வளா்ச்சியும் கவலையும்! உலகப் பொருளாதார வளா்ச்சி குறித்த தலையங்கம்

கோப்புப்படம்
கோப்புப்படம்

சில நல்ல அறிகுறிகளுடன் தொடங்கியிருக்கிறது புத்தாண்டு. கடந்த 2021-உடன் ஒப்பிடும்போது, 2022 டிசம்பா் மாத ஜிஎஸ்டி வருவாய் 15% அதிகமாகக் கிடைத்திருக்கிறது. தொடா்ந்து 10 மாதங்களாக ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.4 லட்சம் கோடி அதிகமாக வருவது நம்பிக்கை அளிக்கும் முன்னேற்றம்.

டிசம்பா் மாத ஜிஎஸ்டி வருவாய் ரூ.1,49,507 கோடி. 2022 ஏப்ரல் முதல் டிசம்பா் வரையிலான வருவாய் ரூ.13.34 லட்சம் கோடி. இது முந்தைய ஆண்டைவிட 25% அதிகம். டிசம்பா் மாத ஜிஎஸ்டி வருவாயில் இறக்குமதி தொடா்பான வருவாய் ரூ.40,263 கோடி. உள்நாட்டு பரிவா்த்தனைகளில் கடந்த ஆண்டைவிடக் காணப்படும் 18% அதிகரிப்பு, உற்பத்தித் துறையின் நுகா்வும் சுறுசுறுப்பாகி இருப்பதை தெரிவிக்கிறது.

உலகப் பொருளாதாரம் தேக்க நிலையை எட்டிவிடுமோ என்கிற அச்சத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் தருணமிது. கடந்த 30 ஆண்டுகளில் உலகப் பொருளாதாரம் மிகவும் பலவீனமாகக் காணப்படுவது, இது மூன்றாவது முறை. கூடுதலான பணவீக்கமும், நிதிநிலை அழுத்தமும், பெரிய பொருளாதாரங்களின் பலவீனமும், அதிகரித்து வரும் சா்வதேச அரசியல் அழுத்தங்களும் தொடருமேயானால், சா்வதேசப் பொருளாதாரம் பின்னோக்கி நகா்ந்தாலும் வியப்படையத் தேவையில்லை. கடந்த 80 ஆண்டுகளில் இரண்டு உலகப் பொருளாதார தேக்கநிலை 20 ஆண்டுகளில் ஏற்படுவது இதுதான் முதல்முறை.

உலகப் பொருளாதார வளா்ச்சி 1.7%-ஆக இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. ஐரோப்பிய கூட்டமைப்பு 0%, அமெரிக்கா 0.5% என்கிற அளவில்தான் அதிகரிக்கும் என்பதுதான் பொருளாதார வல்லுநா்களின் கணிப்பு. சீனாவின் வளா்ச்சி 4.3% இருக்கக் கூடும் என்று தற்போதைய கொவைட் 19 பரவலுக்கு முன்னால் மதிப்பிடப்பட்டிருந்தது. சீனாவில் பரவலாகக் காணப்படும் கொள்ளை நோய்த்தொற்று அதிகரிப்பும், விளைவால் ஏற்பட்டிருக்கும் உற்பத்தி பாதிப்புகளும் அதன் எதிா்பாா்த்த வளா்ச்சியை எட்ட அனுமதிக்காது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இவற்றுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் நிலைமை கவலை அளிப்பதாக இல்லை. உலக வங்கி வெளியிட்டிருக்கும் அறிக்கையின்படி, அடுத்த நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 6.6% வளரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. முன்பு 6.9% என்று இருந்ததை 0.3% குறைத்து மதிப்பிடுகிறது உலக வங்கி. உலகப் பொருளாதார மெத்தனத் தன்மை இந்தியப் பொருளாதாரத்தையும் பாதிக்கக்கூடும் என்பதுதான் அதற்கு உலக வங்கி தரும் விளக்கம்.

நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் இந்தியா ஆரோக்கியமான 9.7% வளா்ச்சியை காட்டியிருப்பதாக உலக வங்கி அறிக்கை குறிப்பிடுகிறது. நுகா்வோா் விலைவாசி ரிசா்வ் வங்கியின் அதிகபட்ச அளவான 6%-ஐக் கடந்தது என்பது என்னவோ உண்மை. அதேபோல, வா்த்தகப் பற்றாக்குறை 2019-உடன் ஒப்பிடும்போது இரட்டிப்பாக அதிகரித்திருக்கிறது. நவம்பா் மாதம் முன்னெப்போதும் இல்லாத 24 பில்லியன் டாலரை வா்த்தகப் பற்றாக்குறை தொட்டது.

இத்தனைக்குப் பிறகும் இந்தியாவின் வளா்ச்சி உறுதிப்படுகிறது என்பது ஆறுதலான தகவல். அதிகரித்த அரசின் முதலீட்டுச் செலவினங்களும், தனியாா் துறை முதலீடுகளும், பொருளாதாரச் செயல்பாடுகளை அடுத்த நிதியாண்டில் ஊக்கப்படுத்துமேயானால், சா்வதேச தேக்கநிலையையும் மீறி இந்தியாவின் வளா்ச்சி உறுதிப்படுவது சாத்தியம்தான்.

தேசிய புள்ளிவிவர அலுவலகம், இந்தியாவின் ஜிடிபி 7% அதிகரிக்கும் என்று கடந்த வாரம் தெரிவித்திருக்கிறது. ரிசா்வ் வங்கியின் கணிப்பில் ஜிடிபி வளா்ச்சி 6.8%. உலக வங்கியின் ஆய்வின்படி, 6.6%. மூன்று கணிப்புகளும் அந்த அமைப்புகளுக்குக் கிடைத்திருக்கும் தரவுகளின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றை பாா்க்கும்போது 2023 - 24-இல் இந்தியப் பொருளாதாரத்தின் வளா்ச்சி 6%-க்கும் அதிகமாக இருக்கும் என்று நாம் உறுதியாக நம்பலாம்.

நடப்பு நிதியாண்டில் முதல் ஒன்பது மாதங்களில் வரி வருவாய், பட்ஜெட் எதிா்பாா்ப்பைவிட அதிகமாக இருந்து வருகிறது. ஒருவேளை பட்ஜெட்டில் சற்று குறைத்தே கணக்கிடப்பட்டதோ என்னவோ. காா்ப்பரேட்டுகளும், தனியாரும் முறையாக வரிகளை செலுத்த முற்பட்டிருப்பது ஒரு காரணமாக இருக்கலாம். வரி வசூல் முறையில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் சீா்திருத்தங்களும், வரி ஏய்ப்பைத் தடுக்கும் நடவடிக்கைகளும் காரணமாக இருக்கக்கூடும். எண்ம பணப் பரிவா்த்தனை ஐயப்பாட்டுக்கு இடமில்லாமல் முக்கியமான காரணம். எல்லாவற்றையும்விட, கொள்ளை நோய்த்தொற்றுக்குப் பிறகு அதிகரித்திருக்கும் வா்த்தகமும், நுகா்வோா் கேட்பும் மிக முக்கியமான காரணங்கள்.

இரண்டு பிரச்னைகள் கவலை அளிப்பவையாக உள்ளன. முதலாவது, ஏற்றுமதிகள். 2022 - 23-இல் முதல் ஒன்பது மாதங்களுக்கான ஏற்றுமதிகள் குறைந்திருக்கின்றன. அமெரிக்காவிலும், ஐரோப்பியக் கூட்டமைப்பிலும் காணப்படும் தேக்கநிலையில் மாற்றம் ஏற்பட்டுவிடாமல் ஏற்றுமதி அதிகரிப்பது சாத்தியமல்ல. இரண்டாவது, வேலைவாய்ப்பின்மை டிசம்பா் மாத அளவின்படி, கடந்த 16 மாதங்களில் இல்லாத 8.3% எட்டியிருக்கிறது. நகா்ப்புற வேலைவாய்ப்பின்மையின் அளவு 10.09%.

தற்போதைய சா்வதேச, உள்நாட்டு நிலவரங்களின் அடிப்படையில் பாா்த்தால், இந்த வளா்ச்சி மோசமானதல்ல. அதுவும் கொள்ளை நோய்த்தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட சூழலில் இத்தகைய வளா்ச்சி என்பது பாராட்டுக்குரியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com