும், தொழில்நுட்ப மேம்பாட்டிலும் மோடி அரசு கூடுதல் கவனம் செலுத்துகிறது என்பதை உறுதிப்படுத்தும் விதமாக அமைகின்றன பல பட்ஜெட் அறிவிப்புகள். இதுவரை இல்லாத அளவிலான ரூ.2.4 லட்சம் கோடியை ரயில்வே துறைக்கு ஒதுக்கியிருப்பது, அந்தத் துறையின் நவீனமயமாக்கலை மட்டுமல்லாமல், சேவைகளை அதிகரிப்பதற்கும், தொழில்நுட்ப மேம்பாட்டுக்கும் உதவும். 50 புதிய விமான நிலையங்கள், ஹெலிகாப்டர் தளங்கள் என்பது போக்குவரத்து கட்டமைப்பை மேம்படுத்தும் வரவேற்புக்குரிய முயற்சி.
 வேளாண் துறைக்கான ஒதுக்கீடு ரூ.20 லட்சம் கோடியாக அதிகரித்திருப்பதும், பிரதமரின் வீட்டு வசதி திட்டமான ஆவாஸ் யோஜனாவின் ஒதுக்கீட்டை 66% அதிகரித்து ரூ.79,000 கோடியாக நிர்ணயித்திருப்பதும், தடையில்லாத வர்த்தகத்தை ஊக்குவிக்கும் விதத்தில் 39,000 நிபந்தனைகளைக் குறைத்திருப்பதும், விரைவான வளர்ச்சிக்கான முனைப்பான அறிவிப்புகள்.
 இந்த நிதிநிலை அறிக்கையில் மகளிர், பழங்குடியினர், அடித்தட்டு பட்டியலினத்தவர்கள் ஆகியோரின் நலம் முன்னுரிமை பெறுகிறது; அடுத்த மூன்று ஆண்டுகளில் பாதுகாப்பான குடியிருப்பு, கழிப்பிட வசதி, குடிநீர் வசதி, மின்சாரம் ஆகியவற்றின் மேம்பாட்டுக்காக பழங்குடியினருக்கு ரூ.15,000 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது; சாக்கடை கழிவுநீர் ஓடைகளில் மனிதர்கள் இறங்குவதை முற்றிலுமாக நிறுத்துவதற்கான இயந்திர மாற்றுக்கு வழிகோலப்பட்டிருக்கிறது; 38,800 ஆசிரியர்களை நாடு தழுவிய அளவில் நியமித்து "ஏகலைவன்' மாதிரி பள்ளிகள் மூலம் பட்டியலின குழந்தைகளின் கல்வி மேம்பாட்டுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டிருக்கிறது.
 பரவலாக எதிர்பார்த்த வருமான வரி விலக்கு வரம்பு உயர்வு கைதட்டல் பெறும் அளவுக்கு பாராட்டும்படியாக இல்லை. புதிய வரி விதிப்பு முறையை ஏற்றுக்கொள்பவர்களுக்கு ரூ. 7 லட்சம் வரை விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அந்த முறையில் நிரந்தரக் கழிவான ரூ.50,000 தவிர வேறு எந்த விலக்குகளும் கிடையாது.
 பழைய முறை அப்படியல்ல. பிரிவு 80-இன் கீழ் வீட்டுக்கடன், ஓய்வூதியம், மருத்துவக் காப்பீடு உள்ளிட்டவற்றுக்காக ரூ.7.45 லட்சம் வரை விலக்குகள் பெறலாம். அந்த விலக்குகளைப் பெறுவதற்காக மாத ஊதியம் பெறுவோரும், நடுத்தர வர்க்கத்தினரும், மருத்துவக் காப்பீடு, வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட பல சேமிப்புகளை மேற்கொள்வார்கள்.
 புதிய வருமான வரித்திட்டம் சேமிப்பை ஊக்குவிக்காத மேலை நாட்டு "மாடல்'. மூத்த குடிமக்களுக்கும், பணி ஓய்வு பெற்றவர்களுக்கும் அது வசதியாக இருக்குமே தவிர, சேமிப்பை ஊக்குவிக்கும் பொருளாதாரத்துக்கு ஏற்றதாக இருக்காது.
 சலுகைகளை வாரி வழங்கியிருக்கிறார் நிதியமைச்சர். நிதி நிர்வாகத்தைக் கையாண்டிருப்பதில் புத்திசாலித்தனம் தெரிகிறது. 2023 - 24 பட்ஜெட்டின் இலக்கு வளர்ச்சி மட்டுமல்ல, 2024 பொதுத்தேர்தலின் வாக்குகளும்கூட!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com