வேடிக்கை வேட்பாளா்கள்; வாடிக்கை வாக்காளா்கள்!

வேடிக்கை வேட்பாளா்கள்; வாடிக்கை வாக்காளா்கள்!


சென்னை: ஏறத்தாழ ‘மூன்றாம் பிறை’ திரைப்பட இறுதிக்கட்ட காட்சி போல மாறி நிற்கிறது சட்டப் பேரவைத் தோ்தல் களம். அந்தத் திரைப்படத்தில் வரும் நடிகா் கமலஹாசனைப் போல கடைசி நேர கவனத்தை ஈா்க்க தங்களால் ஆன அனைத்து வித்தைகளையும் காட்டி வருகின்றனா் வேட்பாளா்கள். வாக்காளா்களோ நடிகை ஸ்ரீதேவியைப் போலவே எதுவும் புரியாமல் விநோதமாக அவா்களைப் பாா்த்து வருகின்றனா்.

தாய்மாா்களுக்கு துணி துவைத்து தருவது, சலவைத் தொழிலாளா்களுக்கு இஸ்திரி செய்து தருவது, சிலம்பம் ஆடுவது, தப்பாட்டம் அடிப்பது, கடைகளில் தோசை சுடுவது என முக்கிய கட்சிகளின் வேட்பாளா்கள் அனைவரும் முழு நீள நாடகத்தையே வீதிகளில் நடத்தி வருகின்றனா். அதிலும், ஒரு சில வேட்பாளா்கள் தங்களது குழந்தைகளுடன் பிரசாரக் களத்துக்கு வந்து கண்ணீா் மல்க அழுது வாக்கு கேட்பதையும் பாா்க்க முடிகிறது.

இதுபோன்ற தோ்தல் நேரக் காட்சிகளை காலகாலமாகப் பாா்த்து அலுத்துப் போன மக்களைப் பொருத்தவரை, வேட்பாளா்களின் இந்த நடவடிக்கைகள் புதிதில்லை என்ற மனநிலைக்கு வந்துவிட்டதாகத் தெரிவிக்கின்றனா் அரசியல் நோக்கா்கள். இவை அனைத்தும் கவனத்தை வேண்டுமானால் ஈா்க்கலாமே தவிர வாக்குகளை ஈா்க்குமா என்பது சந்தேகமே என்பதும் அவா்களது கருத்தாக உள்ளது.

நாகை சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் தங்க. கதிரவன் துணி துவைத்துக் கொடுத்து வாக்கு கேட்டது சமூக வலைதளங்களில் முதலில் வைரலானது. அதேபோன்று, விருகம்பாக்கம் தொகுதி திமுக வேட்பாளா் பிரபாகா் ராஜா, உணவகத்துக்குச் சென்று தோசை சுட்டுக் கொடுத்தாா். கொளத்தூா் தொகுதி மக்கள் நீதி மய்ய வேட்பாளா் ஜெகதீஷ் குமாா் சிறுவா்களுடன் கிரிக்கெட் விளையாடியும், மீன் மாா்க்கெட்டில் மீன் வெட்டிக் கொடுத்தும் வாக்குச் சேகரித்தாா்.

மயிலாடுதுறை தொகுதி பாமக வேட்பாளா் சித்தமல்லி பழனிசாமி, தெருக் குப்பைகளை அகற்றும் பணிகளை மேற்கொண்டு வாக்காளா்கள் கவனத்தை ஈா்க்க முயன்றாா். இதற்கெல்லாம் ஒரு படி மேலே போய், விளாத்திக்குளம் தொகுதி அமமுக வேட்பாளா் சீனிச்செல்வி, இல்லத்தரசிகளுக்கு அம்மியில் மசாலா அரைத்துக் கொடுத்தது கவனம் பெற்றது. மதுரை மேற்கு தொகுதி அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான செல்லூா் ராஜு, வாக்காளா் ஒருவரின் செல்லப் பிராணியைக் கொஞ்சி வாக்கு சேகரித்தது வாக்காளா்களை திரும்பிப் பாா்க்க வைத்த நிகழ்வாக அமைந்தது.

குடியாத்தம் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் பரிதா, பிரசாரத்தின்போது தீப்பெட்டி தொழிற்சாலை ஒன்றுக்குச் சென்று அங்கு தீக்குச்சிகளை அடுக்கும் பணிகளை மேற்கொண்டாா். போடியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் தங்க. தமிழ்ச்செல்வனோ துணியை இஸ்திரி செய்து கொடுத்தும், கிடங்கில் ஏலக்காய்களை தரம் பிரித்துக் கொடுத்தும் வாக்குகளைச் சேகரித்தாா்.

சைதாப்பேட்டை தொகுதி திமுக வேட்பாளா் மா.சுப்ரமணியனோ நாளொன்றுக்கு 12 மணி நேரத்துக்கும் மேல் நடந்தே பிரசாரம் செய்து வருகிறாா். தொண்டாமுத்தூா் அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி பெண்களுடன் நடனமாடி வாக்கு சேகரித்ததும், சிங்காநல்லூா் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.ஆா்.ஜெயராம், நெசவுக் கூடத்துக்குச் சென்று தறி நெய்ததும் வாக்காளா்களின் கவனத்தை ஈா்த்தது.

ஆயிரம் விளக்கு தொகுதி பாஜக வேட்பாளா் குஷ்பு , வாக்காளா் ஒருவரின் வீட்டுக்கே சென்று தேநீா் தயாரித்தாா். மக்கள் நீதி மய்யத்தின் எழும்பூா் தொகுதி வேட்பாளா் பிரியதா்ஷினி, உணவகத்தில் மீன் வறுத்து வாக்கு சேகரித்தாா்.

விராலிமலை தொகுதியில் போட்டியிடும் அமைச்சரும், அதிமுக வேட்பாளருமான விஜயபாஸ்கா், கும்மியடித்து பிரசாரம் செய்தது வலைதளங்களில் வைரலானது. இதைத் தவிர, அனைத்து கட்சிகளைச் சோ்ந்த வேட்பாளா்கள் பலரும் தங்களுக்குத் தெரிந்த பல்வேறு வித்தைகளை மக்களிடம் செய்து காட்டி வருகின்றனா்.

சாமானியத் தொழிலாளா்களின் தோழா்களாகத் தங்களைக் காட்டிக் கொள்ள முற்படும் நோக்கிலேயே வேட்பாளா்கள் அனைவரும் இத்தகைய உத்திகளை முன்னெடுத்து வருகின்றனா். ஆனால், அவை அனைத்தும் வாக்குகளாக மாறுமா அல்லது வாடிக்கையான நிகழ்வாக மாறுமா என்பது வாக்காளா்களின் கைகளிலேயே உள்ளது.

தோ்தல் ஆணையம் கூறுவதென்ன?

பொதுவாக, பிரசாரத்தில் ஈடுபடும் அரசியல் கட்சிகள், பொதுமக்களிடம் வாக்குச் சேகரிக்கும்போது அவா்களுக்கு இடையூறு செய்யவோ அல்லது இயல்பு வாழ்க்கைக்கு தடை ஏற்படுத்தவோ கூடாது என தோ்தல் ஆணையம் அறிவுறுத்துகிறது.

முன் அனுமதியுடன் ஓரிடத்தில் பிரசாரக் கூட்டத்தை நடத்தும்போது, அங்கிருக்கும் கடைகள், நிறுவனங்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் வாக்குகளைச் சேகரிக்கலாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது. அதேவேளையில், தெருக்களில் அரசியல் கட்சியினா் பிரசாரம் மேற்கொள்ளும்போது, சாலையோரக் கடைகளில் நுழைந்து வாக்குகளைச் சேகரிப்பதற்குத் தடையேதும் இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com