கவுண்டம்பாளையம்: கைப்பற்றியே தீர வேண்டும் என்ற வேட்கையில் திமுக

அதிமுக 2 முறையும் வென்ற தொகுதி என்பதால் கூட்டணிக் கட்சிகளுக்கு கொடுக்க அதிமுக விரும்பாது. எனவே இந்த முறையும் அதிமுகவும், திமுகவும் நேரடியாக மோதக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யானைகள் வழித்தடமாக இருக்கும் கவுண்டம்பாளையம்
யானைகள் வழித்தடமாக இருக்கும் கவுண்டம்பாளையம்

கடந்த 2008 ஆம் ஆண்டில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டபோது தொண்டாமுத்தூர் தொகுதியிலிருந்து பிரிந்து புதிதாக உருவானது கவுண்டம்பாளையம் தொகுதி. இதுவரை 2 தேர்தல்களைக் கண்டுள்ளது இந்தத் தொகுதி. சுமார் 4.60 லட்சம் வாக்காளர்களைக் கொண்டு கோவை மாவட்டத்தின் மிகப்பெரிய தொகுதியாகவும், தமிழகத்தில் அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதிகளில் ஒன்றாகவும் இருப்பது கவுண்டம்பாளையம் சட்டப்பேரவைத் தொகுதி.

தொகுதியில் உள்ள பகுதிகள்

மக்கள் அடர்த்தி மிகுந்த மாநகரப் பகுதிகள், கிராமங்கள், ஆனைகட்டி, பாலமலை உள்ளிட்ட மலைப் பகுதிகளையும், சமவெளிகளையும் உள்ளடக்கிய தொகுதியாகும். இந்தத் தொகுதியில், கோவை வடக்கு தாலுகாவுக்குள்பட்ட கவுண்டம்பாளையம், துடியலூர், சரவணம்பட்டி, விளாங்குறிச்சி, இடையர்பாளையம் உள்ளிட்ட மாநகரப் பகுதிகள் உள்ளன.

இதைத் தவிர, பெரியநாயக்கன்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம், இடிகரை, கோவில்பாளையம் போன்ற பேரூராட்சிப் பகுதிகளும், பெரிநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்குள்பட்ட சின்ன தடாகம், பன்னிமடை, கணுவாய், குருடம்பாளையம், அசோகபுரம், நஞ்சுண்டாபுரம், நாயக்கன்பாளையம், சோமையம்பாளையம் ஊராட்சிகள், சர்க்கார் சாமக்குளம் ஒன்றியத்துக்குள்பட்ட கோவில்பாளையம், கீரணத்தம், கொண்டையம்பாளையம், அத்திப்பாளையம், வெள்ளமடை, அக்ரஹார சாமக்குளம், வெள்ளானைப்பட்டி, அத்திப்பாளையம், கள்ளிப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களும், நகரங்களும் இணைந்த ஊராட்சிப் பகுதிகளும் உள்ளன. இவற்றைத் தவிர ஆனைகட்டி, பாலமலை போன்ற வனப் பகுதிகளில் உள்ள 20க்கும் மேற்பட்ட ஆதிவாசி மலைக் கிராமங்களும் இந்தத் தொகுதியில் அடங்கும்.

கவுண்டம்பாளையம் தொகுதியில் கவுண்டர்கள், ஒக்கலிக கவுடர்கள், நாயக்கர்கள், அருந்ததியர், பழங்குடியின சமூகங்களைச் சேர்ந்தவர்கள் அதிக அளவிலும், பிற சமூகங்களைச் சேர்ந்தவர்கள், வெளிமாநிலத்தவர் குறிப்பிடத்தக்க அளவிலும் வசிக்கின்றனர்.

தொழில் முக்கியத்துவம்

தொகுதியில் வேளாண்மை முக்கியத் தொழிலாக இருந்தாலும், இயந்திர உதிரிபாகங்கள், பம்ப்செட், மோட்டார் தயாரிப்புகளில் ஈடுபட்டிருக்கும் பெரிய, குறு, சிறு தொழிற்சாலைகளும் ஏராளமாக இயங்கி வருகின்றன. அத்துடன் இந்தத் தொகுதிக்குள்பட்ட கணுவாய், தடாகம் சுற்றுவட்டாரங்களில் நூற்றுக்கணக்கான செங்கல் சூளைகளும் செயல்பட்டு வருகின்றன.

கோவையின் பல மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் இந்தத் தொகுதியில் உள்ள சரவணம்பட்டியை மையமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. இதனால் தொழில் முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாகவும் இது உள்ளது. அண்ணா பல்கலைக்கழக கோவை மண்டல மையம், பாரதியார் பல்கலைக்கழகம், ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயம் உள்ளிட்ட ஏராளமான கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன.

வாக்காளர் விவரம்

ஆண்கள் - 2,29,997, பெண்கள் - 2,30,908, மூன்றாம் பாலினத்தனவர் - 95, மொத்தம் - 4,61,000.

கடந்த தேர்தல்கள்

இந்தத் தொகுதியில் தேர்தல் நடைபெற்ற 2 முறையும் அதிமுகவே வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2011 தேர்தலில் விளாங்குறிச்சி ஊராட்சித் தலைவராக இருந்த வி.சி.ஆறுக்குட்டி அதிமுக சார்பில் போட்டியிட்டார். இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் சுப்பிரமணியனை விட 69,260 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். மீண்டும் 2016 இல் நடைபெற்ற தேர்தலில் வி.சி. ஆறுக்குட்டியே அதிமுக சார்பில் நிறுத்தப்பட்டார். இவரை எதிர்த்து காளப்பட்டி பேரூராட்சியின் தலைவராக இருந்த பையாக் கவுண்டர் (எ) ஆர்.கிருஷ்ணன் போட்டியிட்டார். இந்தத் தேர்தலில் 8,025 வாக்குகள் வித்தியாசத்தில் வி.சி.ஆறுக்குட்டி மீண்டும் வெற்றி பெற்றார்.
 
கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள்

கடந்த 5 ஆண்டுகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. புதிய சாலை, சாலை மறு சீரமைப்புப் பணிகள், குடிநீர்த் தொட்டிகள், மழைநீர் வடிகால் வசதி, தெருவிளக்கு, பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள், தடுப்பணைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் கட்டப்பட்டுள்ளன.

கோவை - மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக கவுண்டம்பாளையம், ஞானாம்பிகா மில் சந்திப்பு, பெரியநாயக்கன்பாளையம் பகுதிகளில் மேம்பாலப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் ஆனைகட்டி வனப்பகுதியில் உள்ள சேம்புக்கரை, தூமனூர் கிராமங்களுக்கு மின்சார வசதி அளிக்கப்பட்டது. ஆதிவாசிகளுக்கு பசுமை வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனைகட்டியில் ஆதிவாசி மாணவர்களுக்காக தனியாக தொழிற்பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள உயர்நிலைப் பள்ளி தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை பேருந்து செல்லாத பல கிராமங்களுக்கு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. குடிநீர் பிரச்னையைத் தீர்க்க கவுண்டம்பாளையம் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. தொகுதியில் உள்ள குளம் குட்டைகள், ஏரிகள் தூர்வாரப்பட்டுள்ளன.

தொகுதியின் பிரச்னைகள்

தொகுதிக்குள்பட்ட தடாகம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செங்கல் சூளைகளால் ஏற்பட்டு வரும் சூழல் மாசுபாடு முக்கிய பிரச்னையாக உள்ளது. வனப் பகுதியையொட்டியும், யானைகள் வழித்தடத்தையொட்டியும் தொகுதியின் பல கிராமங்கள் இருப்பதால் மாவட்டத்தில் மனித - விலங்கு மோதல்கள் அதிகம் நடைபெறும் பகுதிகளில் ஒன்றாக இது உள்ளது. வன விலங்குகளால் வேளாண் பயிர்கள் சேதப்படுத்தப்படும் பிரச்னைக்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

மாநகராட்சியில் இணைந்த புதிய பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளில் சுணக்கம் இருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர். குடிநீர் மேம்பாட்டுக்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் விநியோகத்தில் நிலவும் குறைபாடுகளால் குடிநீர் தட்டுப்பாடு பிரச்னை தொகுதி முழுவதிலும் நிறைந்துள்ளது. அவிநாசி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்க்க வேண்டும் என்பது தொடர்ந்து கோரிக்கையாகவே உள்ளது.

கோவை மாவட்டத்தில் மழைக் காலங்களில் வெள்ளம் செல்லக் கூடிய நதிகளில் ஒன்றான கெளசிகா நதி இந்தத் தொகுதியில்தான் உள்ளது. நகரமயமாதலால் இந்த நதி அழிந்துள்ளது. இந்த நதியை மீட்டெடுத்து, அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் இணைக்க வேண்டும் என்பது இப்பகுதி விவசாயிகளின் தொடர் கோரிக்கையாக உள்ளது.

மேலும் மென்பொருள் நிறுவனங்கள், மோட்டார், பம்புசெட், கிரைண்டர், உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழில் நிறுவனங்கள் இத்தொகுதியில் அதிகம் இருப்பதால் தொழில்முனைவோர்களை பாதுகாக்கவும், தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும் எதிர்பார்ப்புகள் அதிகமாகவே உள்ளன. இந்த பகுதியில் சாலை வசதிகளை மேம்படுத்த புறவழிச்சாலை திட்டத்தை விளைநிலங்கள் வழியாக மேற்கொள்ள அரசு அறிவித்துள்ளது. ஆனால், இந்தத் திட்டத்துக்கு விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். மலைவாழ் மக்களுக்கு தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் திட்டங்களை உருவாக்க வேண்டும் என்பதும் மக்களின் கோரிக்கை.

போட்டியிட வாய்ப்புள்ள கட்சிகள்

அதிமுக 2 முறையும் வென்ற தொகுதி என்பதால் கூட்டணிக் கட்சிகளுக்கு கொடுக்க அதிமுக விரும்பாது. எனவே இந்த முறையும் அதிமுகவும், திமுகவும் நேரடியாக மோதக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு முறை தோல்வி அடைந்திருந்தாலும் 2011 தேர்தலைக் காட்டிலும் 2016 தேர்தலில் குறைந்த வித்தியாசத்தில் திமுக தோல்வி அடைந்திருப்பதால் இந்த முறை கவுண்டம்பாளையத்தைக் கைப்பற்றியே தீர வேண்டும் என்ற வேட்கையில் திமுக உள்ளது.

தொகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக செய்துள்ள பணிகளை பட்டியலிட்டு கட்சி மேலிடத்தில் பேசியுள்ள வி.சி.ஆறுக்குட்டி எம்எல்ஏ, இந்த முறையில் தனக்கே சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பிரசாரத்தைத் தொடங்கியிருக்கிறார். அதேநேரம் தற்போது கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏவாக இருக்கும் பி.ஆர்.ஜி.அருண்குமார் கவுண்டம்பாளையம் தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டுகிறார். திமுகவை பொறுத்தவரை கடந்த முறை போட்டியிட்டு தோல்வி அடைந்த பையாகவுண்டர் (எ) கிருஷ்ணன், அறிவரசு, சுப்பிரமணியம், பத்மாலயா சீனிவாசன் உள்ளிட்டோரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இந்தத் தொகுதியை எதிர்பார்த்திருக்கிறது. அவ்வாறு கிடைத்தால் மாவட்டச் செயலர் ராமமூர்த்தி  போட்டியிட வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது.

வெற்றி வாய்ப்பு

கிராமப்புறங்களில் அதிமுக, திமுக என இருகட்சிகளும் சமபலத்துடன் இருந்தாலும், நகர்ப்புறங்களில் மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், தேமுதிக, அமமுக போன்ற கட்சிகளுக்கும் கணிசமான பலம் உள்ளது. புதிய வாக்காளர்களாக உள்ள இளைஞர்களும், மகளிர் சுய உதவிக் குழுக்களும் வெற்றியின் பங்கில் முக்கிய இடத்தை வகிக்கின்றனர்.

கடந்த முறை 8,025 வாக்குகளில் தோல்வி அடைந்த திமுகவின் தொகுதி பொறுப்பாளரான பைபயா கவுண்டர் (எ) கிருஷ்ணன், தேர்தலுக்கான பணிகளை முன்கூட்டியே தொடங்கிவிட்டார். கரோனா காலத்தில் தொகுதிக்குள்பட்ட இடங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டது மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.அதேநேரம் அரசுக்கு எதிரான அலை மக்களிடையே இல்லை என்பதால் அதிமுக இந்தத் தொகுதியில் திமுகவை முந்துகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com