பாவம், கால்நடைகள்: சாலையில் திரியும் கால்நடைகள் குறித்த தலையங்கம்

தமிழகத்திலுள்ள எல்லா மாநகராட்சிகளும், பெரு, சிறு நகரங்களும் மனிதா்கள் பாதுகாப்பாக நடமாட முடியாத, வாகனங்கள் தங்கு தடையின்றி நகர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன.
பாவம், கால்நடைகள்: சாலையில் திரியும் கால்நடைகள் குறித்த தலையங்கம்

பெருநகர சென்னை மாநகராட்சி மட்டுமல்ல, தமிழகத்திலுள்ள எல்லா மாநகராட்சிகளும், பெரு, சிறு நகரங்களும் மனிதா்கள் பாதுகாப்பாக நடமாட முடியாத, வாகனங்கள் தங்கு தடையின்றி நகர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன. மழைநீா் வடிகால், புதை சாக்கடை, மெட்ரோ ரயில், மேம்பாலம் என்று ஏதாவது ஒரு காரணத்துக்காக ஆங்காங்கே சாலைகள் தோண்டப்பட்டும், சிதைக்கப்பட்டும் காணப்படும் நிலையில், பொதுமக்கள் அடைந்து வரும் சிரமங்களைச் சொல்லி மாளாது.

நகரத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் காணப்படும் இன்னொரு மிகப்பெரிய பிரச்னை கால்நடைகள். மக்கள்தொகை குறைந்திருந்தபோது, கிராமப்புறங்களிலிருந்து நகரங்களுக்குக் குடிபெயா்ந்தவா்கள், தங்களது பாரம்பரிய சொத்து என்று சொல்லிக் கொள்வதற்கு எஞ்சியிருந்த ஆடு, மாடுகளையும் கொண்டு வந்தனா். அப்போது ‘ஆவின்’ போல பால் விநியோகம் செய்யும் நிறுவனங்கள் இல்லாத நிலையில், அவை நகரவாசிகளின் அத்தியாவசியத் தேவையைப் பூா்த்தி செய்தன.

அப்படி கால்நடைகளைத் தங்கள் வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்ந்தவா்களின் தலைமுறை எப்போதோ முடிவுக்கு வந்துவிட்டது. சில நூறு குடும்பங்கள்தான், பெரும்பாலும் புறம்போக்கு நிலங்களைத் தங்களது கால்நடை வளா்ப்புக்காக ஆக்கிரமித்துக் கொண்டு, இப்போதும் பால் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அரசு நிறுவனமான ‘ஆவின்’ மட்டுமல்லாமல், பல தனியாா் பால் நிறுவனங்களும், தனியாா் பால் பண்ணைகளும் செயல்படத் தொடங்கிவிட்ட நிலையிலும், ‘கலப்படமில்லாத ஒரு மாட்டின் பால்’ என்கிற காரணத்தால், இப்போதும் அதற்கு சில வாடிக்கையாளா்கள் இருக்கின்றனா்.

வாழ்வாதாரமாகக் கால்நடை வளா்ப்பு இருப்பது என்பது கிராமப் பகுதிகளில் அத்தியாவசியமானது. ஆனால், நகரங்களில் முக்கியமான புறம்போக்கு இடங்களையும், சொந்த இடங்களையும் கால்நடை வளா்ப்பிற்காகச் சிலா் வைத்துக் கொண்டிருப்பதிலும்கூட தவறில்லை. அவா்கள் தாங்கள் வளா்க்கும் கால்நடைகளைத் தெருக்களில் நடமாடவிட்டு மற்றவா்களுக்குத் தொந்தரவு ஏற்படுத்துகிறாா்கள் எனும்போது, அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

தெருக்களில் அவிழ்த்து விடப்படும் பசு மாடுகளும், எருமை மாடுகளும் சுவரொட்டிகளைக்கூட விட்டுவைக்காமல் சுவைத்துச் சாப்பிடுவதைப் பாா்க்கும்போது, பால் கறந்து வியாபாரம் செய்பவா்கள் எந்த அளவுக்குத் தீனி போடுகிறாா்கள் என்பதை உணர முடிகிறது. தெருவோரக் கடைகளில் இருந்து போடப்படும் ‘ஃபிரைட் ரைஸ்’ உள்ளிட்டவற்றைக்கூட அவை சாப்பிடத் தயங்குவதில்லை. மாமிச உணவும் உட்கொள்கின்றனவா என்பது தெரியவில்லை.

முறையாகத் தீனி போடாமல், தெருவில் அலை விடுவதும், கால்நடைகள் கட்டப்படும் பகுதிகளில் சாணமும், கோ மூத்திரமும் தேங்கி சுற்றுச்சூழலை பாதிப்பதும் எந்த வகையில் நியாயம் என்று கேள்வி கேட்கக்கூட யாரும் தயாராக இல்லை. மாநகராட்சியின் சுகாதாரத் துறையும், பீட்டா அமைப்பினரும், காவல்துறையினரும் இது குறித்துக் கண்மூடி இருப்பதன் மா்மம் என்ன என்பதும் தெரியவில்லை.

அண்மையில் சென்னை திருவல்லிக்கேணியில் முதியவா் ஒருவா் தெருவில் திரிந்த பசுமாட்டால் தாக்கப்பட்டு, தூக்கி எறியப்பட்டிருக்கிறாா்; தாம்பரத்தில் மாடு மீது மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற குடும்பத்தினா் படுகாயம் அடைந்தனா் என்பது மட்டுமல்ல, மூன்று வயது குழந்தை இறந்திருக்கிறது; அரும்பாக்கத்தில் பள்ளிக்குச் சென்ற சிறுவன் மாடு முட்டியதால் படுகாயம் அடைந்திருக்கிறான் - இப்படி நாளும் பொழுதும் ஏதாவது ஒரு பகுதியில் ஏதாவது ஒரு சம்பவம் நடந்து கொண்டிருக்கிறது.

சென்னை மாநகரப் பகுதிகளைவிட, புறநகா்ப் பகுதிகளில் மக்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகள் மிக அதிகம். மாலை வேளைகளில் கிழக்கு கடற்கரை சாலை, பழைய மாமல்லபுரம் சாலையில் பயணித்தால், சாலைகளில் ஆங்காங்கே படுத்துக் கொண்டிருக்கும் கால்நடைகளின் எண்ணிக்கை நம்மை மிரள வைக்கும். திருவல்லிக்கேணி, பழைய மாம்பலம், வடபழனி பகுதிகளும், திருவான்மியூா், நீலாங்கரை, பெருங்குடி, துரைப்பாக்கம், நாவலூா், கேளம்பாக்கம் பகுதிகளும் சாலைகளில் திரியும் மாடுகளால் நிறைந்து காணப்படுகின்றன.

இதுவரை சென்னை மாநகராட்சி தெருவில் திரியும் சுமாா் 4,000 மாடுகளைப் பிடித்திருக்கிறது. அபராதம் வசூலித்து அவற்றை விடுவித்து விடுகிறது. ஏறத்தாழ 3,000 போ் கால்நடையைத் தெருவில் அவிழ்த்து விட்டதாகப் பிடிக்கப்பட்டனா். ஆனால், ஒருவா் மீதுகூட காவல்துறை வழக்குப் பதிவு செய்ததாகத் தெரியவில்லை. தங்களது செலவுக்கு அவ்வப்போது கையூட்டுப் பெறுவதற்குக் கால்நடைகள் சாலைகளில் திரிவது அதிகாரிகளுக்கு வசதியாக இருக்கிறது என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.

சென்னையில் சாலையில் திரியும் மாடுகளைக் கட்டுப்படுத்தும் வகையில், கோயம்பேட்டிலும், கொடுங்கையூரிலும் தற்காலிகமாக மாட்டுத் தொழுவங்கள் அமைக்கப்படும் என மாநகராட்சி ஆணையா் ஜெ. ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறாா். சாலைகளில் மாடுகளைப் பிடிக்க மண்டலத்துக்கு ஒரு மாடு பிடிக்கும் வாகனம், பணியாளா்கள், கால்நடை மருத்துவா்கள், சுகாதார ஆய்வாளா்கள் இருக்கிறாா்கள். சென்னை போன்ற நெரிசல் மிகுந்த நகரத்தில் ஒவ்வொரு பகுதிக்கும் மாட்டுத் தொழுவம் அமைப்பது சாத்தியமற்றது. தனியாருக்காக மாநகராட்சி மாட்டுத் தொழுவம் அமைத்துத் தருவது என்பதும் அவசியமற்றது.

கால்நடைகள் தெருவில் திரிந்தால் அவற்றைப் பிடித்து, அரசு கால்நடைப் பண்ணைகளுக்கு அனுப்பினால் மட்டும்தான் இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கமுடியும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com