தேனி-வேட்பாளர்கள் தேர்வால் திசை மாறிய வெற்றிவாய்ப்பு!

DIN 6th May 2021 05:01 AM

 

தேனி மாவட்டத்தில் கடந்த 2016}ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 4 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்த அதிமுக, தற்போது ஆண்டிபட்டி, பெரியகுளம்(தனி), கம்பம் ஆகிய 3 தொகுதிகளில் தோல்வியடைந்துள்ளது.
மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் கடந்த  2016}இல் நடைபெற்ற சட்டப் பேரவை தேர்தலில் அதிமுக, திமுக ஆகியவற்றுக்கிடையே  நேரடிப் போட்டி இருந்தது. இதில், 4 தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றியது. ஆண்டிபட்டி தொகுதியில் தங்க.தமிழ்ச்செல்வன், பெரியகுளம் தொகுதியில் கே.கதிர்காமு, போடி தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம், கம்பம் தொகுதியில் எஸ்.டி.கே.ஜக்கையன் ஆகியோர் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

இதில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின் தங்க.தமிழ்ச்செல்வன், கே.கதிர்காமு ஆகியோர் அமமுகவிற்குச் சென்றதால் சட்டப் பேரவை உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதனால், கடந்த 2019}இல் ஆண்டிபட்டி, பெரியகுளம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெற்றது. இதில், 2 தொகுதிகளையும் திமுக கைப்பற்றியது.

மீண்டும் நேரடி மோதல்: இந்த நிலையில், தற்போது நடைபெற்ற சட்டப் பேரவை தேர்தலில் மாவட்டத்திலுள்ள 4 தொகுதிகளிலும் மீண்டும் அதிமுகவும், திமுகவும்  நேரடியாக மோதின. 

ஆண்டிபட்டி தொகுதியில் திமுக சார்பில் ஏ.மகாராஜன், அதிமுக சார்பில் ஏ.லோகிராஜன், பெரியகுளம் (தனி) தொகுதியில் அதிமுக சார்பில் எம்.முருகன், திமுக சார்பில் கே.எஸ்.சரவணக்குமார், போடி தொகுதியில் அதிமுக சார்பில் ஓ.பன்னீர்செல்வம், திமுக சார்பில் தங்க.தமிழ்ச்செல்வன், கம்பம் தொகுதியில் திமுக சார்பில் நா.ராமகிருஷ்ணன், அதிமுக சார்பில் எம்.சையதுகான் ஆகியோர் வேட்பாளர்களாக களம் இறக்கப்பட்டனர்.

கைநழுவிய தொகுதிகள்: இதில், போடி தொகுதியில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. ஏனைய 3 தொகுதிகளும் அதிமுகவிற்கு கை நழுவியுள்ளது. பெரியகுளம், ஆண்டிபட்டி ஆகிய தொகுதிகளில் கடந்த 2019}இல் நடைபெற்ற இடைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்கள், இந்தத் தேர்தலில் மீண்டும் அதிமுக வை எதிர்த்து போட்டியிட்டு 2}வது முறையாக வெற்றி பெற்றுள்ளனர்.

கம்பம் தொகுதியில் கடந்த 2016}இல் நடைபெற்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த நா.ராமகிருஷ்ணன், இம்முறை மீண்டும் அதே தொகுதியில் அதிமுகவை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

திசை மாறிய வெற்றி வாய்ப்பு: கம்பம் தொகுதியில் கடந்த 2016}ல் நடைபெற்ற சட்டப் பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற எஸ்.டி.கே.ஜக்கையனுக்கு இம்முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை. பெரியகுளம் தொகுதியில் அதிமுக சார்பில் புதுமுக வேட்பாளர் களமிறக்கப்பட்டார். ஆண்டிபட்டி தொகுதியில் கடந்த 2019}இல் நடைபெற்ற இடைத் தேர்தலில் தோல்வியடைந்த ஏ.லோகிராஜனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது.  இதில் ஏ.மகாராஜனும், ஏ.லோகிராஜனும் சகோதரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த 3 தொகுதிகளிலும் அமமுக வேட்பாளர்கள் குறைவாகவே வாக்குகள் பெற்றுள்ள நிலையில், அதிமுகவின் வெற்றி வாய்ப்பு திசை மாறியதற்கு வேட்பாளர் தேர்வு முக்கிய காரணமாக இருந்ததாக அரசியல் ஆர்வலர்கள் 
கூறுகின்றனர்.