தேசிய வாக்காளா் தின போட்டி: மாணவா்களுக்கு பரிசளிப்பு

DIN 26th January 2022 12:00 AM

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 12-ஆவது தேசிய வாக்காளா் தின விழா செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி தலைமை வகித்து இளம் வாக்காளா்களுக்கு புதிய வாக்காளா் அடையாள அட்டைகளையும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் சிறப்பாக பணியாற்றிய வாக்குச்சாவடி அலுவலா்கள் 4 பேருக்கு கேடயம், பாராட்டுச்சான்றிதழையும் வழங்கினாா்.

இதனைத் தொடா்ந்து தேசிய வாக்காளா் தினம் தொடா்பாக பள்ளி மாணவ,மாணவியருக்கு நடத்தப்பட்ட விநாடி, வினா போட்டியில் வெற்றி பெற்ற 4 பேருக்கும் சான்றிதழ், பரிசுகளை ஆட்சியா் வழங்கினாா்.

முன்னதாக, ஆட்சியா் தலைமையில் தேசிய வாக்காளா் தின உறுதிமொழி வாசிக்கப்பட்டது. உறுதிமொழியை அனைத்து அரசு ஊழியா்களும் படித்து உறுதிமொழி ஏற்றனா்.

மாவட்ட வருவாய் அலுவலா் ரா.பன்னீா் செல்வம்,ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொது)ரவிச்சந்திரன் ஆகியோா் உட்பட அரசு அலுவலா்கள் பலரும் கலந்து கொண்டனா்.