தொடரும் பயங்கரம்..! | அமெரிக்காவில் நடந்த பல்வேறு துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் குறித்த தலையங்கம்

தொடரும் பயங்கரம்..! | அமெரிக்காவில் நடந்த பல்வேறு துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் குறித்த தலையங்கம்

 அமெரிக்காவில் கடந்த மூன்று வாரங்களில் நடந்த பல்வேறு துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் பொதுமக்கள் 39 பேர் உயிரிழந்த சம்பவம் அந்நாட்டையே அதிர வைத்திருக்கிறது. அதிலும், கடந்த 8 நாள்களில் மட்டும் மூன்று இடங்களில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. அமெரிக்காவுக்கு துப்பாக்கி கலாசாரம் புதிதல்ல என்றாலும், இப்போதைய "வேகம்' கவலையை ஏற்படுத்துகிறது.
 கடந்த சனிக்கிழமை இரவு, கலிஃபோர்னியா மாகாணம், மான்டெரே பார்க் நகரில் நடைபெற்ற சீனர்களின் ஆசிய புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது, நடன விடுதியொன்றில் ஒருவர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் 11 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நடந்த மூன்றாவது நாளில் அதே மாகாணத்தின் ஹாஃப் மூன் பே என்ற கடற்கரையோர நகரில் இரு விவசாயப் பண்ணைகளில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் உயிரிழந்தனர்.
 இந்த இரு சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் தனிநபர்கள். நடன விடுதி தாக்குதலில் ஈடுபட்டவர் ஹூகேன் டிரான் என்ற 75 வயது ஆசியர் என்பதும், அவர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டதும் தெரியவந்தது. பண்ணைத் தாக்குதலில் ஈடுபட்ட கன்லி ஷாவ் என்ற நபர், அந்தப் பண்ணையில் பணியாற்றியவர் என்றும், சக பணியாளர்கள் மீதான அதிருப்தி காரணமாக இந்தத் தாக்குதலை அவர் நடத்தியிருக்கலாம் என்றும் காவல்துறையினர் கருதுகின்றனர்.
 "மீண்டும் மீண்டும் நடக்கும் இத்தாக்குதல்களால் அமெரிக்காவில் உள்ள அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துபோய் உள்ளனர்' என அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். 2004-ஆம் ஆண்டுடன் காலாவதியான துப்பாக்கிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கும் சட்டத்தை மீண்டும் கொண்டு வருவதற்கு நாடாளுமன்றத்தில் மசோதா அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.
 1994-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்த துப்பாக்கி கட்டுப்பாட்டு சட்டம், 19 வகையான துப்பாக்கிகளை பொதுமக்களுக்கு விற்பனை செய்வதற்கு தடை விதிக்கிறது. அதன்படி, ராணுவத்தில் பயன்படுத்தக்கூடிய தானியங்கி துப்பாக்கிகள், பலவகையான கைத்துப்பாக்கிகள், 10 ரவுண்ட் தோட்டாக்களை வைத்துக்கொள்ள உதவும் "மேகசின்' உள்ளிட்டவற்றை பொதுமக்களுக்கு விற்பனை செய்ய முடியாது.
 இந்தத் தடை அமலில் இருந்த 10 ஆண்டுகளில் அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் குறைந்திருந்ததாக ஓர் ஆய்வு சொல்கிறது. இந்தத் தடை 2004-ஆம் ஆண்டுடன் முடிவுக்கு வந்த பின்னர், மீண்டும் துப்பாக்கிகள் விற்பனையும், துப்பாக்கிச்சூடு
 களும் அதிகரித்துள்ளன. "துப்பாக்கிகள் விற்பனையில் பிரச்னை இல்லை; மக்களிடம்தான் பிரச்னை உள்ளது' எனவும், "துப்பாக்கிகள் எளிதாக கிடைப்பதால்தான் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரிக்கின்றன' எனவும் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன.
 ஒவ்வொரு முறை இதுபோல துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழும்போதும், துப்பாக்கி கட்டுப்பாடு குறித்துப் பேசப்படும். ஆனால், அதனை அமல்படுத்தப்படுவதில்தான் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. என்.ஆர்.ஏ. (நேஷனல் ரைஃபிள்ஸ் அசோசியேஷன்) எனப்படும் தேசிய துப்பாக்கி சங்கம் மற்றும் துப்பாக்கி உரிமை ஆர்வலர்கள் தரும் அழுத்தமே, துப்பாக்கி கட்டுப்பாடு குறித்த உறுதியான முடிவை நாடாளுமன்றம் எடுக்கவிடாமல் தடுக்கிறது.
 அமெரிக்காவின் துப்பாக்கி கலாசாரத்தில் இந்த என்.ஆர்.ஏ. அமைப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. பத்து அமெரிக்கர்களில் மூவர் துப்பாக்கி வைத்துள்ளனர். அவர்களில் 19 % பேர் இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள். இதில், 50 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்களிடம் 1.67 கோடி கைத்துப்பாக்கிகள் உள்பட சுமார் 4 கோடி துப்பாக்கிகள் உள்ளன.
 பொதுமக்கள் துப்பாக்கி வைத்துக் கொள்வதை ஆதரிக்கும் இந்த அமைப்பு, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தனது செல்வாக்கு மூலம் நெருக்கடி கொடுத்து, துப்பாக்கிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படாமல் பார்த்துக் கொள்கிறது என்கிற குற்றச்சாட்டு உண்டு.
 இந்த அமைப்பு தவிர, துப்பாக்கி தயாரிப்பு - விற்பனையில் ஈடுபடும் பெருநிறுவனங்களும் துப்பாக்கி கட்டுப்பாட்டுக்கு எதிராக அழுத்தம் கொடுக்கின்றன. துப்பாக்கி வைத்திருப்பது தனிமனித சுதந்திரம் என 74 % மக்கள் கருதுகின்றனர்.
 அமெரிக்காவில் நடைபெறும் துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் பெரும்பாலும் தனிநபர்களே ஈடுபடுகின்றனர். தனிப்பட்ட காரணங்களுக்காக ஒருவரை குறிவைத்து இலக்கின்றி பொதுமக்களை சுட்டுக் கொல்வதும், பள்ளிகளில் புகுந்து குழந்தைகளைக்கூட சுட்டுக் கொல்வதும், எந்தக் காரணமுமின்றி சாலையில் நடந்து செல்பவர்கள் அல்லது உணவகங்களில் உணவருந்துபவர்கள் மீது நடத்தப்படும் துப்பாக்கிச்சூடு தாக்குதல்களும் தீராத பிரச்னைகளாக உள்ளன.
 உலகம் முழுவதும் நடைபெறும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு சற்றும் குறைவில்லாதது அமெரிக்காவில் அப்பாவி மக்கள் மீது சக மனிதர்களே நடத்தும் தாக்குதல். துப்பாக்கிச்சூடு சம்பவங்களைக் குறைப்பதற்கு கடுமையான துப்பாக்கி கட்டுப்பாட்டு சட்டங்கள் அவசியம். குடியரசு கட்சி, ஜனநாயக கட்சி என எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் துப்பாக்கி கலாசாரத்துக்கு முடிவு கட்டப்படாதது பெரும் வேதனை.
 துப்பாக்கி விற்பனையாளர்கள், பொதுமக்கள், அவற்றைத் தயாரிக்கும் நிறுவனங்கள் ஆகியோர் தரும் அழுத்தங்களுக்குப் பணியாமல் உறுதியான சட்டத்தைக் கொண்டுவருவதன் மூலமே இந்தக் கொடுமையை அமெரிக்காவால் கட்டுப்படுத்த முடியும்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com