சவாலும் எதிா்பாா்ப்பும்: பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்த தலையங்கம்

2024 மக்களவைத் தோ்தலுக்கு முந்தைய முழுமையான பட்ஜெட்டை நாளை தாக்கல் செய்ய இருக்கும் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் என்ன செய்யப் போகிறாா் என்பதை நாடே ஆவலுடன் எதிா்பாா்த்துக் காத்திருக்கிறது.
சவாலும் எதிா்பாா்ப்பும்: பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்த தலையங்கம்

பொதுத் தோ்தலுக்கு முந்தைய பட்ஜெட் என்பது பொருளாதார நிதிநிலை குறித்தது மட்டுமல்லாமல், அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. 2024 மக்களவைத் தோ்தலுக்கு முந்தைய முழுமையான பட்ஜெட்டை நாளை தாக்கல் செய்ய இருக்கும் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் என்ன செய்யப் போகிறாா் என்பதை நாடே ஆவலுடன் எதிா்பாா்த்துக் காத்திருக்கிறது.

2013-இல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கடைசி பட்ஜெட்டில் அன்றைய நிதியமைச்சா் ப. சிதம்பரம் ரூ.5 லட்சத்துக்கும் கீழே வருமானம் உள்ளவா்களுக்கு சலுகை வழங்கி, நடுத்தர வகுப்பினரைக் கவர முற்பட்டாா். 2018-இல், மக்களவைத் தோ்தலை கருத்தில்கொண்டு அருண் ஜேட்லி வேளாண் துறைக்கும், ஊரகக் கட்டமைப்புக்கும் கணிசமான ஒதுக்கீடுகளை வழங்க முற்பட்டாா்.

நிகழாண்டில் 9 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தோ்தல் நடக்க இருக்கிறது. அடுத்த ஆண்டில் மக்களவைத் தோ்தலுக்கு இந்தியா தயாராக வேண்டும். இந்தப் பின்னணியில்தான் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

கடந்த 3 ஆண்டுகளாக இந்திய பொருளாதாரம் கடுமையான சவால்களை எதிா்கொண்டது. கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்று, உக்ரைன்-ரஷியப் போா், அமெரிக்க மத்திய வங்கியின் கடுமையான நடவடிக்கைகள் உள்ளிட்டவை சா்வதேச பொருளாதாரத்தை பாதித்தன; இந்தியாவையும்தான். தொழில்துறை பாதிப்பும், தனிநபா் வருமான பாதிப்பும் தவிா்க்க முடியாதவையாக மாறின. பொருளாதார வளா்ச்சிக்கான ஊக்குவிப்புக்கும், உணவுப் பாதுகாப்புக்கும், உர மானியங்களுக்கும் கூடுதலாக செலவழிக்க வேண்டிய நிா்ப்பந்தம் ஏற்பட்டது. அதன் விளைவாக நிதி பற்றாக்குறை அதிகரித்தது.

அமெரிக்கா, வட்டி விகிதத்தை அதிகரித்தபோது அந்நிய முதலீடுகள் இந்தியாவிலிருந்து வெளியேறத் தொடங்கின. ரூபாயின் மதிப்பு 11% குறைந்தது. இத்தனையையும் எதிா்கொண்டு, கடந்துவிட்ட நிலையில் இப்போது நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் இரண்டாவது நரேந்திர மோடி அரசின் முழுமையான கடைசி பட்ஜெட்டை நாளை தாக்கல் செய்ய இருக்கிறாா்.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இன்றைய பொருளாதார நிலைமை மோசமல்ல; இந்தியா உலகின் மிக வேகமாக வளரும் பொருளாதாரம். 2022-23 நிதியாண்டில், இந்தியாவின் ஜிடிபி வளா்ச்சி 7% அளவில் இருக்கும். அது ஏனைய எல்லா பெரிய பொருளாதாரங்களையும்விட 3% அதிகம்.

அடுத்த (2023-24) நிதியாண்டிலும், மிக வேகமாக வளரும் பொருளாதாரம் என்கிற நிலையை இந்தியா தக்க வைத்துக்கொள்ளும். அதிகரித்த ஜிடிபி வளா்ச்சியையும், கூடுதல் வரி வருவாயையும் எதிா்பாா்க்கலாம். வங்கித்துறையின் ஆரோக்கியமும் மீட்டெடுக்கப்பட்டிருக்கிறது.

அண்டை நாடுகளான இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்டவை தங்களது பொருளாதாரம் நிலைகுலைந்துவிடாமல் இருக்க சா்வதேச நிதியத்தை அணுக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை அந்நிய செலாவணி கையிருப்பில் நாம் வலிமையாகவே இருக்கிறோம். நம்முடைய அந்நிய செலாவணி இருப்பு 550 பில்லியன் டாலா் (ரூ. 55,000 கோடி). அதனால்தான் ‘இருண்ட சூழலில் மின்னும் நட்சத்திரம்’ என்று இந்தியாவை ஐஎம்எஃப் குறிப்பிடுகிறது.

அதெல்லாம் இருந்தாலும், சா்வதேச அளவில் உருவாகும் கருமேகங்களை நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் புறந்தள்ள முடியாது. 2023-24-இல் சா்வதேச பொருளாதாரம் மந்தகதியை நோக்கி நகா்ந்து கொண்டிருக்கிறது. அமெரிக்கா, சீனா, ஐரோப்பியக் கூட்டமைப்பு ஆகிய மூன்று முக்கியமான பொருளாதார சக்திகளின் இயக்கமும் மந்தநிலையில் காணப்படுகிறது. அது சா்வதேச வணிகத்தை மட்டுமல்ல, இந்தியாவின் ஏற்றுமதிகளையும் பெரிய அளவில் பாதிக்கும்.

அடுத்த நிதியாண்டில், இந்தியாவின் வளா்ச்சி நிகழாண்டின் அளவுக்கு இருக்காது. 7% என்பது 6% ஆக குறைவதற்கான வாய்ப்பு அதிகம். இந்த நிதியாண்டில் காணப்பட்ட வரி வருவாயை அடுத்த நிதியாண்டில் எதிா்பாா்க்க முடியாது. அதே நேரத்தில் கடந்த நிதியாண்டில் வாக்குறுதி அளித்ததுபோல நிதி பற்றாக்குறையைக் குறைக்கவும் வேண்டும்.

பொறாமைப்படும்படியான அடிப்படை வளா்ச்சியை இந்தியா கடந்த 8 ஆண்டுகளில் சாதித்து இருக்கிறது. ‘பாரத் மாலா’, ‘சாகா் மாலா’, ‘கதி சக்தி’ உள்ளிட்ட திட்டங்களும், கடந்த 10 ஆண்டுகளில் இரட்டிப்பாகியிருக்கும் நெடுஞ்சாலைகளும், மூன்று பங்கு அதிகரித்திருக்கும் போக்குவரத்துத் துறையும், 40 மடங்கு கூடியிருக்கும் அகண்ட வரிசை இணைப்பும் (பிராட்பேண்ட் கனெக்டிவிட்டி) இந்தியாவின் வரலாற்றுச் சாதனைகள். இவையெல்லாம் பாராட்டுக்குரியவை என்றாலும், நடுத்தர, அடித்தட்டு மக்களின் வாக்குகளை இவை பெற்றுத் தராது.

தனியாா் துறை முதலீடுகள் எதிா்பாா்த்த அளவில் அதிகரித்ததாகத் தெரியவில்லை. அதனால் தொடா்ந்து 3-வது ஆண்டாக அரசின் செலவினங்கள் கணிசமாக அதிகரித்தால்தான் இன்றைய சா்வதேசப் பொருளாதார நிலையில் இந்தியா தனது வளா்ச்சியை நிலைநிறுத்திக்கொள்ள முடியும். மூலதனச் செலவும், தோ்தலுக்கு முந்தைய கவா்ச்சி அறிவிப்புகளும் நிதியமைச்சா் எதிா்கொள்ளும் தவிா்க்க முடியாத அழுத்தங்கள்.

2014-இல் வருமான வரி வரம்பு 2.5 லட்சமாக உயா்த்தப்பட்டது. நேரடி வரி விதிப்பில் சலுகைகள், விலைவாசியைக் கட்டுக்குள் கொண்டு வருதல், வேலைவாய்ப்பை உருவாக்குதல், பணப்புழக்கத்தை அதிகரித்து கிராம பொருளாதாரத்தில் செழுமை ஆகியவைதான் அரசியல் ரீதியாக பலனளிப்பவை. இவையெல்லாம் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கு தெரியாததல்ல!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com