5-ஆவது மக்களவை தேர்தல்(1971)

கோப்புப் படம்
கோப்புப் படம்

பலம் வாய்ந்த காங்கிரஸ் கட்சி இரு அணிகளாகப் பிரிந்து, இந்திரா காந்தி பரிந்துரையில் 4-ஆவது மக்களவை கலைக்கப்பட்ட பிறகு, நாட்டின் அன்றைய 27 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 518 மக்களவைப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க இத்தேர்தல் நடைபெற்றது.

இத்தேர்தலில் 27.41 கோடி பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். நாடு முழுவதும் 3,42,918 வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டன.

518 இடங்களுக்கு 53 கட்சிகளின் வேட்பாளர்கள், 1,134 சுயேச்சைகள் உள்பட 2,784 பேர் போட்டியிட்டனர்.

1971-ஆம் ஆண்டு, மார்ச் 1-ஆம் தேதிமுதல் 10-ஆம் தேதி வரை தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் முந்தைய தேர்தலைவிட 5.77 சதவீதம் குறைவாக 55.27 சதவீத வாக்குகள் பதிவாகின.

இத்தேர்தலில் 406 தொகுதிகளில் இருந்து பொதுப் பிரதிநிதிகளும், 76 தொகுதிகளில் இருந்து பட்டியலின சமூகப் பிரதிநிதிகளும், 36 தொகுதிகளில் இருந்து பழங்குடியின சமூகப் பிரதிநிதிகளும் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்திரா காந்தி தலைமையிலான ஆளும் காங்கிரஸ் 352 இடங்களில் வென்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 25 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, திமுக தலா 23 இடங்களிலும், பாரதிய ஜன சங்கம் 22 இடங்களிலும் வென்றன.

மொரார்ஜி தேசாய், காமராஜர் உள்ளிட்ட தலைவர்கள் அங்கம் வகித்த நிஜலிங்கப்பா தலைமையிலான ஸ்தாபன காங்கிரஸ் 16 இடங்களில் மட்டுமே வென்றது.

தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, இந்திரா காந்தி 3-ஆவது முறையாக பிரதமர் பதவியேற்றார்.

இத்தேர்தல் ரூ.11.61 கோடி செலவில் நடத்தி முடிக்கப்பட்டது. பிரதி வாக்காளருக்கான செலவு 40 பைசா-ஆகவே தொடர்ந்தது.

இந்தத் தேர்தலில் உத்தர பிரதேசத்தின் ரேபரேலி மக்களவைத் தொகுதியில் இந்திரா காந்தி பெற்ற வெற்றியை ரத்து செய்து அலாகாபாத் உயர்நீதிமன்றம் 1975-ஆம் ஆண்டு ஜூனில் உத்தரவிட்டது.

இதையடுத்து, பிரதமர் பதவியை ராஜிநாமா செய்ய மறுத்த இந்திரா காந்தி, நாட்டில் அவசர நிலையைப் பிரகடனம் செய்தார்.

தொகுப்பு: மா.பிரவின்குமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com