Enable Javscript for better performance
10-ஆம் வகுப்பு தேர்வுக்கு தத்கல் முறையில் விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    10-ஆம் வகுப்பு தேர்வுக்கு தத்கல் முறையில் விண்ணப்பிக்கலாம்

    By DIN  |   Published on : 15th February 2017 01:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பத்தாம் வகுப்பு தேர்வெழுதும் தனித்தேர்வர்கள் சிறப்பு அனுமதித் திட்டத்தின் (தத்கல்) கீழ் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் இயக்குநர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 2017 மார்ச் மாதம் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நாள்களில் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கத் தவறி, தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் தத்கல் முறையில் விண்ணப்பிக்கலாம்.
    பிப்ரவரி 16, 17 ஆகிய 2 நாள்கள் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
    எங்கே விண்ணப்பிக்கலாம்? கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களுக்கு நேரில் சென்று இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தனியார் இணையதள மையங்களில் விண்ணப்பிக்கக் கூடாது.
    கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களின் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்திலும், அனைத்து முதன்மைக் கல்வி மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், அரசுத் தேர்வுகள் மண்டல துணை இயக்குநர் அலுவலகங்களிலும் தெரிந்து கொள்ளலாம்.
    யார் விண்ணப்பிக்கலாம்? அறிவியல் பாடத்துக்கான செய்முறை பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு கருத்தியல் தேர்வுக்கு விண்ணப்பிக்காத தனித்தேர்வர்கள், புதிய பாடத்திட்டத்தில் தேர்வெழுதி தோல்வியுற்றவர்கள், பழைய பாடத்திட்டத்தில் அறிவியல் பாடத்தை தவிர பிற பாடங்களில் தோல்வியடைந்தவர்கள் ஆகியோர் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
    கட்டணம் எவ்வளவு? தேர்வுக் கட்டணம் ரூ.125, சிறப்பு அனுமதிக் கட்டணம் ரூ.500, இணையதள பதிவுக் கட்டணம் ரூ.50 என மொத்தம் ரூ.675-ஐ ரொக்கமாக சேவை மையங்களில் செலுத்தி, ரசீதைப் பெற்றுக் கொள்ள வேண்டும். கட்டணம் செலுத்திய ரசீதில் உள்ள எண்ணைக் கொண்டே தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
    தேவையான ஆவணங்கள்: பத்தாம் வகுப்பு தோல்வியுற்றவர்கள் அதற்கான மதிப்பெண் சான்றிதழ்களின் சான்றொப்பம் இடப்பட்ட நகல்கள், அறிவியல் பாடத்தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் செய்முறை வகுப்பில் கலந்துகொண்டதற்காக தலைமை ஆசிரியரிடமிருந்து பெறப்பட்ட அத்தாட்சி சான்று, நேரடியாக பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுபவர்கள், 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றதற்கான அசல் மாற்று சான்றிதழ், அசல் இஎஸ்எல்சி சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை சேவை மையங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.
    தேர்வு மையங்கள்: திருநெல்வேலி, மதுரை, கோவை, திருச்சி, கடலூர், வேலூர், சென்னை ஆகிய இடங்களில் மட்டுமே தேர்வு மையங்கள் அமைக்கப்படும். தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாள்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai