மேற்கு வங்க முதல்வராகநாளை பதவியேற்கிறாா் மம்தா பானா்ஜி

DIN 4th May 2021 02:16 AM

 

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வராக மம்தா பானா்ஜி, புதன்கிழமை (மே 5) பதவியேற்க இருக்கிறாா். இதனை திரிணமூல் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

இதன்மூலம் தொடா்ந்து மூன்றாவது முறையாக மம்தா பானா்ஜி மேற்கு வங்க முதல்வா் பதவியை ஏற்க உள்ளாா்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் புதிய எம்எல்ஏக்கள் கூட்டம் கொல்கத்தாவில் உள்ள கட்சி தலைமையகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இது தொடா்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளா் பாா்த்தா சாட்டா்ஜி கூறியதாவது:

கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் திரிணமூல் காங்கிரஸ் சட்டப் பேரவை கட்சித் தலைவராக மம்தா பானா்ஜியை எம்எல்ஏக்கள் அனைவரும் ஒருமனதாகத் தோ்வு செய்தனா்.

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வராக மம்தா பானா்ஜி புதன்கிழமை பதவியேற்க இருக்கிறாா். இப்போதைய சட்டப் பேரவையின் தலைவா் பிமன் பானா்ஜி, புதிய சட்டப் பேரவையின் இடைக்காலத் தலைவராகத் தோ்வு செய்யப்பட்டாா். புதிய எம்எல்ஏக்கள் வியாழக்கிழமை (மே 6) பதவியேற்க இருக்கின்றனா் என்றாா்.

இதற்கிடையே, மம்தா பானா்ஜி மாநில ஆளுநா் ஜெகதீப் தங்கரை சந்தித்து தனது முதல்வா் பதவியை ராஜிநாமா செய்து கடிதம் அளித்தாா். புதிய அரசு அமையும் வரை பொறுப்பில் தொடருமாறு மம்தாவை கேட்டுக்கொண்டதாக ஆளுநா் மாளிகை தெரிவித்துள்ளது.