
வங்கக் கடலின் கரையோரம் 153 ஆண்டுகளாக பாரம்பரியச் சின்னமாக ஓர் ஆலமரமாய் வளர்ந்து நிற்கிறது சென்னை பல்கலைக்கழகம். இந்தியாவிலேயே மிகவும் பழமை வாய்ந்த மூன்று பல்கலைக்கழகங்களில் ஒன்றாக இப்பல்கலைக்கழகம் திகழ்கிறது.
இன்றைய தமிழகம், கேரளம், ஆந்திரம், கர்நாடகம், ஒரிசா,மகாராஷ்டிர மாநிலங்களின் சில பகுதிளை உள்ளடக்கிய அன்றைய சென்னை மாகாண மாணவர்களின் உயர்கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, 1857-ம் ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி தொடங்கப்பட்டது சென்னைப் பல்கலைக்கழகம். தென்னிந்திய பல்கலைக்கழகங்களுக்கெல்லாம் தாய் பல்கலைக்கழகம் என்ற பெருமையை இப்பல்கலைக்கழகம் பெற்றுள்ளது.
பழமையும் பெருமையும் வாய்ந்த இந்தப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் கிறிஸ்டோபர் ராலின்சன். இவர் சென்னை நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.
அவரைத் தொடர்ந்து வால்ட்டர் எலியட், கே. ஸ்ரீநிவாச ஐயங்கார், நீதிபதி எப்.டி. ஓஸ்ட்ஃ பீல்ட், முகமது உஸ்மான், ஏ. லட்சுமணசுவாமி முதலியார், நெ.து.சுந்தரவடிவேலு, மால்கம் ஆதிசேஷய்யா என பலர் துணைவேந்தர்களாக இருந்துள்ளனர். 42-வது துணைவேந்தராக க. திருவாசகம் இப்போது இருந்து வருகிறார்.
இவர்களில் அதிக ஆண்டுகள் துணைவேந்தராக இருந்தவர் என்ற பெருமையை ஏ. லட்சுமணசுவாமி முதலியார் பெற்றுள்ளார். இவர் 1942 முதல் 1969 வரை தொடர்ந்து 27 ஆண்டுகள் சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்துள்ளார். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தொடங்கி, சுதந்திரத்துக்குப் பிறகும் துணைவேந்தர் பொறுப்பை இவர் தொடர்ந்துள்ளார்.
மால்கம் ஆதிசேஷய்யா துணைவேந்தராக இருந்த காலம்தான், சென்னைப் பல்கலைக்கழகத்தின் பொற்காலம் எனக் கூறப்படுகிறது. இவர் துணைவேந்தராகப் பதவி வகித்த 1975-78 கால அளவில் சென்னைப் பல்கலைக்கழகத் துறைகளின் எண்ணிக்கை 29-லிருந்து 52 ஆக அதிகரித்தது. ஊடகவியல், கல்வியியல் மற்றும் உயிரி மருத்துவ அறிவியல் உள்ளிட்ட புதுத் துறைகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
இவருடைய காலகட்டத்தில் கல்லூரி அளவில் இருந்த பி.யு.சி., பிளஸ்-2 என பள்ளி அளவில் கொண்டு செல்லப்பட்டது.
எம்.ஐ.டி. பேராசிரியரான சாதிக், 1990-ல் துணை வேந்தராகப் பொறுப்பேற்ற பின்னர் சென்னை பல்கலைக்கழகம் தொழில்நுட்ப அளவில் வளர்ச்சி பெற்றது. பல்கலைக்கழகத் தேர்வு உள்ளிட்ட பல்வேறு நடைமு றைகள் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டது இவருடைய காலகட்டத்தில்தான். துணைவேந்தர் இன்னாசிமுத்து காலத்தில் பல்கலைக்கழக அறிவியல் துறை நவீனமயாகியுள்ளது. இவருடைய முயற்சியின் மூலம் மூலிகைத் தாவர ஆராய்ச்சிக்காக மத்திய அரசிடமிருந்து ரூ. 30 கோடி நிதி பல்கலைக்கழகத்துக்கு கிடைத்தது.
பல்கலைக்கழகம் இன்று
1912-ல் 17 துறைகள் 30 ஆசிரியர்களுடன் செயல்பட்டு வந்த சென்னை பல்கலைக்கழகம் அதன் பிறகு படிப்படியாக வளர்ச்சியடைந்து இப்போது 72 முதுநிலைப் பட்டப் படிப்புத் துறைகள், 152 இணைப்புக்கல்லூரிகள், 52 அனுமதிக்கப்பட்ட ஆராய்ச்சிக் கல்வி நிறுவனங்கள் என அபார வளர்ச்சி கண்டுள்ளது. இது மட்டுமின்றி பல்கலைக்கழகத்தில் 1981-ம்
ஆண்டு தொடங்கப்பட்ட தொலைதூரக் கல்வி நிறுவனம் மூலம், ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கானோர் பட்டம் பெற்று வருகின்றனர். 22 இளநிலை பட்டப் படிப்புகள், 20-க்கும் மேற்பட்ட முதுநிலை பட்டப்படிப்புகள், 5 தொழில் படிப்புகள், 11 பட்டயப் படிப்புகள் மற்றும் 12 சான்றிதழ் படிப்புகள் தொலைதூரக் கல்வி நிறுவனம் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.