பாஜகவின் தேர்தல் கணக்கு! | 3 வடகிழக்கு மாநிலங்களின் பேரவைத் தேர்தல் குறித்த தலையங்கம்

பாஜகவின் தேர்தல் கணக்கு! | 3 வடகிழக்கு மாநிலங்களின் பேரவைத் தேர்தல் குறித்த தலையங்கம்

 தொடர்ந்து தேர்தல்கள் நடைபெறுவது அரசு நிர்வாகத்துக்கு பலவீனம் என்கிற கருத்து முன்வைக்கப்படுகிறது. அதேநேரத்தில், தேர்தல்களை ஜனநாயகம் வலுவாக இருப்பதன் எடுத்துக்காட்டாகவும் கொள்ளலாம். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களும், இடைத் தேர்தல்களும் அவ்வப்போது எழும் முக்கிய பிரச்னைகள் குறித்த மக்கள் மன்றத்தின் கருத்தை அறிய வழிகோலுகின்றன என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு ஒன்பது மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற இருக்கின்றன. கடந்த ஆண்டு இறுதியில் குஜராத், ஹிமாசல் சட்டப்பேரவைகளுக்கும், தில்லி மாநகராட்சிக்கும் தேர்தல் நடந்தது. அடுத்த மூன்று மாதத்திற்குள் இப்போது மூன்று வடகிழக்கு மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற இருக்கின்றன.
 திரிபுரா, நாகாலாந்து, மேகாலயம் ஆகிய மூன்று வடகிழக்கு மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. மூன்று மாநிலங்களுமே பாஜக தனிப்பெரும்பான்மையுடனோ அல்லது கூட்டணியாகவோ ஆட்சியில் இருக்கும் மாநிலங்கள். அடுத்த ஆண்டு வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் இந்த சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் பிரதிபலிக்கும் என்பதால், அனைவரது பார்வையும் நடைபெற இருக்கும் தேர்தலில் குவிந்திருப்பதில் வியப்பில்லை.
 தேர்தல் நடைபெற இருக்கும் திரிபுரா, மேகாலயம், நாகாலாந்து மாநிலங்களும், 2023 இறுதியில் நடைபெற இருக்கும் மிஸோரம் சட்டப்பேரவைக்கான தேர்தலும் எந்த அளவுக்கு வடகிழக்கு மாநிலங்களில் பாஜக வேர் ஊன்றி இருக்கிறது என்பதைத் தெளிவுபடுத்தும். மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகுதான், இந்த மாநிலங்களில் பாஜக வலுவான சக்தியாக உருவெடுத்தது. அதற்கு முன்பு அஸ்ஸாம் தவிர, ஏனைய ஆறு வடகிழக்கு மாநிலங்களிலும் பாஜக ஓர் அரசியல் சக்தியாகவே இருக்கவில்லை. அது மட்டுமல்ல, அந்தப் பகுதியில் வாழும் மக்களுடன் கொள்கை ரீதியாகவோ, மத ரீதியாகவோ தொடர்பே இல்லாத கட்சி என்பதையும் குறிப்பிட வேண்டும்.
 வடகிழக்கு மாநிலங்களில் தனித்தோ, கூட்டணியாகவோ அனைத்து மாநிலங்களிலும் ஆட்சியைக் கைப்பற்றியது பாஜகவின் குறிப்பிடத்தக்க வெற்றி என்பதை மறுப்பதற்கில்லை. அந்த மாநிலங்களில் செல்வாக்கு பெற்றிருந்த காங்கிரஸுக்கு மாற்றாக பாஜக உயர்ந்திருக்கிறது என்பது மட்டுமல்ல, திரிபுராவின் இடது முன்னணி ஆட்சியையும் 2018-இல் அகற்றியது மிகப் பெரிய சாதனை.
 மொத்தம் தலா 60 தொகுதிகளைக் கொண்ட திரிபுரா, நாகாலாந்து, மேகாலயம் ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சி தலைமையில் அமைந்த பாஜக பங்கு பெறும் ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நடைபெறும் நாகாலாந்தில் மார்ச் 12-ஆம் தேதியும், பாஜக பங்கு பெறும் தேசிய மக்கள் கட்சி கூட்டணி ஆட்சியில் உள்ள மேகாலயத்தில் மார்ச் 15-ஆம் தேதியும், பாஜக ஆட்சியில் உள்ள திரிபுராவில் மார்ச் 22-ஆம் தேதியும் சட்டப்பேரவையின் பதவிக்காலம் நிறைவடைகிறது.
 தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள மூன்று மாநிலங்களிலும் சேர்த்து வாக்காளர்கள் எண்ணிக்கை சுமார் 62.8 லட்சம்தான். ஆனால், அந்த மாநிலங்கள் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தவை. குறிப்பாக, திரிபுராவில் தனது ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்வதன் மூலம்தான் பாஜக எந்த அளவுக்கு வடகிழக்கு மாநிலங்களில் கால்பதித்திருக்கிறது என்பதை உணர முடியும்.
 2018 பிப்ரவரியில் திரிபுரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அடைந்த வெற்றி யாருமே எதிர்பாராதது. மேற்குவங்கத்திற்கு அடுத்தபடியாக தொடர்ந்து 25 ஆண்டுகள் இடது முன்னணி ஆட்சியில் இருந்த இன்னொரு மாநிலம் அது. அந்த மாநில முதல்வர் மாணிக் சர்க்கார், நேர்மைக்கும் நாணயத்துக்கும் எடுத்துக்காட்டாக விளங்குபவர். அப்படி இருந்தும்கூட, பாஜகவின் வளர்ச்சியைத் தடுத்து அவரால் தனது ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை.
 60 உறுப்பினர்கள் கொண்ட திரிபுரா சட்டப்பேரவையில் 35 இடங்களை வென்று தனிப்பெரும்பான்மையுடன் 2018-இல் பாஜக ஆட்சி அமைத்தது. 25 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் இருந்த இடது முன்னணி, 16 இடங்களில்தான் வெற்றி பெற முடிந்தது. தொடர்ந்து பல ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ், வெறும் 1.79% வாக்குகளைத்தான் பெற்றது.
 பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடிந்தது என்றாலும்கூட, 2018 தேர்தலில் பாஜகவுக்கும் இடது முன்னணிக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் 1.37% மட்டுமே.
 இப்போது காங்கிரஸுடன் இடது முன்னணி கூட்டணி அமைத்திருப்பது பாஜகவுக்கு சவாலாக அமையக்கூடும். திரிபுராவில் திப்ரா மோத்தா என்கிற புதிய கூட்டணியின் வரவு தேர்தல் களம் மேலும் சூடுபிடிக்க வழிகோலியிருக்கிறது.
 தேர்தல் நடைபெற இருக்கும் திரிபுரா, நாகாலாந்து, மேகாலயம் மாநிலங்கள் மக்களவைக்கு மூன்று உறுப்பினர்களைத்தான் அனுப்புகின்றன. வடகிழக்கு மாநிலங்களில் உள்ள 24 மக்களவை உறுப்பினர் இடங்களில் இப்போது 14 இடங்கள் பாஜக வசம் இருக்கின்றன. இந்த ஆண்டு தேர்தல் நடைபெற இருக்கும் நான்கு மாநில சட்டப்பேரவைகளை மட்டுமல்ல, அங்குள்ள 24 மக்களவைத் தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் என்கிற முனைப்பில் பாஜக களமிறங்கியிருக்கிறது. தனது செல்வாக்குக் கேந்திரங்களில் ஏற்படும் பின்னடைவுகளை வடகிழக்கு மாநில வெற்றிகள் ஈடுகட்டும் என்பது பாஜக தலைமையின் கணக்கு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com