சுடச்சுட

  

  வங்கிகளில் கல்விக் கடன்களை எளிதாகப் பெற தொடர்பு அதிகாரிகள் விரைவில் நியமனம்: மத்திய அமைச்சர் தகவல்

  By DIN  |   Published on : 18th February 2017 02:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  mp

  கல்விக் கடன் குறித்து வெள்ளிக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசுகிறார் மத்திய நிதி மற்றும் நிறுவனங்கள் விவகாரத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேவால்

  கல்விக் கடன்களை எளிதாகப் பெறுவதற்காக, வங்கி தலைமை அலுவலகங்களில் தொடர்பு அதிகாரிகளை நியமிக்கப் போவதாக, மத்திய நிதி மற்றும் நிறுவனங்கள் விவகாரத் துறை இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மேவால் தெரிவித்தார்.
  "ப்ரீசென்ஸ்' மின் இதழ் மற்றும் கல்விக் கடன் சேவை மையத்தின் சார்பில், சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கல்விக் கடன் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
  மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்குவது மத்திய அரசின் சிறந்த திட்டங்களில் ஒன்றாகும். கல்விக் கடன் தொடர்பாக நடத்தப்படும் முதல் கலந்துரையாடல் நிகழ்ச்சி இதுவாகும். இந்த கலந்துரையாடலில் கிடைத்த ஆலோசனைகளின்படி, வங்கிகளிலிருந்து மாணவர்கள் கல்விக் கடன்களை பெறுவதை எளிதாக தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். கல்விக் கடன்களை சுலபமாக பெற வங்கி தலைமையகங்களில் தொடர்பு அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள். இதற்கான சுற்றறிக்கை, வங்கிகளுக்கு விரைவில் அனுப்பப்படும். மாணவர்கள் கல்விக் கடன் பெறுவதில் உள்ள சிக்கலைத் தீர்க்க கண்காணிப்பு நடைமுறைகள் மேற்கொள்ளப்படும். கல்விக் கடன்களுக்காக குறைதீர்ப்பு மையங்கள் உருவாக்கப்படும். கல்விக் கடன் பெறுவது எப்படி அவசியமானதோ, பெற்ற கடன்களைத் திருப்பி செலுத்துவதும் முக்கியமானது. கடன்களை திருப்பி செலுத்தினால் மட்டுமே மற்ற மாணவர்களுக்கு வங்கிகள் கொடுக்க முடியும்.
  மாணவர்களின் வசதிக்காக மத்திய அரசு "வித்யாலட்சுமி போர்ட்டல்' என்ற வலைப்பக்கத்தை தொடங்கி உள்ளது. மாணவர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஸ்ரீ ராமானுஜரின் ஆயிராமாவது ஜெயந்தியை முன்னிட்டு அவரது நினைவாக நாணயமும், சிறப்பு தபால் தலையும் வெளியிடப்படும் என்றார் அமைச்சர்.
  இந்த நிகழ்ச்சியில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் செயல் இயக்குநர் சுப்ரமணியகுமார் பேசும்போது,"இந்தியாவில் தமிழகத்தில் தான் கடந்த ஆண்டில் மடடும் ரூ.17 ஆயிரத்து 862 கோடி கல்விக் கடனாக வழங்கப்பட்டுள்ளது' என்றார்.
  கல்விக் கடன் சேவை மையத்தின் நிறுவனர் கே.ஸ்ரீநிவாசன், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, காவல்துறை ஏ.டி.ஜி.பி.ரவி, பல்வேறு வங்கிகளின் அதிகாரிகள், மாணவர்கள், வழக்குரைஞர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai