ஒரத்தநாட்டில் செல்வாக்கைத் தக்க வைத்த வைத்திலிங்கம்

DIN 3rd May 2021 02:44 PM

அதிமுகவில் தொண்டராக இருந்து படிப்படியாக உயர் பதவியை எட்டிய வைத்திலிங்கம் ஒரத்தநாடு தொகுதியை மீண்டும் கைப்பற்றியதன் மூலம், கட்சியில் தனது செல்வாக்கையும் தக்க வைத்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டத்திலுள்ள தெலுங்கன்குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த இவர் எம்.ஜி.ஆர். காலத்திலேயே அதிமுகவில் இணைந்தார். தொடக்கக் காலத்தில் தெலுங்கன்குடிகாடு கிளைச் செயலர், 1985 ஆம் ஆண்டு முதல் ஒரத்தநாடு ஒன்றியத் துணைச் செயலர், 1995 ஆம் ஆண்டு முதல் ஒன்றியச் செயலர், 2003 ஆம் ஆண்டு முதல் தஞ்சாவூர் தெற்கு மாவட்டச் செயலர், கட்சியின் அமைப்புச் செயலர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்து வந்தார். இவர் முதல் முதலாக ஒரத்தநாடு தொகுதியில் 2001 ஆம் ஆண்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 

அப்போது தொழில் துறை அமைச்சராகவும், பின்னர் வனத் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். இதே தொகுதியில் மீண்டும் 2006 ஆம் ஆண்டில் வென்ற இவர், தொடர்ந்து 2011 ஆம் ஆண்டிலும் வெற்றி பெற்று வீட்டு வசதி, நகர்புற வளர்ச்சி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சராகவும் பணியாற்றினார். அப்போது, கட்சியில் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட நால்வர் அணி, ஐவரணியில் இவரும் இடம்பெற்றார். ஆனால், 2016 ஆம் ஆண்டில் தொடர்ந்து நான்காவது முறையாகப் போட்டியிட்ட இவர், திமுக வேட்பாளர் எம். ராமச்சந்திரனிடம் 3,645 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார். 

இத்தொகுதியில் தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்ற அவர் தோல்வியடைந்தது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பையும், வியப்பையும் ஏற்படுத்தியது. அத்தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது. எனவே, கட்சியில் செல்வாக்கு பெற்ற நிர்வாகிகளில் ஒருவராகத் திகழ்ந்த வைத்திலிங்கம் வெற்றி வாய்ப்பை இழந்ததால், அவரது எதிர்காலமும் கேள்விக்குறியானது. என்றாலும், இவரை ஜெயலலிதா மாநிலங்களவை உறுப்பினராக்கினார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சியில் குழப்பம் ஏற்பட்டபோது, சமூகமான நிலையை ஏற்படுத்திய நிர்வாகிகளில் வைத்திலிங்கமும் ஒருவர்.

எனவே, அதிமுகவில் தொடர்ந்து மாவட்டச் செயலராகவும் நீடித்து வந்த வைத்திலிங்கத்துக்குக் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பும் வழங்கப்பட்டது. இந்நிலையில், நடந்து முடிந்த தேர்தலில் ஒரத்தநாடு தொகுதியில் அதிமுக சார்பில் யார் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. என்றாலும், இத்தொகுதியில் தொடர்ந்து ஐந்தாவது முறையாக வைத்திலிங்கம் களமிறங்கினார். ஆனால், கள நிலவரங்களும், கருத்துக்கணிப்புகளும் இவருக்கு எதிராகவே இருந்ததால், வெற்றி வாய்ப்பு மிகவும் கடினம் என்ற சூழ்நிலை இருந்தது.

இதனிடையே, இத்தேர்தலில் கிடைக்கும் வெற்றி மூலமே, அரசியலில் அவரது எதிர்கால வாழ்க்கை அமையும் என்ற கருத்தை அரசியல் பார்வையாளர்கள் முன் வைத்தனர். எனவே, இந்த முறை வெற்றி பெற வேண்டிய கட்டாய நிலை வைத்திலிங்கத்துக்கு ஏற்பட்டது. வேட்பு மனு தாக்கலுக்கு பிறகு வைத்திலிங்கம் புதிதாக வியூகத்தை அமைத்து, முழு வீச்சில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 
அவரே இரவில் நேரடியாகப் பல கிராமங்களில் வீடு, வீடாகச் சென்று, ஒவ்வொரு குடும்பத்தினரையும் சந்தித்து வாக்கு சேகரித்தார். இதைத்தொடர்ந்து, கடந்த முறை போட்டியிட்டு வெற்றி திமுக வேட்பாளர் எம். ராமச்சந்திரனை இம்முறை 28,815 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் அதிமுகவிலும் தனது செல்வாக்கை தக்க வைத்துள்ளார் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.