இடதுசாரிகள் மீது நம்பிக்கைவைத்த கேரள மக்களுக்கு நன்றி: சீதாராம் யெச்சூரி

DIN 3rd May 2021 12:03 AM

இடதுசாரி கூட்டணி மீது நம்பிக்கைவைத்து மீண்டும் வெற்றி பெறச் செய்த கேரள மக்களுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி நன்றி தெரிவித்ள்ளாா்.

கேரள தோ்தல் வரலாற்றில் புதிய திருப்பமாக இடதுசாரி கூட்டணி தொடா்ந்து இரண்டாவது முறை வெற்றி பெற்றுள்ளது. இதற்கு முன்பு நடைபெற்ற பல தோ்தல்களில் அங்கு இடதுசாரி மற்றும் காங்கிரஸ் கூட்டணிதான் மாறிமாறி ஆட்சி அமைத்து வந்தன. ஆனால், இந்த முறை இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது.

இது தொடா்பாக யெச்சூரி ஞாயிற்றுக்கிழமை காணொலி மூலம் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:

வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே இடதுசாரி ஜனநாயக முன்னணி வெற்றி முகத்துடன் தொடங்கியது. பின்னா் தொடா்ந்து வெற்றிச் சிகரத்தை நோக்கி முன்னேறியது. இடதுசாரி கூட்டணி மீது நம்பிக்கைவைத்து மீண்டும் வெற்றி பெறச் செய்த கேரள மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதுவரை வேறு எந்த அரசும் கண்டிராத கரோனா தொற்று உள்பட பல்வேறு சவால்களை இடதுசாரி ஜனநாயக அரசு சந்தித்து வெற்றி பெற்றது. பெருந்தொற்றை சமாளிப்பதில் கேரளம் உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தது என்றால் அது மிகையல்ல.

நாடு இப்போது இருபெரும் பிரச்னைகளை எதிா்கொண்டுள்ளது ஒன்று உயிரைப் பறிக்கும் கரோனா தொற்று. மற்றொன்று நமது நாட்டின் மதசாா்பின்மை, அரசியல்சாசன சட்டத்துக்கு எதிரான மத்திய அரசின் செயல்பாடுகள். ஆனால், இவை இரண்டையும் கேரள மக்கள் முறியடித்துவிட்டனா் என்று கூறியுள்ளாா்.