புதுச்சேரியில் முதல்வர் பதவி ஏற்பு விழா இடம் மாற்றம்

DIN 6th May 2021 02:24 PM

புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி முதல்வராக பதவியேற்க உள்ளார்.

அதற்கான பந்தல் அமைக்கும் பணி, புதுச்சேரி கடற்கரை சாலையில் காந்தி திடலில் வியாழக்கிழமை தொடங்கி நடைபெற்றது. 

இதனிடையே கரோனா பரவலை கருத்தில்கொண்டு, கடற்கரை திடல் இடத்தை மாற்றி, ஆளுநர் மாளிகையில் விழா நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 30 இடங்களில் 16 இடங்களை கைப்பற்றி என்.ஆர்.காங்கிரஸ் பாஜக கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து, இரண்டு நாள்களுக்கு முன்பு என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி மற்றும் வெற்றி பெற்ற பா.ஜ.க. எம்எல்ஏக்கள் துணை நிலை ஆளுநரை சந்தித்து, என்.ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியை தேசிய ஜனநாயக கூட்டணி சட்டமன்ற கட்சி தலைவராக  ஏற்று ஆட்சி அமைக்க உரிமை கோரி கூட்டாக கடிதம் அளித்தனர்.

 

ஆட்சி அமைக்கும் தேதியை பின்னர் அறிவிப்பதாக கூறியிருந்தனர். இந்நிலையில் புதன்கிழமை மாலை ஆளுநரை சந்தித்த என்.ஆர் காங்கிரஸ் நிர்வாகிகள் வெள்ளிகிழமை (07.05.2021)  பிற்பகல் 1 மணியளவில், ரங்கசாமி முதலமைச்சராக பதவி ஏற்க விரும்புவதாக கடிதம் அளித்தனர்.

 இதனையடுத்து புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி சிலை எதிரே உள்ள காந்தி  திடலில்,  பதவியேற்பதற்கான ஏற்பாடுகள் அரசு சார்பில் தீவிரமாக நடைபெற்று வந்தது. திடீரென பந்தல் அமைக்கும் பணிகள் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் கரோனா பரவல் காரணமாக அந்த இடத்தை மாற்றி துணைநிலை ஆளுநர் மாளிகையில் எளிய முறையில் பதவியேற்பு விழாவை நடத்த திட்டமிட்டு, அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.