
அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள ஃபோர்ட் லாடர்டேல் நகரில் நிதி ஆலோசனை நிறுவனத்தை நடத்தி வருகிறார் மகேந்திரா மலையாளம். அவருடைய மூத்த மகன் அஸ்வின் மகேந்திரா. இவர், அங்குள்ள பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறார்.
இவர், பார்வையற்ற மாணவிகளின் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக 57 மாணவிகளுக்கு கையடக்க ஒலிப்பதிவுக் கருவிகளை வழங்கினார்.
சென்னை தியாகராய நகர் ஜி.என். செட்டி சாலையில் உள்ள சிறுமலர் பார்வையற்றோருக்கான பள்ளியில் இதற்கான நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேசிய பள்ளி முதல்வர் சகோதரி மார்கரெட், மாணவர் அஸ்வினுக்கு நன்றி தெரிவித்தார். அஸ்வின் தந்தை மகேந்திரா மலையாளம் கூறியது: இளம் வயதிலேயே அறிவியலில் அதிக ஆர்வம் உள்ளவரான அஸ்வின் 7-ஆம் வகுப்பு படிக்கும்போது கார்கள் நீரில் மூழ்காமல் இருக்கும் வகையில் வடிவமைத்தார். இதற்காக மாகாண அளவில் அவருக்கு முதல் பரிசு கிடைத்தது. அதற்கடுத்த ஆண்டு புற ஊதா கதிர்களைக் கொண்டு நீரை சுத்திகரிக்கும் முறையைக் கண்டுபிடித்தார். இதற்கும் அவருக்கு முதல் பரிசு கிடைத்தது என்றார் அவர்.
வழக்கமாக அனைத்துக் குழந்தைகளும் பிறந்த நாளுக்கு பரிசுகளைத் தான் விரும்புவார்கள். ஆனால், பார்வையற்ற மாணவிகளுக்கு உதவுவதற்காக இவர் தனது நண்பர்களிடமிருந்து பணமாக மட்டுமே பரிசுகளைப் பெறுவார். அதோடு, படிப்பில் சிறப்பிடம் பிடிக்கும் போதெல்லாம் நாங்கள் செலவுக்குப் பணம் கொடுப்போம். அதையெல்லாம் சேர்த்துவைத்து அவர் தனது சொந்த முயற்சியில் இந்தக் கருவிகளை வாங்கித் தந்துள்ளார் என்று அஸ்வின் தாய் மீனா கூறினார். இந்தக் கருவிக்காக அந்தப் பள்ளியின் பிளஸ் 2 மாணவி பிரவீணா நன்றி கூறி பேசியதாவது, பிரெய்லி பாடபுத்தகங்களை படிக்கும் போது எங்கள் ஒவ்வொருவருக்கும் கைவிரல்கள் வலிக்கும். மிகப்பெரிய பிரெய்லி புத்தகங்களுக்கு பதில் இந்த கையடக்கக் கருவி எங்கள் படிப்பை பலமடங்கு எளிமையாக்கியுள்ளது என்றார்.
மாணவர் அஸ்வின் கூறியது: அஸ்வின் கூறுகையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மாணவிகளுக்கு 63 ஒலிப்பதிவுக் கருவிகளை வழங்கினோம். அதற்கு இந்த அளவு வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கவில்லை. சாதாரணமாக, கடைகளில் விற்கும் டிஜிட்டல் இசையைக் கேட்பதற்கான கையடக்கக் கருவியில் பார்வையற்றவர்களுக்கான கணினி மென்பொருள்களை பதிவேற்றம் செய்துள்ளேன். அதன்மூலம், பார்வையற்றவர்கள் பயன்படுத்தும் வகையில் ஒலியின் உதவியுடன் இந்தக் கருவியை இயக்கலாம்.
இது அவர்களின் பாட வகுப்புகளைப் பதிவு செய்து கேட்கவும், ஒலி வடிவிலான ஆடியோ புத்தகங்களைப் பதிவிறக்கம் செய்துப் படிக்கவும் முடியும். அதோடு, இந்த மாணவிகள் பார்க்கும் தேவை இல்லாமலேயே தங்களுக்கு விரும்பிய பாடல்களைத் தேர்ந்தெடுத்து கேட்கவும் முடியும். இவர்களுக்காக பிரத்யேகமாக அலாரமும், நாள், நேரத்தை அறிவிக்கும் வசதியும் இதில் தரப்பட்டுள்ளன. நான் ஒரு மாணவன் மட்டுமே. என்னால் இந்த அளவுக்குத்தான் மாணவிகளுக்கு உதவ முடியும்.
பல்வேறு விதமான கல்வி உபகரணங்களை மாணவர்களுக்கு வழங்கி வரும் தமிழக அரசு, பார்வையற்ற அனைத்து மாணவ, மாணவியருக்கும் இந்த ஒலிப்பதிவுக் கருவிகளை இலவசமாக வழங்க வேண்டும். இதன்மூலம் அனைத்து பார்வையற்ற மாணவர்களும் கல்வி கற்பது சுலபமாகும் என்றார் அஸ்வின்.