உயர்த்தப்பட்ட தேர்வு கட்டணம் குறைப்பு: திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அறிவிப்பு 

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் உயர்த்தப்பட்ட தேர்வுக் கட்டணம் மாணவர்களின் தொடர் போராட்டம் எதிரொலியாக, உயர்த்தப்பட்ட
உயர்த்தப்பட்ட தேர்வு கட்டணம் குறைப்பு: திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அறிவிப்பு 


திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் உயர்த்தப்பட்ட தேர்வுக் கட்டணம் மாணவர்களின் தொடர் போராட்டம் எதிரொலியாக, உயர்த்தப்பட்ட தொகையிலிருந்து பகுதி அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது.

வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கீழ் கடலூர், விழுப்புரம் காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.  இந்த கல்லூரிகளுக்கான தேர்வுக்கட்டணம் அண்மையில் உயர்த்தப்பட்டது.

இளநிலை படிப்புக்கு தாள் ஒன்றுக்கு ரூ. 68-லிருந்து ரூ.100-ஆகவும், முதுநிலைப் படிப்புக்கு ரூ.113-லிருந்து ரூ.160-ஆகவும் தேர்வுக் கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்த கட்டண உயர்வு ஏழை, எளிய மாணவர்களுக்கு பெரும் சுமையாக அமையும் என்பதால்,  கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் அரசுக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கிய இந்தப் போராட்டம் 5 ஆவது நாளாக திங்கள்கிழமையும் நீடித்தது. இதனிடையே, மறியலில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தனித் தனியே 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 

இந்த நிலையில், பல்கலைக்கழக நிர்வாகம் தேர்வுக் கட்டணத்தை பகுதி அளவுக்கு குறைத்துள்ளதாக பல்கலை. பதிவாளர் (பொ) பெருவழுதி கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். 

அதன்படி, இளநிலை படிப்புக்கான தேர்வுக் கட்டணம் ரூ.100-லிருந்து ரூ.90-ஆகவும் முதுகலை படிப்புக்கான தேர்வுக் கட்டணம் ரூ.160-லிருந்து ரூ.145-ஆகவும் குறைக்கப்பட்டது. மேலும், செய்முறைத் தேர்வு உள்பட பல்வேறு பிரிவுகளுக்கான தேர்வு கட்டணங்களும் உயர்த்தப்பட்ட தொகையிலிருந்து பகுதியளவு குறைக்கப்பட்டன. இதனை பல்கலை. பதிவாளர் (பொ) பெருவழுதி அறிவித்துள்ளார். இதற்கான அறிவிப்பு பல்கலைக்கழக இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.

குறைக்கப்பட்ட தேர்வு கட்டண விவரங்கள் வருமாறு: (பழைய தேர்வு கட்டணங்கள் அடைப்புகுறிக்குள் உள்ளது)

எழுத்து தேர்வு: இளங்கலை பட்டப்படிப்பு தாள் ஒன்றுக்கு ரூ.90 (ரூ.100), முதுகலை பட்டப்படிப்பு (எம்.ஏ, எம்.எஸ்சி, எம்.எஸ்.டபிள்யு, எம்.காம் ஆகியவை) தாள் ஒன்றுக்கு ரூ.145 (ரூ.160). எம்சிஏ, எம்பிஏ, எம்.எஸ்சி.(ஐ.டி), எம்.எஸ்சி.(சி.எஸ்) ஆகிய படிப்புகளுக்கு தாள் ஒன்றுக்கு ரூ.450 (ரூ.500) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

செய்முறை தேர்வு கட்டணம்: இளங்கலை பட்டப்படிப்புகளுக்கான் 3 மணி நேர செய்முறை தேர்வு ஒன்றுக்கு ரூ.150 (ரூ.175), 6 மணி நேர செய்முறை தேர்வு - தேர்வு ஒன்றுக்கு ரூ.300 (ரூ.350). பி.எஸ்சி., எச்.சி.எம் படிப்பிற்கான செய்முறை தேர்வு கட்டணம் ரூ.300 (ரூ.350) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முதுகலை பட்டப்படிப்பு செய்முறை தேர்வு கட்டணம்: எம்.ஏ, எம்.எஸ்சி, எம்பிஏ, எம்.எஸ்.டபிள்யு படிப்புகளுக்கான 3 முறை செய்முறை தேர்வு ஒன்றுக்கு ரூ.275 (ரூ.300), எம்.சி.ஏ. படிப்புகளுக்கு தேர்வு ஒன்றுக்கு ரூ.350 (ரூ.400), எம்.எஸ்சி., ஐ.டி., சி.எஸ்., இ.எம். ஆகிய படிப்புகளுக்கு தேர்வு ஒன்றுக்கு ரூ.275 (ரூ.300), எம்.எஸ்சி படிப்புகளுக்கான 6 மணிநேர செய்முறை தேர்வுகளுக்கு தேர்வு ஒன்றுக்கு ரூ.500 (ரூ.600). 

எம்.எஸ்சி., ஐ.டி., சி.எஸ்., இ.எம். ஆகிய படிப்பிற்கான (3 மணி நேர செய்முறை தேர்வு )செய்முறை தேர்வு கட்டணம் ஒரு தேர்வுக்கு ரூ.275 (ரூ.300),

எம்.எஸ்சி., அப்ளைடு மைக்ரோபயாலஜி செய்முறை தேர்வு கட்டணம் தேர்வு ஒன்றுக்கு ரூ.1,600 (ரூ.1,800) மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.  

நவம்பர், டிசம்பர் 2019 இல் நடைபெற உள்ள தேர்வுகளுக்கு வருகிற 27 ஆம் தேதிக்குள் அபராதத்தொகை இல்லாமல் மாணவர்கள் தேர்வு கட்டணம் செலுத்தலாம். அக்டோபர் 1 ஆம் தேதி வரை அபராதத்தொகையுடன் தேர்வு கட்டணம் செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com