மன்னார்குடி: சசிகலா போட்டியிடுவாரா?

மன்னார்குடி தொகுதியில், இதுவரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 6 முறையும், திமுக 4 முறையும், காங்கிரஸ் 3 முறையும், அதிமுக 2 முறையும் வென்றுள்ளன.
மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில் ராஜகோபுரம்
மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில் ராஜகோபுரம்

தொகுதியின் சிறப்பு: திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், மன்னார்குடி,  திருத்துறைப்பூண்டி, நன்னிலம் ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. கடந்த 2006 ஆம் ஆண்டு வரை இந்த நான்கு தொகுதிகளில் மன்னார்குடியைத் தவிர மற்ற 3 தொகுதிகளும் தனித் தொகுதிகளாக இருந்தன. 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற தொகுதிகள் மறு சீரமைப்புக்குப் பின்னரும் இத்தொகுதி பொது தொகுதியாகவே தொடர்கிறது.

வாக்காளர் எண்ணிக்கை : ஆண்கள் - 1,25,304. பெண்கள்- 1,33,118. மூன்றாம் பாலினத்தவர் 11. மொத்த வாக்களர் 2,58,433.

நில அமைப்பு: தஞ்சை, நாகை, மயிலாடுதுறை ஆகிய 3  மக்களவைத்  தொகுதியின்  மையப்பகுதியாக உள்ளது. இதேபோன்று, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நன்னிலம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளின் எல்லையைத் தொடும் வகையில் அமைந்துள்ளது மன்னார்குடி  சட்டப்பேரவைத் தொகுதி.  

கடந்த 1869 ஆம் ஆண்டு ஆங்கில அரசால் மாதிரி நகராட்சி என தொடங்கப்பட்டு 150 ஆண்டுகளை கடந்த பழமையான மன்னார்குடி நகராட்சியின் 33 வார்டுகளையும், மன்னார்குடி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 51 ஊராட்சிகளையும், நீடாமங்கலம் பேரூராட்சி பகுதிகளையும், நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட  49  ஊராட்சிகளையும், கோட்டூர் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட (49 ஊராட்சிகளில்) 9 ஊராட்சிகளையும் உள்ளடக்கி  மொத்தம்  109  ஊராட்சிகளைக் கொண்ட தொகுதியாக உள்ளது மன்னார்குடி சட்டப்பேரவைத் தொகுதி.

சமூகம்,  தொழில் அமைப்பு: முழுக்க முழுக்க விவசாயத்தை மட்டும் சார்ந்த பகுதி. விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் நிறைந்த தொகுதி. வீட்டில் குறைந்தது ஒருவர் சிங்கப்பூர், லண்டன், ஆஸ்திரேலியா, மலேசியா மற்றும் அரபு நாடுகளில் பல்வேறு துறைகளில் வேலைப் பார்த்து வருகின்றனர்.

இங்கு, கள்ளர் இனத்தவர் 35 சதவீதமும், அகமுடையர் 34 சதவீதமும், முத்தரையர் 11 சதவீதமும், வெள்ளாளர் மற்றும் யாதவர் 8 சதவீதமும், ஆதிதிராவிடர் 4 சதவீமும், மற்ற சமூகத்தினர் 5 சதவீதமும், முஸ்லீம் மற்றும் கிறிஸ்துவர்கள் 3  சதவீதமும் உள்ளனர்.

வேட்பாளரின் வெற்றி, தோல்வியை நிர்ணயம் அளவு அடர்த்தியான சமூகமாக  முத்தரையர் சமுதாயம் இருந்தாலும், அவர்களிடையே சாதி ரீதியான ஒன்றிணைப்பு இல்லை.  அச்சமூகத்தினர் பல்வேறு அரசியல் கட்சிகளில் பொறுப்பிலும், உறுப்பினர்களாகவும் உள்ளனர். இதனால், தொகுதியின் தேர்தல் முடிவு வேட்பாளர் அல்லது அரசியல் கட்சியை சார்ந்ததாகவே மட்டும் உள்ளதே தவிர, சமூகம் சார்ந்ததாக இல்லை.

கடந்த காலங்களில் வென்றவர்கள், தோற்றவர்கள்:

1957 - டி.எஸ். சாமிநாத உடையார் (காங்கிரஸ்); சிவானந்த சாளுவர் (சுயேச்சை)
1962 - டி.எஸ். சாமிநாத உடையார் (காங்கிரஸ்); நாராயணசாமி (திமுக)
1967 - டி.எஸ். சாமிநாத உடையார் (காங்கிரஸ்); நாராயணசாமி (திமுக)
1971 - கே. பாலகிருஷ்ணன் (திமுக); சாமிநாத உடையார் (காங்கிரஸ்)
1977 - எம்.அம்பிகாபதி (இந்திய கம்யூனிஸ்ட்); பாலகிருஷ்ணன் (திமுக)
1980 - எம். அம்பிகாபதி (இந்திய கம்யூனிஸ்ட்); கோபாலசாமி (காங்கிரஸ்)
1984 - எஸ். ஞானசுந்தரம் (அதிமுக); பி. ராமலிங்கம் (கம்யூ.)
1989 - கே. ராமசந்திரன் (திமுக); வீரசேனன் (கம்யூ.)
1991 - கே. சீனிவாசன் (அதிமுக); வீரசேனன் (கம்யூ.)
1996 - வை. சிவபுண்ணியம் (இந்திய கம்யூ.); கே.கலியபெருமாள் (அதிமுக)
2001 - வை. சிவபுண்ணியம் (இந்திய கம்யூ.); எஸ். ஞானசேகரன் (பாஜக)
2006 - வை. சிவபுண்ணியம் (இந்திய கம்யூ.); ஆர். காமராஜ் (அதிமுக)
2011-  டி.ஆர்.பி. ராஜா (திமுக); சிவ. ராஜமாணிக்கம் (அதிமுக)
2016 - டி.ஆர்.பி. ராஜா (திமுக); எஸ். காமராஜ் (அதிமுக)

இதுவரை மன்னார்குடி தொகுதியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 6 முறையும், திமுக 4 முறையும், காங்கிரஸ் 3 முறையும், அதிமுக 2 முறையும் வென்றுள்ளன.

அரசியல் கட்சிகளின் செல்வாக்கு:

திமுக மற்றும் அதிமுகவுக்கு தொகுதிக்கு உள்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் கிளை  கட்டமைப்புகள் வலுவாக உள்ளன. இதில், ஒரு சில பகுதிகளில் திமுக கூடுதல் வலிமையுடன் உள்ளது. கம்யூனிஸ்ட்டுகளுக்கு குறிப்பிட்ட சில ஊரகப் பகுதிகளில் சிறப்பான கட்டமைப்புகள் உள்ளன.

காங்கிரஸ், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள்,  தேமுதிக, பாஜக, பாமக,  தமாகா ஆகிய கட்சிகளின் தனிப்பெரும் செல்வாக்கு மிகப்பெரிய அளவில் இல்லை. நாம் தமிழர் கட்சிக்கும் மிகக் குறைந்த செல்வாக்கே உள்ளது. மக்கள் நீதி மய்யத்தின் செயல்பாடு குறிப்பிடத்தக்க வகையில் இங்கு இல்லை.

சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரின் சொந்த ஊர் என்ற அடிப்படையில், திமுக, அதிமுக கட்சிகளுக்கு இணையான செல்வாக்கு இங்கு அமமுகவுக்கு கிடைத்தது. ஆனால், சசிகலாவின் சகோதரர் வி. திவாகரன், அண்ணா திராவிடர் கழகம் என்ற தனிக் கட்சியைத் தொடங்கியது, கரோனா காலத்தில் டிடிவி தினகரனின் செயல்பாடு குறைந்தது உள்ளிட்ட காரணங்களால் அமமுகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டிருந்தது. தற்போது, சசிகலா  வருகைக்குப் பின்னர் அக்கட்சியில் மீண்டும் பரபரப்பான அரசியல் நடவடிக்கைகளை காண முடிகிறது.

கட்சிகளின் வெற்றி வாய்ப்புகள்:

அதிமுக மற்றும் திமுக வலுவான நிலையில் உள்ளன. திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இக்கட்சிகளுக்கு உள்ள கிளை கட்டமைப்புகளை திமுக கூட்டணிக்கு பலமாகக் கருதலாம். ஆனால், அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளுக்கு இங்கு மிகப்பெரிய அளவிலான கிளைவாரியான கட்டமைப்புகள் இல்லாததால், அதிமுக முழுக்க, முழுக்க தனது சொந்த பலத்திலேயே களம் காண வேண்டிய நிலையில் உள்ளது.

இத்தொகுதியில், அமமுக மீண்டும் புத்துணர்வு பெற்று களம் காணும்போது, அது அதிமுகவுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். காரணம், அமமுக பிரிக்கும் வாக்குகள் பெரும்பாலும் அதிமுகவுக்குக் கிடைக்க வேண்டிய வாக்குகள் என்பதால், அமமுகவின் வியூகத்தைக் கடக்க கூடுதல் கட்டாயம் அதிமுகவுக்கு உள்ளது. திமுகவின் வேட்பாளரைப் பொறுத்துதான் இத்தொகுதியில் திமுகவின் வாக்கு அமமுகவிற்கு மடைமாறப் போகிறதா? அல்லது அமமுகவின் வாக்கு திமுகவிற்கு மடைமாறப் போகிறதா என்பதை அறிய முடியும். 

திட்டங்கள்-   நிறைவேறியதும், நிறைவேறாததும்:

கடந்த 5 ஆண்டுகளில், மன்னார்குடி தொகுதியில் மிகப்பெரிய திட்டங்கள் ஏதும் நிறைவேற்றப்படவில்லை. இத்தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா திமுகவைச் சேர்ந்தவர் என்பதால் அதிமுக இத்தொகுதியைப் புறக்கணிப்பதாக திமுகவும், கடந்த 10 ஆண்டுகளில் தொகுதியின் மேம்பாட்டுக்காக எந்தத் திட்டத்தையும் டி.ஆர்.பி. ராஜா கோரி பெறவில்லை என அதிமுகவும் பரஸ்பரம் பிரசாரம் செய்கின்றன.

எதிர்பார்ப்புகளும், பிரச்னைகளும்:

மன்னார்குடியில் புதைச் சாக்கடைத் திட்டம், புறவழிச்சாலை, கர்த்தநாதபுரம் அகலப்பாலம், அரசு பாலிடெக்னிக் கல்லூரி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, விவசாயம் சார்ந்த தொழில் நிறுவனம், விவசாயக் கல்லூரி, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், ஹரித்ராநதி தெப்பக்குளத்தில் படகு சவாரி, வடுவூர் பறவைகள் சரணாலயம் மேம்பாடு, நீடாமங்கலத்தில் ரயில்வே மேம்பாலம்,  தொழிற்பேட்டை,  இருவழிச்சாலைத் திட்டம், மன்னார்குடி மற்றும் நீடாமங்கலத்தில் ஒருங்கிணைந்த அரசு அலுவலக வளாகம் ஆகியவை மக்களின் நீண்டகால எதிர்பார்புகளாக உள்ளன.

இவை தவிர, வடுவூரில் மத்திய அரசின் நிதி பங்களிப்பில் கட்டப்பட்டு நிதி பற்றாக்குறையால் முழுமை பெறாமல் உள்ள சர்வதேச உள்விளையாட்டு அரங்கத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து, உள்விளையாட்டரங்கத்தை முழுமைப் பெறச் செய்ய வேண்டும் என்பதும் இத்தொகுதி மக்களின் கோரிக்கைகளில் ஒன்றாக உள்ளது.
 
போட்டியிட வாயப்புள்ள கட்சிகள்:

மன்னார்குடி தொகுதியில் அதிமுக, திமுக, அமமுக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளின் சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள். எத்தனைக் கட்சிகள் களம் கண்டாலும், இத்தொகுதியில் திமுக, அதிமுக, அமமுக ஆகிய 3 கட்சிகளுக்கு இடையேதான் கடுமையான போட்டியிருக்கும். தமிழகத்தில் மும்முனை போட்டி ஏற்படும் தொகுதிகளில் இத்தொகுதியும் ஒன்றாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

முக்கியத்துவம் பெறும் விமான சேவை

தேர்தல் வாக்குப்பதிவு காலத்தில், சிங்கப்பூர், மலேசியா போன்ற அயல்நாடுகளில் இருந்து கெடுபிடி இல்லாமல் விமான சேவை இயக்கப்பட்டாமல் மட்டுமே, அங்கு தங்கி பணியாற்றி வரும் மன்னார்குடி தொகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் ஊருக்குத் திரும்பி வந்து, தங்கள் வாக்கைப் பதிவு செய்ய முடியும். இல்லையெனில், பதிவாகாத வாக்குகளின் எண்ணிக்கை அதிகம் கொண்ட தொகுதி மன்னார்குடி தொகுதியாகதான் இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com