முதல்முறையாக 100 மதிப்பெண்களுக்கான பிளஸ் 2 தேர்வுகள் தொடங்கியது: 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வை எழுதி வருகின்றனர்! 

கடந்த ஆண்டுவரை ஒவ்வொரு பாடங்களிலும் 200 மதிப்பெண்களுக்கு தேர்வெழுதிய பிளஸ் 2 மாணவர்கள்,  தேர்வு முறை மாற்றத்தின்படி b
முதல்முறையாக 100 மதிப்பெண்களுக்கான பிளஸ் 2 தேர்வுகள் தொடங்கியது: 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வை எழுதி வருகின்றனர்! 

தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் இன்று வெள்ளிக்கிழமை (மார்ச் 1) தொடங்கி நடைபெற்று வருகிறது.  மாணவர்கள் தேர்வை ஆர்முடன் எழுதி வருகின்றனர்.

கடந்த ஆண்டுவரை ஒவ்வொரு பாடங்களிலும் 200 மதிப்பெண்களுக்கு தேர்வெழுதிய பிளஸ் 2 மாணவர்கள்,  தேர்வு முறை மாற்றத்தின்படி முதல்முறையாக மொத்தம் 600 மதிப்பெண்களுக்கான (ஒரு பாடத்துக்கு தலா 100 மதிப்பெண்)  தேர்வை எழுதி வருகின்றனர்.  அதேபோன்று மொழிப்பாடங்களுக்கு இரண்டு தாள் தேர்வு முறை ரத்து செய்யப்பட்டு இந்த ஆண்டு ஒரே தாளாக தேர்வுகள் நடைபெறுகின்றன.

தமிழக பள்ளிக் கல்வியின் சமச்சீர் பாடத் திட்டத்தில் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் இன்று வெள்ளிக்கிழமை தொடங்கி, மார்ச்19-ஆம் தேதி முடிகிறது. 

இதற்காக மொத்தம் 2 ஆயிரத்து 941 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 7,068 பள்ளிகளைச் சேர்ந்த 8 லட்சத்து 87 ஆயிரத்து 992 பேர் தேர்வு எழுதி வருகின்றனர். இதைத் தொடர்ந்து தேர்வு முடிவு வரும் ஏப்ரல் 19-இல் வெளியிடப்படவுள்ளது.

தேர்வின்போது துண்டுத்தாள் வைத்திருத்தல், துண்டுத்தாள்களை பார்த்து எழுத முயற்சித்தல், பிற மாணவர்களை பார்த்து எழுதுதல், தேர்வு அதிகாரியிடம் முறைகேடாக நடந்து கொள்ளுதல், விடைத்தாள் மாற்றம் செய்தல் மற்றும் ஆள்மாறாட்டம் போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் தேர்வர்களுக்கு விதிமுறைகளின்படி உரிய தண்டனைகள் வழங்கப்படும்.

தேர்வறை கண்காணிப்பாளர் பணிக்கு 44 ஆயிரத்து 400 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். முறைகேடுகளைத் தடுக்க முதன்மைக் கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், தலைமையாசிரியர்களைக் கொண்ட 4 ஆயிரம் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு வளாகத்திற்குள் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒழுங்கீன செயல்களுக்கு உடந்தையாகவோ அல்லது ஊக்கப்படுத்தவோ பள்ளி நிர்வாகம் முயன்றால் பள்ளித் தேர்வு மையத்தை ரத்து செய்தும், பள்ளி அங்கீகாரத்தை ரத்து செய்திட பள்ளிக்கல்வி மற்றும் மெட்ரிக்.  பள்ளிகள் இயக்குநருக்கு பரிந்துரை செய்தும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம் மற்றும் கழிப்பிட வசதிகளை முறையில் அமைத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  பிளஸ் 2 பொதுத்தேர்வில் முதல் தேர்வாக மொழிப் பாடங்களுக்கானத் தேர்வு நடைபெற்று வருகிறது. மாணவர்கள் தேர்வை ஆர்வமுடன் எழுதி வருகின்றனர்.

இந்நிலையில்,  காஞ்சிபுரம் மாவட்டம் துரைப்பாக்கத்தில் தேர்வு மையம் ஒன்றை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 600 மதிப்பெண்களாகக் குறைக்கப்பட்டதால் பாடச்சுமை கூடியிருப்பதாக கூறப்படுவதை மறுத்தார். போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் பாடங்கள் விளக்கமாக கொடுக்கப்பட்டு பக்கங்கள் மட்டுமே அதிகப்படுத்தப்பட்டிருப்பதாக அமைச்சர் தெரிவித்தார். 

துணை முதல்வர் ஆடியோவில் வாழ்த்து: பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவ மாணவியருக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்  ஆடியோவில் வாழ்த்து தெரிவித்தார். அதில், சிறப்புடன் தேர்வினை எழுதுவதற்கு வாழ்த்துகளை அவர் தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் வாழ்த்து: பிளஸ் 2  பொதுத்தேர்வு எழுதும் மாணவ- மாணவியர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், எந்தவித பதற்றம் இன்றி, தன்னம்பிக்கையுடன் தேர்வு எழுதி பள்ளிக்கல்வியை வெற்றிகரமாக முடிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். மாணவர்கள் மனஉளைச்சல் இல்லாமல் தேர்வு எழுத மைய அதிகாரிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் எண்ணிக்கை சரிவு: கடந்த இரண்டு ஆண்டுகளாக பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் எண்ணிக்கை சரிந்து வருகிறது என்ற தகவல் பள்ளிக்கல்வித்துறையை அறிக்கை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

கடந்த ஆண்டை 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வை,  8 லட்சத்து 47 ஆயிரத்து 648 மாணவர்கள் எழுதினர். ஆனால் நிகழாண்டில் 8 லட்சத்து16 ஆயிரத்து 618 மாணவர்கள் மட்டுமே எழுத உள்ளனர். இதனால், கடந்த ஆண்டைவிட மாணவர்கள் எண்ணிக்கை 31 ஆயிரத்து 030 ஆக சரிந்துள்ளது.

பிளஸ் 2 பொதுத் தேர்வை பொறுத்தவரை, கடந்த ஆண்டு 8 லட்சத்து 60 ஆயிரத்து 434 மாணவர்கள் எழுதினர். இந்த ஆண்டு, 8 லட்சத்து 61 ஆயிரத்து 107 பேர் எழுதுகின்றனர். வெறும் 673 மாணவர்கள் மட்டுமே அதிகரித்துள்ளனர்

 2017 ஆம் ஆண்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வை 8 லட்சத்து 93 ஆயிரத்து 262 பேர் எழுதியுள்ளனர். இந்த எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில்  நிகழாண்டில் 32 ஆயிரத்து155 பேர் குறைவாக எழுதுகின்றனர் என தெரிய வந்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக மாணவர்கள் எண்ணிக்கை சரிந்து வருவது பள்ளிக்கல்வித்துறையை அதிர்ச்சியடைய வைத்துள்ளது

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு அதிக பக்கங்களுடன்  புதிய பாடத்திட்டம் அமல்படுத்தி இருப்பது, மாணவர்களுக்கு மிகப் பெரும் சுமையை ஏற்படுத்தி இருப்பதே இதற்கு காரணம் என கல்வியாளர்கள் கருதுகின்றனர். 

சந்தேகங்களுக்கு தீர்வு: தேர்வு காலங்களில் மாணவர்கள் எந்தவித அச்சமும் இல்லாமல் தேர்வை சந்திப்பதற்கும், அந்த நேரங்களில் ஏற்படும் சந்தேகங்களை தீர்த்துக்கொள்வதற்கும் பள்ளிக்கல்வி துறை சார்பில் கடந்த ஆண்டு (2018) மார்ச் மாதம் 1ஆம் தேதி ‘14417’ என்ற 24 மணி நேரமும் இயங்கக்கூடிய இந்த இலவச தொலைபேசி எண் சேவையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இந்த ஆண்டும் பொதுத்தேர்வு குறித்த சந்தேகங்களுக்கு தீர்வுகாண  ‘14417’ என்ற இலவச தொலைபேசி எண் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.  இதில் ஆசிரியர்கள், ஊழியர்கள் ஆலோசனை வழங்கி வருகிறார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com