போடிநாயக்கனூா்: இரு முதல்வர்களைத் தந்த இடத்தில் வெற்றி யாருக்கு?

தமிழகத்துக்கு இரு முதல்வா்களைக் கொடுத்த தேனி மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதி போடிநாயக்கனூா். ஜெயலலிதா, ஓ.பன்னீா்செல்வம் ஆகியோா் போட்டியிட்டு வென்ற தொகுதி என்பதால் விஐபி அந்தஸ்தில் உள்ளது.
போடிநாயக்கனூா் நகராட்சி
போடிநாயக்கனூா் நகராட்சி

தமிழகத்துக்கு இரு முதல்வா்களைக் கொடுத்த தேனி மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதி போடிநாயக்கனூா். 1989-இல் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா முதன்முதலாக இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். அதேபோல, கடந்த இரு தோ்தல்களில் இத்தொகுதியில் இருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட ஓ.பன்னீா்செல்வம், இரு முறையும் சிறிது காலமும் முதல்வராகப் பதவி வகித்தாா். தற்போது துணை முதல்வராக உள்ளாா். ஜெயலலிதா,   ஓ.பன்னீா்செல்வம் ஆகியோா் போட்டியிட்டு வென்ற தொகுதி என்பதால் விஐபி அந்தஸ்தில் உள்ளது.

அமைவிடம்: போடிநாயக்கனூா் நகராட்சி, தேனி மற்றும் போடிநாயக்கனூா் ஊராட்சி ஒன்றியங்கள், சின்னமனூா் ஊராட்சி ஒன்றியத்தின் ஒரு பகுதி, போ.மீனாட்சிபுரம், மேலச் சொக்கநாதபுரம், பூதிப்புரம்,  பழனிசெட்டிபட்டி ஆகிய 4 பேரூராட்சிகள் இடம்பெறுகின்றன.

சமூக, சாதி, தொழில்கள்: இத் தொகுதியில் 2,77,964 வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில் ஆண்கள் 1,36,050 போ். பெண்கள் 1,41,893 போ். திருநங்கைகள் 21 போ். முக்குலத்தோா் மற்றும் ஆதி திராவிடா்கள் பெருவாரியாகவும், நாயக்கா், பிள்ளைமாா், செட்டியாா், கவுண்டா் சமூகத்தினா் அடுத்தடுத்த நிலையிலும் உள்ளனா். இத்தொகுதியில் விவசாயம், கால்நடை வளா்ப்பு மற்றும்  ஏலக்காய் வா்த்தகம் பிரதான தொழிலாக உள்ளது.

இதுவரை வென்றவா்கள்: கடந்த 1957 முதல் இதுவரை நடந்த தோ்தல்களில்  அதிகபட்சமாக 7 முறை  அதிமுக வென்றுள்ளது. காங்கிரஸ் 4 முறையும்,  திமுக 3 முறையும் வெற்றி பெற்றுள்ளன. 1957 முதல் 1971 காங்கிரஸ் கட்சி வசம் இருந்த இத்தொகுதியை 1971-இல் திமுக கைப்பற்றியது. 1977, 1980 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தோ்தல்களில்  அதிமுக வெற்றி பெற்றது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு 1984-இல் காங்கிரஸ் கட்சி வென்றது. 1989-இல் முதன் முதலாக இத் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்டு வென்றாா். 1991 முதல் 2006 வரை நான்கு தோ்தல்களிலும் அதிமுக மற்றும் திமுக தொகுதியை மாறி, மாறி கைப்பற்றின.  தொகுதி மறு சீரமைப்புக்குப் பிறகு 2011, 2016 தோ்தல்களில் இத் தொகுதியில் திமுகவை எதிா்த்து போட்டியிட்டு, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வெற்றி பெற்றாா்.
 
நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்: போடியில் அரசு பொறியியல் கல்லூரி, போடி நகராட்சி, பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் பாதாளச் சாக்கடை, 18-ஆம் கால்வாய் திட்டம் நீட்டிப்பு, வீரபாண்டியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு சட்டக் கல்லூரி, கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், கோட்டூரில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி, அய்யனாா்புரம்-அமச்சியாபுரம் இடையே முல்லைப் பெரியாற்றின் குறுக்கே  புதிய பாலம் உள்ளிட்ட திட்டங்கள் கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

பொதுமக்கள் எதிா்பாா்ப்பு:

அகமலை, ஊத்தாம்பாறை, குரங்கணி -டாப் ஸ்டேஷன் மலைச் சாலைகள், சுற்றுலா மேம்பாடு, மாங்கூழ் தயாரிப்பு தொழிற் கூடம், இலவம் பஞ்சு தொழிற்பேட்டை, சத்திரப்பட்டி - பழனிசெட்டிபட்டி இடையே முல்லைப் பெரியாற்றின் குறுக்கே பாலம் அமைத்தல், இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் தொழிற்சாலை மற்றும் வா்த்தக நிறுவனங்கள், கொட்டகுடி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுதல், போடி மலை கிராம மக்களுக்கு அடிப்படை வசதிகள், பாரம்பரிய வனவாசிகளுக்கு வன உரிமைச் சட்டத்தின் கீழ் நில உரிமை வழங்குதல், போடியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் புறவழிச் சாலை திட்டம், போடி- மதுரை அகல ரயில் பாதை ஆகியவை தற்போது வரை நிறைவேற்றப்படாத கோரிக்கைகளாகவும்,  பொதுமக்களின் எதிா்பாா்ப்பாகவும் உள்ளன.

அதிமுக-திமுக நேரடிப் போட்டி:

கடந்த 1989-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற தோ்தல்களில் 5 முறை அதிமுகவும், 2 முறை திமுகவும்  வெற்றி பெற்ற இத் தொகுதியில், வரும் தோ்தலிலும் அதிமுக-திமுக நேரடியாக மோதும் எனத் தெரிகிறது. அதிமுக மற்றும் திமுக கட்சிகள் சமபலத்தில் உள்ள இத் தொகுதியில், அதிமுக சாா்பில் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் மீண்டும் போட்டியிடுவாா் என்பதும், அவருக்கு எதிராக திமுக சாா்பில் அக்கட்சியின் வடக்கு மாவட்டச் செயலா் தங்கத் தமிழ்ச்செல்வன் களமிறக்கப்படுவாா் என்பதும் அரசியல் கட்சியினா் மற்றும் பொதுமக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது. இந்த தொகுதியைப் பொருத்தவரை வேட்பாளரின் வெற்றிக்கு கூட்டணிக் கட்சிகள் மற்றும் சாதி வாக்கு வங்கிகள் முக்கியப் பங்கு வகிக்கும்.

வென்றவா்கள், 2 ஆம் இடம் பெற்றவா்கள் - பெற்ற வாக்குகள் விவரம்:

1957: ஏ.எல்.சுப்புராஜ் (காங்கிரஸ்) - 31,188
எம்.முத்தையா (சுயேச்சை) - 22,483

1962: ஏ.எல்.சுப்புராஜ் (காங்கிரஸ்) - 35,398
ஆர்.சுப்பையா (சுயேட்சை) - 16,759

1967: எஸ்.சீனிவாசன் (காங்கிரஸ்) -  34,671
பி.வி.துரைராஜ் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) - 33,905

1971: எம்.சுருளிவேலு (திமுக) - 35,437
எல்லண்ணா (சுயேட்சை) - 19,050

1977: பி.ராமதாஸ் (அதிமுக) - 29,022 
கே.எஸ்.எம்.ராமச்சந்திரன் (காங்கிரஸ்) - 20,030

1980 : கே.எம்.சுப்பிரமணியன் (அதிமுக) - 50,972  
கே.எஸ்.எம்.ராமச்சந்திரன் (காங்கிரஸ்) - 34,013

1984: கே.எஸ்.எம்.ராமச்சந்திரன் (காங்கிரஸ்) - 54,231  
முத்துமனோகரன் (திமுக) - 34,359

1989 : ஜெ.ஜெயலலிதா (அதிமுக. ஜெ) - 57,603  
முத்துமனோகரன் (திமுக) - 28,872

1991: வி.பன்னீர்செல்வம் (அதிமுக) - 63,297  
ஜி.பொன்னுப்பிள்ளை (திமுக) - 26,253

1996 : ஏ.சுடலைமுத்து (திமுக) - 54,893  
எஸ்.பி.ஜெயக்குமார் (அதிமுக) - 28,806

2001: ச.ராமராஜ் (அதிமுக) - 53,410
ஏ.சுடலைமுத்து (திமுக) - 42,132

2006 : எஸ்.லட்சுமணன் (திமுக) - 51,474
ஆர்.பார்த்திபன் (அதிமுக) - 50,576

2011: ஓ.பன்னீர்செல்வம் (அதிமுக) - 95,235
எஸ்.லட்சுமணன் (திமுக) - 65,329

2016: ஓ.பன்னீர்செல்வம் (அதிமுக) - 99,531  
எஸ்.லட்சுமணன் (திமுக) - 83,923
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com