சுடச்சுட

  

  2018-19 கல்வியாண்டு முதல் பொறியியல் படிப்புக்கு ஒரே நுழைவுத் தேர்வு?

  By DIN  |   Published on : 11th February 2017 12:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வரும் 2018-19-ஆம் கல்வியாண்டு முதல் பொறியியல் படிப்புக்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
  இது தொடர்பாக விதிகளை வகுக்குமாறு அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலை (ஏஐசிடிஇ) மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
  ஏஐசிடிஇ-தான் நாட்டில் பொறியியல் கல்வி தொடர்பான விஷயங்களை நிர்வகித்து வருகிறது. அண்மையில் நடைபெற்ற ஏஐசிடிஇ ஆலோசனைக் கூட்டத்தில் இளநிலை பொறியியல் படிப்புகளுக்காக பொறியியல் கல்லுரிகளில் சேர தேசிய அளவில் ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வை நடத்துமாறு பரிந்துரைக்கப்பட்டது.
  பொறியியல் நுழைவுத் தேர்வில் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்வது, கல்வித் தரத்தை உறுதி செய்வது, அதே நேரத்தில் பல்வேறு நுழைவுத் தேர்வுகளை எழுதும் மாணவர்களின் சுமையைக் குறைப்பது ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
  இந்த நுழைவுத் தேர்வை சிறப்பாக நடத்துவது குறித்து மாநில அரசுகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் கருத்துகளையும் அமைச்சகம் கேட்டுள்ளது.
  இந்திய தொழில்நுட்பக் கல்வி நிலையங்கள் (ஐஐடி) தங்களுக்கென்று தனியாக நுழைவுத் தேர்வுகளை இப்போது நடத்தி வருகின்றன. எதிர்காலத்தில் ஐஐடி-க்களையும் தேசிய அளவில் ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வுக்குள் கொண்டு வருவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
  பொறியியல் கல்லூரிகளில் சேர தேசிய அளவில் ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வு நடத்தும் யோசனைக்கு தமிழ்நாடு அரசு ஏற்கெனவே எதிர்ப்பு தெரிவித்துள்ளது நினைவுகூரத்தக்கது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai