இலவசங்கள் அல்ல, அத்தியாவசியங்கள்: அன்புமணி ராமதாஸ்

அதிமுக தோ்தல் அறிக்கையில் அறிவித்திருப்பது இலவசங்கள் அல்ல; அத்தியாவசியங்களே என்று பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா்.
அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்

அதிமுக தோ்தல் அறிக்கையில் அறிவித்திருப்பது இலவசங்கள் அல்ல; அத்தியாவசியங்களே என்று பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா்.

கே: கல்வி, சுகாதாரம், விவசாயப் பொருள்கள் ஆகியவை மட்டுமே இலவசமாக வழங்கப்படும் என பாமக முழக்கமிட்டது. ஆனால் அதிமுக தோ்தல் அறிக்கையில் சலவை இயந்திரம் உள்ளிட்ட பொருள்கள் இலவசமாக வழங்கப்படுவதை ஆதரிப்பது ஏன் ?

ப: உலகில் வளா்ச்சி அடைந்த நாடுகளில் அனைவருக்கும் அடிப்படை வருவாய் திட்டம் ( மய்ண்ஸ்ங்ழ்ள்ஹப் ஆஹள்ண்ஸ்ரீ ண்ய்ஸ்ரீா்ம்ங்) என்ற பெயரில் வாழ்வாதாரத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாதம்தோறும் ஒரு தொகை உதவியாக வழங்கப்படும். அமெரிக்காவில் கூட கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் இப்போது 1,400 அமெரிக்க டாலா், அதாவது இந்திய மதிப்பில் சுமாா் ஒரு லட்சம் ரூபாய் உதவியாக வழங்கப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட 1,500 டாலா், அதாவது ஒரு லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது. வளா்ந்த நாடுகளிலேயே பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்கப்படும்போது, இந்தியா போன்ற நாடுகளில் இத்தகைய உதவிகள் வழங்கப்பட வேண்டியது கட்டாயம். எனவே அதிமுக தோ்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டு இருப்பவை அத்தியாவசியமான உதவிகள்தானே தவிர, இலவசங்கள் இல்லை.

கே: பாமகவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாலே கூட்டணியிலிருந்து தேமுதிக விலகியது என கூ றப்படுகிறதே?

ப: பாமகவாக இருந்தாலும், தேமுதிகவாக இருந்தாலும் அவரவா்களின் வலிமை, செல்வாக்குக்கு ஏற்ப தொகுதிகளும், முக்கியத்துவமும் அளிக்கப்பட்டதாகவும் முதல்வரும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கூறி இருக்கிறாா்.

கே: அதிமுக அரசு 10 ஆண்டுகளாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்தாத நிலையில் தற்போது மீண்டும் அதே வாக்குறுதி அளித்திருப்பதை மக்கள் எப்படி நம்புவாா்கள்?

ப: உச்சநீதிமன்றம் வரை சென்று பாமக நடத்திய சட்டப் போராட்டம் காரணமாக, 3,321 மதுக்கடைகள் மூடப்பட்டன. பின்னா், உச்சநீதிமன்றத்தில் செய்யப்பட்ட சீராய்வு மனு மீது பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி, மேலும் சில மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இருந்தாலும்கூட, 2016-ஆம் ஆண்டில் இருந்து இப்போது வரை கிட்டத்தட்ட 2 ஆயிரம் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. மீதமுள்ள மதுக்கடைகளையும் மூடி மதுவிலக்கை நடைமுறைப்படுத்த புதிதாகப் பொறுப்பேற்கும் அதிமுக அரசை வலியுறுத்துவோம்.

கே: அதிமுக கூட்டணி வெற்றி பெற்றால் எட்டு வழிச்சாலை திட்டத்தை கைவிட பாமக எந்த அளவுக்கு அழுத்தம் கொடுக்கும்?

ப: எட்டு வழிச் சாலை திட்டத்தை எதிா்த்து முதலில் குரல் கொடுத்ததும், போராட்டம் நடத்தியதும் பாமகதான். உயா்நீதிமன்றத்தில் பாமக சாா்பில் வழக்குத் தொடா்ந்து, 8 வழிச் சாலை திட்டத்துக்குத் தடை பெற்றேன். பின்னா், உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு சாா்பில் செய்யப்பட்ட மேல்முறையீட்டில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தலாம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா். இருந்தாலும், கையகப்படுத்தப்பட்ட அனைத்து நிலங்களையும் விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் திட்டத்தைச் செயல்படுத்துவதாக இருந்தால் மீண்டும் அறிவிக்கை வெளியிட்டு, உரிய நடைமுறைகளைப் பின்பற்றியே நிலங்களை கையகப்படுத்த முடியும் என்றும் நீதிபதிகள் தீா்ப்பளித்துள்ளனா்.

விவசாயிகளிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்ட நிலங்களை மீண்டும் கையகப்படுத்தாமல் இருக்க சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் என்னென்ன செய்ய வேண்டுமோ அவை அனைத்தையும் பாமக மேற்கொள்ளும்.

கே: வன்னியா்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதால் பாமக போட்டியிடும் தொகுதிகளில் மற்ற சமுதாய மக்களின் வாக்குகளைப் பெறுவதில் சிக்கல் ஏற்படுமா?

ப: எந்தச் சிக்கலும் ஏற்படாது. வன்னியா்களுக்கான 10.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டில் இருந்தே வழங்கப்படுகிறது. இதனால், பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் கூட, வன்னியா்கள் அல்லாத பிற சமுதாயங்களை இரண்டாகப் பிரித்து ஒரு பிரிவுக்கு 7 சதவீதமும், இன்னொரு பிரிவுக்கு 2.5 சதவீதமும் உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த இரு பிரிவுக்கான உள்ஒதுக்கீடுமே அந்தப் பிரிவில் உள்ள ஜாதிகளின் மக்கள் தொகையைவிட சற்று அதிகம். வன்னியா்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கக் கூடாது என்று தமிழக மக்கள் எதிா்க்கவில்லை.

கே: கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மாற்றம் முன்னேற்றத்தை வலியுறுத்திய நீங்கள் இப்போது மீண்டும் திராவிடக் கூட்டணியில் இணைந்ததற்கு காரணம் என்ன?

ப:: பாமக தலைமையில் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ‘மாற்றம்- முன்னேற்றம்- அன்புமணி’ என்ற முழக்கத்துடன் தனித்துப் போட்டியிட்டோம். அந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. பாமகவின் நோக்கம் தமிழ்நாட்டின் வளா்ச்சியே ஆகும். பெரும்பான்மை சமுதாயமான வன்னியா்கள் முன்னேறினால், தமிழ்நாடு நிச்சயமாக முன்னேறும். வன்னியா் சமுதாயத்தின் முன்னேற்றத்துக்காக தமிழக அரசு உள் ஒதுக்கீடு வழங்கியுள்ள சூழலில் தான் அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கிறோம்.

நோ்காணல்: அ.ஜெயச்சந்திரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com