சுகோய் போர் விமானம் மூலம் பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி

DIN 9th December 2021 04:35 AM

 

பாலேசுவரம்: ஒடிஸா மாநிலம் சண்டிபூர் பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையை சுகோய் 30 எம்கே-1 போர் விமானம் மூலம் செலுத்தி புதன்கிழமை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. 

பிரமோஸ் திட்டத்தில் இது ஒரு மிகப்பெரிய மைல்கல் என்று கூறியுள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) அதிகாரிகள், புதன்கிழமை காலை 10.30 மணிக்கு சுகோய் 30 எம்கே-1 போர் விமானத்தின் வாயிலாக இந்த ஏவுகணை விண்ணில் செலுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளனர். 

மேலும் எதிர்காலத்தில் பிரமோஸ் ஏவுகணைகளை விண்ணில் செலுத்துவதற்கு இந்த சோதனை வழிவகுக்கும் எனவும் அவர்கள் கூறினர். இந்த ஏவுகணை சோதனையில் ஈடுபட்ட அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்த டிஆர்டிஓ தலைவரும், பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டுத் துறை செயலாளருமான சதீஷ் ரெட்டி, கல்வி நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்கள், இந்திய விமானப் படை ஆகியன இந்தப் பணியில் ஈடுபட்டதாக குறிப்பிட்டுள்ளார். 

ராஜ்நாத் சிங் பாராட்டு: இதனிடையே, பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றிக்கு டிஆர்டிஓ, விமானப் படை அதிகாரிகளுக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்தார்.  சூப்பர்சோனிக் ஏவுகணைகள் தயாரிப்பு, சந்தைப்படுத்துதல், மேம்பாடு ஆகியவற்றுக்காக இந்தியாவும் ரஷ்யாவும் பிரமோஸ் திட்டத்தை கூட்டாக முன்னெடுத்து வருகின்றன. 

இந்தியக் கடற்படையின் தாக்குதல் திறனை அதிகரிக்கும் பொருட்டு நிலத்தில் இருந்து வானில் குறைந்த தொலைவில் உள்ள இலக்கைத் துல்லியமாக தாக்கி அழிக்கும் விஎல்-எஸ்ஆர்எஸ்ஏஎம் ஏவுகணையை டிஆர்டிஓ செவ்வாய்க்கிழமை வெற்றிகரமாக பரிசோதித்தது குறிப்பிடத்தக்கது.