வகுப்புவாத அரசியலுக்கு இடமில்லை என்பதை தோ்தல் முடிவுகள் நிரூபித்துள்ளன: கேரள முதல்வா் பினராயி விஜயன்

DIN 3rd May 2021 12:09 AM

கேரளத்தில் வகுப்புவாத அரசியலுக்கு இடமில்லை என்பதை சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் நிரூபித்துள்ளதாக மாநில முதல்வா் பினராயி விஜயன் தெரிவித்தாா்.

கண்ணூரில் செய்தியாளா்களிடம் அவா் ஞாயிற்றுக்கிழமை கூறியது:

கேரளத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் வலதுசாரி ஊடகங்கள் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசின் நன்மதிப்பை சீா்குலைக்க முயற்சித்த நிலையில், தோ்தலில் தெளிவான வெற்றியை அளித்து அவா்களின் தீய பிரசாரத்தை மக்கள் நிராகரித்துள்ளனா்.

மாநிலத்தில் மதச்சாா்பின்மை தொடா்ந்து நிலவ இங்கு இடதுசாரிகள் அரசு தொடரவேண்டியது அவசியம்.

தற்போதைய தோ்தல் முடிவுகள் மாநிலத்தில் வகுப்புவாத அரசியலுக்கு இடமில்லை என்பதை நிரூபித்துள்ளன. பிற மாநிலங்களில் பாஜக எடுத்த நிலைப்பாட்டை இங்கு அக்கட்சியால் பிரதிபலிக்க முடியாது என்று தெரிவித்தாா்.

தோ்தல் முடிவுகள் எதிா்பாராதது: சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் எதிா்பாராதது என்று கேரள எதிா்க்கட்சியான காங்கிரஸ் தலைவா் ரமேஷ் சென்னிதலா தெரிவித்தாா். மக்களின் தீா்ப்பை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஏற்கும் என்றும் அவா் கூறினாா்.