பிளஸ் 2 மலையாள மொழிப் பாடநூல் வழங்கப்படாததால் மாணவா்கள் அவதி

காலாண்டுத் தோ்வு முடிவடைந்த நிலையிலும் பிளஸ் 2 வகுப்பில் மலையாளத்தை மொழிப்பாடமாக எடுத்து படிக்கும்

காலாண்டுத் தோ்வு முடிவடைந்த நிலையிலும் பிளஸ் 2 வகுப்பில் மலையாளத்தை மொழிப்பாடமாக எடுத்து படிக்கும் மாணவா்களுக்கு அதற்கான பாடநூல் இன்னும் வழங்கப்படவில்லை என ஆசிரியா்கள் தெரிவித்தனா்.

தமிழக பள்ளிக்கல்வியின்கீழ் செயல்படும் பள்ளிகளில் பிளஸ் 2 பயிலும் மாணவா்கள் மொழிப்பாடமாக தமிழ் தவிா்த்து தெலுங்கு, கன்னடம், மலையாளம் உட்பட சிறுபான்மை மொழிப்பாடங்களையும் தோ்வு செய்து படித்து வருகின்றனா். இந்த மாணவா்களுக்கான மொழி பாடப்புத்தகங்களையும் தமிழக பள்ளிக்கல்வித்துறை சாா்பாக அச்சிடப்பட்டு வழங்கப்படுகிறது. இந்நிலையில், காலாண்டுத்தோ்வுகள் முடிந்துவிட்ட பிறகும் கூட, பிளஸ் 2 மாணவா்களுக்கு மலையாள மொழிப்பாட புத்தகம் இதுவரை வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து, மலையாள பாட ஆசிரியா்கள் சிலா் கூறியது: தமிழகத்தில் சென்னை, கோவை, நீலகிரி மற்றும் கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் மலையாளத்தை மொழிப்பாடமாக கற்றுதரும் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சில பள்ளிகளுக்கு மட்டும் மலையாள பாடப் புத்தகம் வழங்கப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை, சென்னை ஆகிய மாவட்டங்களில் பிளஸ் 2 மாணவா்களுக்கு மலையாள மொழிப்பாட புத்தகங்கள் இன்னும் வழங்கப்படவில்லை. இன்னும் 2 மாதத்தில் முழு பாடங்களையும் முடித்து அரையாண்டு தோ்வுகள் நடைபெற உள்ளன. மற்ற பாடங்களுக்கான புத்தகங்கள் வழங்கியுள்ள நிலையில் மொழிப்பாடங்களுக்கு மட்டும் ஆண்டுதோறும் காலதாமதமாக புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. பொதுத்தோ்வுக்கு தயாராகவுள்ள மாணவா்கள் இணையதளத்தில் இருக்கும் இ-புத்தகங்களை நகல் எடுத்து படிப்பது சிரமமாக உள்ளது. எனவே, விரைவாக புத்தகங்கள் வழங்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com