முற்பகல் செய்யின்...| பாகிஸ்தான் தலிபான் என்கிற பயங்கரவாத அமைப்பு குறித்த தலையங்கம்

கோப்புப் படம்.
கோப்புப் படம்.

 இந்தியா எதிர்கொண்ட எல்லை தாண்டிய பயங்கரவாதம், அதை ஊக்குவித்த பாகிஸ்தானுக்கும் அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது. பல்வேறு இஸ்லாமிய பயங்கரவாதக் குழுக்களை இந்தியாவுக்குள் ஊடுருவ அனுமதித்து நீண்ட காலமாக பிரச்னையை ஏற்படுத்திக் கொண்டிருந்த பாகிஸ்தான், தற்போது அதேபோன்ற அச்சுறுத்தலை எதிர்கொள்ள முடியாமல் திணறுகிறது.
 தெஹ்ரீக் - ஏ - தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) என்கிற இஸ்லாமி பயங்கரவாதக் குழு ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையோரப் பகுதிகளில் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்துகிறது. பாகிஸ்தானின் ராணுவம், காவல்துறை, உளவுத்துறை ஆகியவற்றைக் குறிவைத்து தாக்குவது வழக்கமாகிவிட்டது. அத்துடன், பொதுமக்களையும், சுகாதாரத்துறை ஊழியர்களையும்கூட விட்டு வைக்காமல் தாக்குகிறது.
 டிடிபி என்கிற அந்த பயங்கரவாத அமைப்பு, "பாகிஸ்தான் தலிபான்' என்றும் அழைக்கப்படுகிறது. ஆப்கானிஸ்தானிய தலிபான்களைப் போலவே தீவிர மத அடிப்படைவாதத்தைக் கொள்கையாகக் கொண்ட அந்த அமைப்பு பல்வேறு பயங்கரவாத அமைப்புகளைத் தன்னுள் ஒருங்கிணைத்திருக்கிறது. ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான்களின் ஆதரவும், நெருக்கமான உறவும் இந்த அமைப்புக்கு உண்டு.
 ஆகஸ்ட் 2021-இல், அமெரிக்க, நேட்டோ பாதுகாப்புப் படையினர் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து தலிபான்களின் கை ஆப்கானிஸ்தானில் ஓங்கியது. அதன் நீட்சியாகத்தான் பாகிஸ்தானிய தலிபான்களின் வளர்ச்சியையும் பார்க்க வேண்டும்.
 ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியது முதல் டிடிபி அமைப்பின் தலைவர்களுக்கு அங்கே அடைக்கலம் வழங்கப்பட்டது. அடைக்கலம் மட்டுமல்லாமல் அவர்களுக்கு ஆயுத உதவியும், ஆதரவும் வழங்குகிறது ஆப்கானின் தலிபான் அரசு. இந்தியாவுக்குள் பயங்கரவாதக் குழுக்களை அனுப்பி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதைப் போல, இப்போது ஆப்கன் தலிபான் அரசு, டிடிபி அமைப்பைப் பயன்படுத்தி பாகிஸ்தானைத் தாக்குகிறது. வருங்காலத்தில் பாகிஸ்தானிலும் தலிபான் அரசை நிறுவுவது அதன் நோக்கம்.
 பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தும் டிடிபி, ஆப்கானிஸ்தானிலிருந்து செயல்படுவதை வன்மையாகக் கண்டித்து வருகிறது பாகிஸ்தான். அதை எதிர்கொள்ளவோ, தடுத்து நிறுத்தவோ முடியாமல் திணறவும் செய்கிறது.
 பயங்கரவாதக் குழுக்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் பாகிஸ்தானின் முயற்சிகள் வெற்றியடையவில்லை. ஆயுதங்களை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என்கிற நிபந்தனையை பாகிஸ்தான் தலிபான்களும், அதனுடன் இணைந்த பயங்கரவாதக் குழுக்களும் ஏற்பதாக இல்லை. பாதுகாப்புப் படையினர் எந்தவித சமரசமும் இல்லாமல் டிடிபி தாக்குதலை எதிர்கொள்வார்கள் என்கிற பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ராணா சானுல்லா கானின் கூற்றை ஏளனம் செய்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
 ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சி நடப்பதை வரவேற்றுப் பாராட்டியவர் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான். பாகிஸ்தானிய தலிபான்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ஆப்கானிஸ்தானில் ஊடுருவி பயங்கரவாதிகளைத் தாக்க முற்படுவதை அவர் ஏற்கவில்லை. "காபூலை தேவையில்லாமல் இஸ்லாமாபாத் ஆத்திரப்படுத்தக்கூடாது' என்று இம்ரான் கான் தெரிவித்திருப்பதைப் பலரும் வன்மையாக கண்டித்திருக்கிறார்கள். அதை அவர் பொருள்படுத்துவதாக இல்லை.
 பாகிஸ்தான் தலிபான்களை சாக்காகப் பயன்படுத்தி, ஆப்கானிஸ்தானில் அமெரிக்க உதவியுடன் ட்ரோன் தாக்குதல் நடத்த பாகிஸ்தானின் ஷாபாஸ் ஷெரீஃப் அரசு திட்டமிடுகிறது என்பது இம்ரான் கானின் குற்றச்சாட்டு. பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தும் டிடிபி பயங்கரவாதிகளை ஆப்கன் அரசு கட்டுப்படுத்தாததால் அமெரிக்க உதவியை நாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று பிரதமர் அதற்கு காரணம் கூறுவார் என்று எள்ளி நகையாடியிருக்கிறார் இம்ரான் கான்.
 டிடிபியையும் அதனுடன் இணைந்த அல்காய்தா கிளையையும் சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் இணைத்திருக்கிறது அமெரிக்கா. அவர்களுக்கு எதிராக எல்லாவிதமான பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று டிசம்பர் மாதம் அமெரிக்க உள்துறை எச்சரிக்கை விடுத்தது. சர்வதேச பயங்கரவாதத்துக்கு ஆப்கனைக் களமாகக் கொள்ள பயங்கரவாதக் குழுக்கள் முயல்வது எல்லா வகையிலும் எதிர்கொள்ளப்படும் என்றும் எச்சரித்திருக்கிறது அமெரிக்க உள்துறை.
 இந்திய துணைக்கண்ட அல்காய்தா என்கிற அமைப்பின் தலைவர்களை சர்வதேச பயங்கரவாதிகளாக அமெரிக்கா அறிவித்திருக்கிறது. அல்காய்தா கிளையின் தலைவர் ஒசாமா மெஹ்மூத், துணைத்தலைவர் அத்தீப் யாஹியா கோரி, ஆள்சேர்ப்புப் பிரிவின் தலைவர் முகமது மாரூஃப், பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் பயங்கரவாதத் தாக்குதல்களை முன்னெடுக்கும் காரி அம்ஜத் ஆகியோர் அந்தப் பட்டியலில் இடம் பெறுகின்றனர்.
 பாகிஸ்தானிய தலிபான்கள் அல்காய்தா அமைப்புடன் மட்டுமல்லாமல் பல்வேறு பயங்கரவாதக் குழுக்களுடனும் நெருங்கிய தொடர்பில் இணைந்திருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் ஒரே புள்ளியில் இணைவது அமெரிக்க பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்கிற அச்சம் வலுக்கிறது. இந்த பிரச்னையால் பாகிஸ்தானும் அமெரிக்காவும் இணைவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. இந்தியாவுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் நேசக்கரம் நீட்டுவதன் பின்னணியும் இதுதான்.
 மத அமைப்புகளின் அழுத்தத்துக்கு உள்ளாகாமல் பயங்கரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தான் அரசு முழு முனைப்பைக் காட்டாமல் போனால், பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானின் வழியில் பயணிக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com