இதனால் தான் மற்ற நடிகர்களிடம் இருந்து மாறுபடுகிறார் கமல் !

DIN 7th November 2021 09:06 AM

மாற்றத்தை மேற்கொண்டு வெளிச்சத்தை பாய்ச்சி கல்வியை போதித்து, மக்களை உத்வேகபடுத்தி அடுத்த கட்டத்திற்கு உந்தி செலுத்தும் சக்தி கலைக்கு உள்ளது என்கிறார் அமெரிக்க நடிகர் ஹார்வி ஃபியர்ஸ்டீன். இப்படிப்பட்ட, கலைவடிவத்தை தன் வாழ்நாள் முழுவதுமே சோதனை செய்தவர் கமல்ஹாசன்.

காலம் கடந்து யோசிப்பவர்களால் மட்டும்தான் அடுத்த தலைமுறைக்கான விதையை போட முடியும். அப்படி, யோசித்தவர்களால் மட்டும்தான் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். அந்த வகையில், தன் திரைப்படங்கள் வாயிலாக சமூகத்துடன் தொடர்ந்து உரையாடிய கமல், சமூகம் பேச மறுத்த பலவற்றை கலை மூலம் மக்களுக்கு எடுத்து சென்றிருக்கிறார்.

கலையை மாற்றத்திற்கான திறவுகோலை பயன்படுத்திய கமல்

கமலின் கொள்கை, கருத்து சரியா அல்லது தவறா என்பது இரண்டாம் பட்சம்தான். ஆனால், தமிழ்சினிமாவில் கலைவடிவை மாற்றத்திற்கான திறவுகோலை பயன்படுத்திய ஒரு சிலரில் கமலும் ஒருவர்.

பொதுவுடமை கருத்துகளாக இருந்தாலும் சரி, அகிம்சை கருத்துகளாக இருந்தாலும் சரி, மரண தண்டனைக்கு எதிரான குரலாக இருந்தாலும் சரி. பழைமைவாதத்தை கேள்விக்கு உட்படுத்துவதை தனது திரைப்படங்கள் மூலம் தொடர்ந்து பதிவுசெய்து வந்தவர் கமல். பிற்போக்குத்தனமும் மூடநம்பிக்கையும் மண்டிக்கிடந்த தமிழ் சினிமாவில் புதிய பாய்ச்சலை பாய்ச்சியவர்கள் திராவிட இயக்கத்தினர்.

தமிழ் சமூகத்தில் திராவிட இயக்கம் ஏற்படுத்திய தாக்கம் அளப்பரியது. வெகுஜன மக்களின் வாழ்வியலை திரை முன் காட்டிய அவர்கள், பெண்கள் உரிமை, சாதிய எதிர்ப்பு, சமத்துவம் போன்றவற்றை மக்கள் மத்தியில் எடுத்து சென்றனர். ஆனால், 1970களுக்கு பிறகு, தமிழ் சினிமாவில் திராவிட கொள்கையாளர்களின் வருகை குறையவே, சாதியத்திற்கு ஆதரவாகவும் பிற்போக்குத்தனமான கருத்துகளை பேசும் திரைப்படங்கள் வருவது அதிகரித்தது.

திரைப்படங்களில் பேசப்பட்ட உளவியல் பிரச்னைகள்

இந்த காலக்கட்டத்தில்தான், மற்றவர்கள் பேச மறுத்த அல்லது பேச தயங்கிய கருத்துகளை, கதாபாத்திரங்களை திரையில் பேசி நடித்தவர் கமல். தமிழ் சினிமாவின் பாதையை மாற்றியமைத்த முக்கிய படங்களில் ஒன்று பதினாறு வயதினிலே. கிராமத்து பின்னணியில் உருவான இத்திரைப்படத்தில், மாற்றுத்திறனாளியாக நடித்திருப்பார் கமல். முன்பெல்லாம், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்பவர்தான் படத்தின் ஹீரோவாக இருப்பார்.

ஆனால், அதை மாற்றி, ஒரு மாற்றுத்திறனாளியை உச்சபட்ச நடிகராக காட்டி தமிழ் சினிமாவின் போக்கை மாற்றியதில் கமலுக்கும் படத்தின் இயக்குநர் பாரதிராஜாவுக்கும் பெரும் பங்கு உண்டு. காலம்காலமாக, கேட்டதை மட்டுமே செய்யும் வில்லனை அடித்து நொறுக்கும் அநாதரட்சகனாக ஹீரோ காட்டப்படும் போக்கை மாற்றி, சமூகத்தில் உள்ள உளவியல் பிரச்னைகளை பேசிய படம் சிகப்பு ரோஜாக்கள்.

படத்தில் வரும் கமல், தனது குழந்தை பருவத்தில் எதிர்கொண்ட சில அனுபவங்களின் காரணமாக மன நல பாதிக்கப்பட்டவராகியிருப்பார். சமூகத்தில் நிலவும் உளவியல் பிரச்னைகளை வெளிச்சம் போட்டு காட்டியது சிகப்பு ரோஜாக்கள். சமூகம் பேசாத மாற்றுத்திறனாளிகளையும் மனநல பாதிக்கப்பட்டவர்களையும் படத்தில் ஹீரோக்களாக காட்டுவதை கமல் தொடர்ந்து செய்துவந்தார்.

ஹீரோவாக மாறிய பாதிக்கப்பட்டவர்கள்

அபூர்வ சகோதரர்களில், யார் உதவியும் இல்லாமல் வில்லன்களை தனி ஒரு மனிதராக எதிர்த்து நிற்கும் மாற்றுத்திறனாளியான அப்பு, மனநல வளர்ச்சி இல்லாதவரின் காதலை திரையில் கடத்தியிருக்கும் குணா, ஃபோபியாவால் பாதிக்கப்பட்டிருக்கும் தெனாலி ஆகியவை மாற்றித்திறளானிகளையும் சமூகத்தின் ஒரு அங்கம் என காட்டும் முயற்சியே.

பெண்கள், ஆண்களை மட்டுமே நம்பியிருக்க வேண்டும் என்ற நடைமுறையை உடைத்து, அவர்களை முன்னணி கதாபாத்திரங்களாக்கிய மகளிர் மட்டும் மற்றொரு முக்கியமான திரைப்படம். தனது உயர் பதவியை பயன்படுத்தி பெண்களை பாலியல் வல்லுறவுக்கு ஈடுபடுத்தும் நபரை மூன்று பெண்கள் சேர்ந்து அதில் ஆட்டம் காண்பிக்க வைப்பர்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஆசிரியராக வந்து மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் 'நம்மவர்' இப்படி சொல்லி கொண்டே செல்லலாம். பாதிக்கப்பட்டவர்களை ஹீரோக்களாக காட்டி அதை வெகுஜன மக்களிடையே பொதுமைப்படுத்தும் என்பது மற்ற கலைஞர்கள் செய்ய தவறிய ஒன்று.

காதல் என்னும் நாற்காலி

காதல்தான், எல்லாம் அதை தாண்டி ஒன்றுமே இல்லை. அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அதை ரொமான்டிசைஸ் செய்யும் போக்கை தமிழ்சினிமா தொடர்ந்து செய்துவந்தது. அந்த நாற்காலியை சுக்கு நூறாக உடைத்த பாடல் வசூல்ராஜா எம்பிபிஎஸில் வரும் ஆழ்வார்பேட்டை ஆண்டவா. இதில், என்ன இருக்கிறது என்ன கேட்கலாம்.

ஒரு மனிதருக்கு காதல் வருவது என்பது மிக இயல்பான ஒன்று. எத்தனை முறை வந்தாலும் அது காதல்தான் என்பதை இயல்பாக காட்டியிருக்கும் ஆழ்வார்பேட்டை ஆளுடா பாடல். "ஒரு முறைதான் பூ பூக்கும் அதை மீண்டும் ஒட்ட வைக்க முடியாது" போன்ற அபத்தமான கருத்துகளை காதலுடன் ஒப்பிட்ட பேசிய திரைப்படங்களுக்கு மத்தியில், "ஒரே காதல் ஊரில் இல்லையடா காதல் போயின் சாதலா இன்னொரு காதல் இல்லையா தாவணி
போனால் சல்வார் உள்ளதடா" என பாடலை பாடினார் கமல்.

மதவாதத்தை எதிர்த்த ஹே ராம்

இந்தியா பெரும் சவால்களை சந்தித்த காலம் 90கள். அப்போது, மதவாதம், பொருளாதார நெருக்கடி, சாதியம் போன்றவற்றால் நாடு நிலைகுலைந்திருந்தது. அந்த சமயத்தில், நாட்டின் பிரிவினை தொடங்கி 90 வரையிலான காலகட்டத்தை திரையில் காண்பித்த படம் ஹே ராம். காந்தியை கொன்றவர் ஒருவர் அல்ல அது ஒரு கொள்கை என்பதை நுணுக்கமாக காட்டியிருப்பார் கமல்.

காந்தியை கொல்ல முயற்சிப்பவர்கள் அனைவரும் ஒரு கொள்கை பின்னணியில் இருந்து வருவதையும், அப்படி ஒரு நபர் அகிம்சையால் ஈர்க்கப்பட்டு திருந்துவதை போன்றும் ஹே ராம் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். படத்தின் இறுதியில், காந்தியை கொல்ல முயற்சிக்கும் இந்து மதத்தை
சேர்ந்த கமலை, இஸ்லாமியராக நடித்திருக்கும் ஷாருக் கான் தடுத்து நிறுத்துவார்.

பின்னர், இந்து மத வெறியர்கள் ஒன்று சேர்ந்து, ஷாருக் கானை கொன்றுவிடுவது போல காட்சி அமைக்கப்பட்டிருக்கும். நாட்டின் பிரிவினை தொடங்கி தற்போதுவரை, மத பிரச்னை எவ்வாறு நாட்டை சீரழிக்கிறது என்பதை எடுத்துரைத்திருக்கும் படம் 'ஹே ராம்'.

கம்யூனிசம் போதித்த நல்லசிவம்

பொதுவுடைமை கருத்துகளை பேசுவது கமலுக்கு ஒன்றும் புதிதல்ல. வறுமையின் நிறம் சிவப்பில் தொடங்கிய அந்த போக்கு 'அன்பே
சிவம்' வரை நீடித்தது. 'வறுமையின் நிறம் சிவப்பு' படத்தில், "கம்யூனிஸ்ட்னா ஏன் சார் உங்களுக்கு அஸ்தில ஜோரம் வருது" என நேர்காணல் எடுப்பவர்களை நோக்கி கமல் கேள்வி எழுப்பியிருப்பார்.

ஒரு இடதுசாரியின் வாழ்க்கையை கதை களமாக கொண்ட திரைப்படம் அன்பே சிவம். அதில் ஒரு காட்சியில், எம்என்சியில் பணிபுரியும் மாதவன், "சோவியத் யூனியன் உடைஞ்சதால கம்யூனிசமே தோற்றுவிட்டது" என பேசுவார். அதற்கு கமல், "தாஜ்மஹால் இடிஞ்சிருச்சினா காதல் பன்றத நிறுத்துவிங்களா. கம்யூனிசம் இஸ் எ பீலிங்" என கமல் பதில் அளிப்பார்.

பொதுவுடைமை கருத்துகளை போகின்ற போக்கில் பேசிய அன்பே சிவத்தில், தொழிலாளர்களின் உரிமைகளை வாங்கி கொடுக்க இறுதி வரை போராடும் நல்ல சிவமாய் வந்திருப்பார் கமல். உலகமயமாக்கல், தனியார்மயம் ஆகியவற்றை குறித்த கடுமையான விமர்சனங்கள் அன்பே சிவம் படத்தில் இடம்பெற்றிருக்கும்.

தூக்கு தண்டனைக்கு எதிரான கோஷம் எழுப்பிய விருமாண்டி

காலம் காலமாக, காவல்துறையை ஹீரோவாக போற்றப்படுவதும், சட்டத்தை மீறும் அவர்களின் செயல்களை கொண்டாடுவதுமே தமிழ் சினிமாவின் போக்காக இருந்து வருகிறது. குற்றங்கள் செய்பவர்களை நடுரோட்டில் நிற்க வைத்து சுட வேண்டும் போன்ற வசனங்கள் பல படத்தில் இடம்பெற்றிருக்கும்.

இப்படி, கும்பல் வன்முறையை பொதுமைப்படுத்தும் திரைப்படங்களுக்கு மத்தியில், பொதுபுத்தியிலிருந்து விலகி தூக்கு தண்டனைக்கு எதிராக குரல் எழுப்பிய படம் 'விருமாண்டி'.

தண்டனை என்பது குற்றம் செய்தவர்களின் தவறுகளை உணர வைப்பதற்காக கொடுப்பது. அவர்களின் உளவியல் பிரச்னைகளை புரிந்து கொண்டு, மீண்டும் அந்த தவறை செய்யாதவாறு அவர்களை மாற்றுவதே சட்டத்தின் கடமை.

ஆனால், அதற்கு நேர்மாறாக சிறைச்சாலைகளில் நடைபெறுவதை காட்சிப்படுத்தியது விருமாண்டி. திரைப்படம் முழுவதும் வன்முறைகள் நிறைந்திருந்தாலும் இறுதியில் திருந்தி வாழ நினைக்கும் சாமானியன், தான் செய்த குற்றங்களுக்காக மன்னிப்பு கோருவதுடன் திரைப்படம் முடியும்.

முன்கூட்டியே கணித்த கமல்

காலம் கடந்து யோசிப்பவர் கமல் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டை சொல்லியாக வேண்டும்.

'விஸ்வரூபம்' படத்தில், பயங்கரவாத பயிற்சி பெறும் இளைஞர் ஒருவர் ஊஞ்சலில் ஏறி குழந்தையை போல ஆடுவது போன்று காட்சி அமைந்திருக்கும். பிறக்கும்போதே யாரும் பயங்கரவாதியாக பிறப்பதில்லை, அவர்களுக்கு போதிக்கப்படுவதும் அவர்களின் சூழலுமே அவர்களை அப்படி மாற்றுகிறது. அவர்களுக்குள்ளே குழந்தை போன்ற மனம் இருக்கிறது என்பது போல காட்டப்பட்டிருக்கும்.

சமீபத்தில், ஆப்கானிஸ்தானை தலிபான்களை கைப்பற்றிதை தொடர்ந்து, பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு சென்ற தலிபான்கள் ஊஞ்சலில் ஆடுவது போன்ற விடியோ வெளியானது. இப்படி, காலம் கடந்து நடந்தவையை தனது திரைப்படத்தில் முன்கூட்டியே காட்டியவர் கமல்.