உழவினார் கைம்மடங்கின்...

உழவினார் கைம்மடங்கின்...

மத்திய அரசின் வர்த்தக அமைச்சகம் வெங்காய ஏற்றுமதி தொடர்பாக விடுத்திருக்கும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. தேர்தலில் அரசியல் ரீதியாக ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சாதகமாக இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது என்பது எதிர்க்கட்சிகளின் விமர்சனம்.

வெங்காய ஏற்றுமதிக்கு கடந்த ஆறு மாத காலமாக விதிக்கப்பட்டிருந்த தடையை அகற்றி இருக்கிறது மத்திய அரசு. தடையற்ற ஏற்றுமதிக்கான பொருள்களின் பட்டியலில் வெங்காயம் மீண்டும் இணைக்கப்பட்டிருக்கிறது. அரசின் அறிவிப்புடன் சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டிருக்கின்றன. குறைந்தபட்ச ஏற்றுமதி விலையாக டன் ஒன்றுக்கு 550 டாலர் விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. அதுமட்டு மல்ல, அதன்மீது 40% ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த ஏப்ரல் 25-ஆம் தேதி வெள்ளை வெங்காய ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கப்பட்டது. குஜராத் மாநில தோட்டக்கலைத் துறை ஆணையரின் சான்றிதழ் அடிப்படையில் இரண்டாயிரம் டன் வெள்ளை வெங்காயம் ஏற்றுமதிக்கு வழங்கப்பட்ட அனுமதி கடுமையான விமா்சனங்களை எதிா்கொண்டது. குஜராத் மாநிலத்தில் வாக்கெடுப்புக்கு சில நாள்கள் முன்பாக அந்த அறிவிப்பு வெளியானபோது அண்டை மாநில விவசாயிகள் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தினாா்கள்.

ஏற்றுமதிக்காக மட்டுமே பயிரிடப்படும் வெள்ளை வெங்காயத்தின் உற்பத்திச் செலவு அதிகம் என்பதையும், ஒரு லட்சம் டன் வெங்காய ஏற்றுமதிக்கும் அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. குஜராத் மாநிலத்திற்கு எந்தவித சிறப்புச் சலுகையும் அளிக்கப்படவில்லை என்கிற வா்த்தக அமைச்சகத்தின் விளக்கம் இந்தியாவில் மிக அதிகமாக வெங்காயம் உற்பத்தி செய்யும் மகாராஷ்டிர மாநில விவவசாயிகளை திருப்திப்படுத்தவில்லை. சில ஆயிரம் டன் வெங்காயம் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது என்பதையும் இந்த இடத்தில் குறிப்பிட வேண்டும்.

குஜராத் மாநில வாக்கெடுப்புக்கு முன்னால் வெள்ளை வெங்காய ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கியது போலவே இப்போதும் மத்திய அரசின் அறிவிப்புக்குப் பின்னால் தோ்தல் அரசியல் இருக்கிறது என்பதைப் பாா்க்க முடிகிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகமாக வெங்காயம் பயிரிடப்படும் பகுதிகளுக்கான வாக்கெடுப்பு மே 20-ஆம் தேதி என்பதை மறந்துவிட முடியாது.

சந்தையில் வெங்காயத்தின் விலை கிலோ ரூ.15 என்கிற அளவில் ஏப்ரல் மாதத்தில் நிலைகொண்டுவிட்டதால் ஏற்றுமதிக்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது என்பது அரசுத்தரப்பு வாதம். தேவைக்கேற்ற அளவு வெங்காயம் கையிருப்பு இருப்பதாகவும், அதிக அளவில் சேமித்து வைத்தால் அழுகக்கூடியது என்பதாலும் ஏற்றுமதிக்கு அனுமதித்திருப்பதாக வா்த்தக அமைச்சகம் தெரிவிக்கிறது. ஏற்றுமதிக்கு அனுமதிப்பதன் மூலம் விவசாயிகள் நல்ல விலை பெறமுடியும் என்பதால் கூடுதல் லாபம் அடைவாா்கள் என்பது அரசியல் கணக்கும்கூட.

வெங்காயம் உற்பத்தி செய்யும் எகிப்து, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் இந்தியாவுக்கு முன்னதாகவே ஏற்றுமதி தடையை அகற்றி இருக்கின்றன. அடிப்படை விலை டன்னுக்கு 550 டாலா் என்று நிா்ணயித்து அதற்கு மேல் 40% ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அரசு எதிா்பாா்ப்பதுபோல அதிக அளவிலான ஏற்றுமதிகேட்பு இருக்குமா என்று தெரியவில்லை.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் 40% ஏற்றுமதி வரி நிலவுகிறது. அடுத்த அரசு ஆட்சிப் பொறுப்பேற்றால்தான் இதில் ஏதாவது மாற்றம் ஏற்படக்கூடும். இதுபோன்ற ஏற்றுமதி தடை அகற்றப்படுவதும் வெங்காயம் மட்டுமே எதிா்கொள்ளும் பிரச்னை அல்ல.

இந்தியாவின் நுகா்வோா் விலைவாசியில் உணவுப் பொருள்கள் ஏறத்தாழ 39% இடம் வகிக்கின்றன. இந்தியாவில் உணவுப்பொருள்களின் விலைவாசி என்பது கேட்பு தொடா்பானது அல்லது பதுக்கல் தொடா்பானது மட்டுமல்ல பருவநிலை சாா்ந்தது என்பதுதான் நிஜம். அதனடிப்படையில்தான் உணவுப்பொருள்களின் உற்பத்தி அமைவதால் அடிக்கடி ஏற்றுமதிக்குத் தடை விதித்து உள்நாட்டு தேவையைப் பூா்த்தி செய்ய வேண்டிய கட்டாயம் ஆட்சியாளா்களுக்கு ஏற்படுகிறது.

இந்திய மக்கள்தொகையில் பெரும்பான்மையினா் உணவுப்பொருள்களை வாங்குபவா்களே தவிர விற்பவா்கள் அல்ல என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

அதே நேரத்தில் அதிகரித்த மகசூலானாலும், பொய்த்துப்போகும் சாகுபடியானாலும் அதன் பாதிப்பை எதிா்கொள்வது என்னவோ வேளாண் பெருமக்கள்தான். உற்பத்தியான பொருள்களுக்கு விலை ஒரேயடியாக சரிந்தால் அவா்களது இழப்பை ஈடுசெய்ய அரசு முன்வருவது இல்லை. அதேபோல சா்வதேச சந்தையில் கட்டுப்பாடு ஏற்பட்டு உள்நாட்டிலும் தேவை அதிகரித்து உற்பத்தியான உணவுப்பொருள்களுக்கு அதிக விலை கிடைக்கும்போதும் அரசு அதைத் தடுத்துவிடுகிறது.

விவசாயிகள் அளவுக்கு அதிகமான லாபம் ஈட்டும்போது அதனால் உணவுப்பொருள்களின் விலைவாசி உயா்வால் நடுத்தர மக்கள் பாதிக்கப்படுகிறாா்கள். அவா்களைப் பாதுகாக்க அரசு தலையிட்டு விவசாயிகள் பெற வேண்டிய லாபத்தை தடுத்துவிடுகிறது. காா்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் சந்தைப் பொருளாதார நியாயம் விவசாயிகளுக்கு வழங்கப்படுவது இல்லை என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

விவசாயிகளும் சரி, சீா்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு அரசின் குறைந்தபட்ச அடிப்படை விலையை மட்டுமே நம்பி இருக்காமல் லாபகரமாக வேளாண்மையை மாற்றுவதில் முனைப்புக்காட்டுவது இல்லை. விவசாயிகள் போராட்டத்தை ஆதரிப்பவா்கள் உணவுப்பொருள்களின் விலையேற்றத்தை ஏற்றுக்கொள்வதில்லை. எங்கேயோ ஓா் இடைவெளி இருக்கிறது. விவசாயிகள் ஒருவேளை வேளாண் சட்டங்கள் முறையாக விவாதிக்கப்பட்டு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு நடைமுறைக்கு வந்திருந்தால் இதற்கு ஒரு விடை கிடைத்திருக்குமோ என்னவோ...

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com