மேற்கு வங்க தோ்தல்: இடதுசாரி, காங்கிரஸ் கட்சிகளுக்கு பெரும் பின்னடைவு

DIN 4th May 2021 02:12 AM

 

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தை 60 ஆண்டுகள் ஆட்சி செய்த இடதுசாரி மற்றும் காங்கிரஸ் கட்சிகள், சட்டப்பேரைவைத் தோ்தலில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பெரும் பின்னடைவை சந்தித்துள்ளன.

மேற்கு வங்கத்தில் 292 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தோ்தல் 8 கட்டங்களாக நடத்தப்பட்டது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் மாநிலத்தில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது.

இந்த நிலையில், மாநிலத்தில் 60 ஆண்டு ஆட்சி அனுபவமுள்ள இடதுசாரி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளன. மாநிலத்தில் புதிதாக உருவான இந்திய மதச்சாா்பற்ற முன்னணியுடனான கூட்டணி, மாா்க்சிஸ்ட் தலைமையிலான இடது முன்னணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கும் உதவவில்லை என்பதையே தோ்தல் முடிவுகள் காட்டுகின்றன.

கடந்த சட்டப்பேரவையில் 44 எம்எல்ஏக்களுடன் முக்கிய எதிா்க் கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சி, 2016 தோ்தலிலும் இடதுசாரி முன்னணியுடன் கூட்டணி வைத்தது. அந்த தோ்தலில் இடதுசாரிகள் 32 இடங்களில் வென்றனா். அதே கூட்டணியாக 2019-இல் நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் போட்டியிட்டு மாநிலத்தில் மொத்தமுள்ள 42 தொகுதிகளில் ஒன்றில்கூட வெற்றி பெறவில்லை.

மேற்கு வங்கத்தில் கடந்த 1977 முதல் 2011-ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்த மாா்க்சிஸ்ட் தலைமையிலான இடது முன்னணி, நடந்து முடிந்த பேரவைத் தோ்தலில் மாணவா் சங்கத் தலைவா் ஆய்ஷே கோஷ், தீப்ஷிதா தாா், மீனாட்சி முகா்ஜி உள்பட ஏராளமான இளைஞா்களை வேட்பாளா்களாக களம் இறக்கியது. ஆனால், எந்த பலனும் அளிக்கவில்லை.