சுடச்சுட

  

  தமிழகப் பாடத் திட்டம் விரைவில் மாற்றியமைக்கப்படும்

  By DIN  |   Published on : 05th February 2017 01:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  mapapandiyarajan

  தமிழகப் பள்ளிகளில் மாநிலப் பாடத்திட்டம் விரைவில் மாற்றியமைக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் கூறினார்.
  தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் தமிழக பள்ளிக் கல்வியின் எதிர்காலம் குறித்த கல்வியாளர்கள் மாநாடு சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது.
  நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியது: தமிழகத்தில் 2011-ஆம் ஆண்டு பள்ளிப் படிப்பை முடித்து உயர்கல்விக்குச் செல்லும் மாணவர்கள் 45 சதவீதமாக உள்ளனர். தற்போது அது 50 சதவீதமாக அதிகரித்துள்ளது.
  தமிழக அரசு கல்வி வாய்ப்புக்கு முக்கியத்துவம் அளிப்பது போன்று, தரமான கல்விக்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதன் காரணமாக கற்றல் சார்ந்த பல்வேறு மதிப்பீடுகளுக்கு தமிழக அரசு தானாகவே தன்னை உட்படுத்தி வருகிறது.
  தனியார் பள்ளிகள் அரசோடு கைகோர்த்து பள்ளிக் கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும். ஒவ்வாரு தனியார் பள்ளியும் தனக்கு அருகில் உள்ள அரசுப் பள்ளியைத் தத்தெடுத்து அதன் கட்டமைப்பு, தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்த முயற்சிக்க வேண்டும். தனியார் பள்ளிகள் அரசுக்கு எதிரிகள் இல்லை என்றாலும், தனியார் பள்ளிகளை ஒழுங்குபடுத்துவதும் அரசின் கடமையாகும்.
  கல்வி மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்குச் சென்றுவிட்டது. கல்வி மாநிலப் பட்டியலில் இடம்பெற வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் நிலைப்பாடு ஆகும். பொதுப்பட்டியலில் இருக்கும் பட்சத்தில் கல்விக்காக மத்திய அரசு ஒதுக்கும் நிதி, திட்டங்கள் 100 சதவீதம் மாநில அரசின் மூலமாக நிறைவேற்றப்பட வேண்டும்.
  தமிழகத்தின் பாடத்திட்டங்கள் குறித்து பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. தமிழக பாடத்திட்டங்கள் விரைவில் மாற்றியமைக்கப்படும். பாடத்திட்டங்கள் நவீன காலத்துக்கு ஏற்ப அவ்வப்போது புதுப்பிக்கவும், மாற்றியமைக்கப்படவும் வேண்டும்.
  சிறந்த கல்வி, அறிவியல், விளையாட்டு, கலாசாரம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம், கல்வியில் நவீன தொழில்நுட்பங்களைப் புகுத்துதல், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் வகையிலான கல்வி ஆகியவற்றை முக்கியக் இலக்காகக் கொண்டு பள்ளிக் கல்வித் துறை செயல்பட்டு வருகிறது என்றார் அவர்.
  கடலோர காவல்துறையின் ஏடிஜிபி சைலேந்திர பாபு, விஐடி பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஜி.விசுவநாதன், சங்கத்தின் செயலாளர் டி.சி.இளங்கோவன், ஆதிபராசக்தி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஜி.பி.அன்பழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai