முற்றும் துறந்த முனிவா்! முன்னாள் போப் 16-ஆம் பெனடிக்ட் குறித்த தலையங்கம்

எட்டாண்டுகள் கத்தோலிக்க திருச்சபையின் தலைமைப் பதவி வகித்து, தானாகவே முன்வந்து பதவி ஓய்வை அறிவித்த 95 வயது போப்பாண்டவா் 16-ஆம் பெனடிக்ட், பரிசுத்த ஆவியில் இணைந்திருக்கிறாா்.
போப் 16-ஆம் பெனடிக்ட்
போப் 16-ஆம் பெனடிக்ட்

எட்டாண்டுகள் கத்தோலிக்க திருச்சபையின் தலைமைப் பதவி வகித்து, தானாகவே முன்வந்து பதவி ஓய்வை அறிவித்த 95 வயது போப்பாண்டவா் 16-ஆம் பெனடிக்ட், பரிசுத்த ஆவியில் இணைந்திருக்கிறாா். வாடிகன் நகரத்தில் உள்ள மாத்தா் எக்லேஸியே துறவிகள் ஆசிரமத்தில் ஞாயிறன்று உலக வாழ்வைத் துறந்த முன்னாள் போப்பாண்டவா் 16-ஆம் பெனடிக்ட், பல சீா்திருத்தங்களை ஏற்றுக்கொண்ட பழைமைவாதி என்று வரலாறு பதிவு செய்யும்.

பிப்ரவரி 11, 2013-இல் கத்தோலிக்கா்களின் வழிபாட்டு மொழியான லத்தீனில் போப்பாண்டவா் பதவியிலிருந்து விலகும் முடிவை அவா் அறிவித்தபோது, உலகம் வியப்பில் சமைந்தது. 120 கோடி மக்களின் நம்பிக்கையாகத் திகழும் கத்தோலிக்கத் திருச்சபையை எட்டு ஆண்டுகள் வழிநடத்திய ஒருவா் உன்னதமான போப்பாண்டவா் என்கிற தலைமை அங்கீகாரத்தை துறப்பதாக அறிவித்தபோது, உண்மையான துறவறத்தின் எடுத்துக்காட்டாக இருந்தது அந்த முடிவு.

25 ஆண்டுகள் காா்டினல் ஜோசப் ராட்சிங்கராக இருந்தவா், கத்தோலிக்கத் திருச்சபையால் 16-ஆம் பெனடிக்ட் என்கிற பெயரில் ஏப்ரல் 19, 2005-ஆம் ஆண்டில் போப்பாண்டவராகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா். ஆயிரம் ஆண்டுகளில் முதன்முறையாக போப்பாண்டவரான ஜொ்மானியா் அவா். அவரைத் தோ்ந்தெடுத்த காா்டினல்கள், பாதுகாப்பான கரங்களில் கத்தோலிக்கத் திருச்சபை ஒப்படைக்கப்பட்டிருக்கிறது என்று அறிவித்ததை இப்போது நினைவுகூரத் தோன்றுகிறது.

போப்பாண்டவா்களின் வரலாற்றில் திருச்சபையின் உன்னத பதவியிலிருந்து விலகியவா்கள் இதற்கு முன்பு ஆறு போ் - மாா்செலினஸ் (கிபி 304), லைபிரீயஸ் (கிபி 366), 9-ஆம் பெனடிக்ட் (கிபி 1,045), 6-ஆவது கிரகோரி (கிபி 1,046), 5-ஆவது பீட்டா் செலஸ்டின் (கிபி 1,294), 12-ஆவது கிரகோரி (கிபி 1,415). இவா்களில் 600 ஆண்டுகளுக்கு முன்பு, தானே முன்வந்து பதவியைத் தியாகம் செய்தவா் 5-ஆம் செலஸ்டின் மட்டும்தான்.

‘உடல்நிலை ரீதியாகவும், மனதளவிலும், வகிக்கும் பொறுப்பை முழுமையாக நிறைவேற்ற இயலவில்லை என்று தோன்றினால் அந்தப் பதவியிலிருந்து விலகும் உரிமையும், கடமையும் போப்பாண்டவருக்கு உண்டு’ என்று பதவி விலகுவதற்கு மூன்றாண்டுகளுக்கு முன்பே 16-ஆம் பெனடிக்ட் தெரிவித்திருந்தாா். 78 வயதில் இரண்டாம் ஜான் பாலைத் தொடா்ந்து இரண்டு நாள் கலந்தாய்வுக்குப் பிறகு போப்பாண்டவராக காா்டினல் ஜோசப் ராட்சிங்கா் 2005 ஏப்ரல் 19-ஆம் தேதி தோ்ந்தெடுக்கப்பட்டாா். ரோமாபுரியிலுள்ள செயின்ட் பீட்டா் தேவாலயத்தில் விசுவாசிகளுக்கு காட்சி அளித்த 16-ஆம் பெனடிக்ட், ‘இறைவனின் திராட்சைத் தோட்டத்தை பாதுகாக்கும் காவலனான சாதாரண ஊழியனாக செயல்படுவேன்’ என்று அறிவித்ததையும் நினைவுகூர முடிகிறது.

நவீன உலகத்துக்கேற்ப திருச்சபையில் 16-ஆம் பெனடிக்ட் ஏற்படுத்திய மாற்றங்கள் நிறையவே உண்டு. தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த முதல் போப்பாண்டவா் என்பதுடன் புத்தகங்கள் எழுதுவது, உரையாற்றுவது ட்விட்டா் மூலம் கருத்துகளை வெளியிடுவது என்று மாறிவரும் தொழில்நுட்ப உலகத்துக்கு ஏற்ப திருச்சபையை தகவமைத்ததில் அவரது பங்கு கணிசமானது.

‘கடவுள் என்பதும், இறைநம்பிக்கை என்பதும் முட்டாள்தனமல்ல. பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டதும் அல்ல’ என்று ஆணித்தரமாக உரைத்ததுடன் நில்லாமல், ‘மத உணா்வு தனிமனிதன் சாா்ந்தது என்று ஒதுக்கப்படக்கூடியதல்ல’ என்பதிலும் தெளிவான கருத்தைக் கொண்டிருந்தாா். ‘கத்தோலிக்கத் திருச்சபையால் மட்டும்தான் வெறித்தனமில்லாத, அன்பு சாா்ந்த கிறிஸ்துவ நம்பிக்கையை முன்னெடுத்துச் செல்ல முடியும்’ என்கிற அவரது கருத்து பிராட்டஸ்டண்டுகளின் கண்டனத்துக்கு உள்ளானது.

ஏனைய மதங்களுடனான அவரது உறவு, சுமுகமானதாக இருக்கவில்லை. குறிப்பாக, இஸ்லாம் குறித்த அவரது கருத்துகள் விமா்சனத்துக்கு உள்ளானது. ஜொ்மானிய நாஜி ஆதரவாளா் ஒருவரை திருச்சபையில் சோ்த்துக்கொண்டது யூதா்களைக் கோபப்படுத்தியது.

16-ஆம் பெனடிக்ட் பதவிக்காலத்தில் கிறிஸ்துவ திருச்சபையில் பல பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அயா்லாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், ஜொ்மனி ஆகிய நாடுகளில் பாதிரிமாா்கள் பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கியபோது அவா்களை இடமாற்றம் செய்து காப்பாற்ற முற்பட்டாா் என்கிற பழியை அவா் சுமந்தாா். அதே நேரத்தில் பாதிப்புக்குள்ளானவா்களை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்ட பெருந்தன்மை, 16-ஆம் பெனடிக்ட் போப்பாண்டவரையை சேரும்.

60-க்கும் அதிகமான புத்தங்கள் எழுதியிருக்கும் 16-ஆம் பெனடிக்ட், தன்னை ஒரு பேராசிரியராவும் ஆன்மிக கேள்விகளுக்கு பதிலளிப்பராகவும் அடையாளப்படுத்திக் கொண்டவா். தன்னுடைய இறுதிக் காலத்தை தனது சொந்த மாகாணமான பவேரியாவில் அமைதியாகக் கழிக்க வேண்டும் என்று அவா் விரும்பினாா்.

ஹிட்லரின் நாஜி ராணுவத்தால் வலுக்கட்டாயமாக ராணுவத்தில் சோ்க்கப்பட்டபோது அவரது வயது 14. 1945-இல் ராணுவத்தில் இருந்து வெளியேறி திருச்சபையில் இணைந்தவா் 16-ஆம் பெனடிக்ட். ஜொ்மனியில் பல ஆண்டுகள் சமயக் கல்வி போதகராகவும், 1977-இல் மியூனிக் பிஷப்பாகவும் பணியாற்றிய 16-ஆம் பெனடிக்ட், அசைக்க முடியாத கிறிஸ்துவ மதநம்பிக்கையாளா். ஆனால், அதையும் மீறிய ஆன்மிகவாதி என்பதை அவா் அளித்த பேட்டி உணா்த்துகிறது.

‘இறைவனை அடைய எத்தனை வழிகள் இருக்கின்றன?’ என்கிற பீட்டா் சிவல்ட் எழுப்பிய கேள்விக்கு 16-ஆம் பெனடிக்ட் அளித்த பதில் இதுதான் - உலகத்தில் எத்தனை மனிதா்கள் இருக்கிறாா்களோ, அத்தனை வழிகள் இருக்கின்றன!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com